Monday, September 21, 2009

குங்குமப்பூவே-கொஞ்சும் புறாவே

குங்குமப்பூவே-கொஞ்சும் புறாவே!

இவள் நாடகாசிரியரானதே சற்றும் எதிர்பாராத விபத்து.உலகிலேயே பிடிக்காத ஒரு சமாச்சாரம் உண்டென்றால் அது நாடகம்தான் என்பது,குழந்தைக் காலத்தில் இவளுள் ஊறிப்போன ஒரு மாயை.பின் எப்படி இவள் நாடகாசிரியரானாள்? wait, அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?[ஞானே படபடப்பு மாதங்கி, இதில் நீங்களும் படபடத்தால் ”காச் மூச் கபர்தார்” ,கேஸ்தான்,பின் என்னாகும்? அந்தர்தியானமாகி விடுவேனாக்கும்]so,பொறுமை, பொறுமை, o.k. மேடை நாடகத்துறையை விட்டு முற்றாக விலகிவிட்டாலும் கூட, இன்றும் வானொலியிலிருந்து சிறப்பு நாடகங்கள் எழுத அழைப்புவரும்போது,மிக சந்தோஷமாக எழுதிக்கொடுக்க முடிகிறது.ஒன்றுமட்டும்நிச்சயம்.அறுதியிட்டுக் கூறமுடியும்.
எழுத்துதான் இவள் இலக்கு.அப்படித்தான் இவளும் நம்புகிறாள். அப்படியானால் அன்று நடந்தது என்ன? என்னதான் நடந்ததாம்?
[secondary two]அதாவது உயர்நிலை 2ம் படிவத்தில் படித்துக்கொண்டிருந்தபோது,நெற்றியில் கோபி சந்தனக்குறியும், இரட்டைச்சடையுமாக,பள்ளிச்சீருடையில் , அந்தப் பெண்ணுக்கு பெரிய லட்சியங்களெல்லாம் கிடையாது.ஆனால் பள்ளி மிகவும் பிடித்தமான இடம். ஆனால் அந்த ஆண்டு கலைநிகழ்ச்சிக்கு, ஒரு இந்திய நடனத்துக்கு, இவளும் ஷேகரும் தேர்வு செய்யப்பட்டபோது, இருவருமே தேள் கொட்டினாற்போல் துடித்துப்போனார்கள். இவளின் நம்பர் ஒன் எனிமி ஷேகர்.

அவனுக்கும் அப்படியே. 2 எனிமிகளும் எங்காவது டான்ஸ் ஆடுவார்களா சார்? ஆனால் அந்த அருந்தவ மகா புண்ணியத்தை செய்தவர்கள் மிஸ்டர் வெங்கா. வும் மிஸ் பாப்பாத்தியும் தான்.ஏனென்றால் அவர்கள் தான் கலை நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்கள்.மிஸடர் வெங்கா ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டே வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருந்தார்,
ஆங்கிலப் புகழ்பெற்ற வெளிநாட்டு இதழ்களில் எல்லாம் அவரது கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தது.அற்புதமான அவரது எழுத்தாற்றலில் பள்ளியே பெருமை கொண்டிருந்தது.தமிழ்நேசனில் இவளது மேனாட்டுத்தமிழறிஞர் கட்டுரை வெளிவந்த அன்று வகுப்புக்கேத் தேடிவந்து, who is kamaladevi here? என்று Mr.ngகிடம்கேட்டுஅவளை மனதாரப் பாராட்டியவர். ஆனால் அவர் பேசும் தமிழ் வேறுமாதிரி. ” ரொம்ப நன்னா எழுதறே” என்பார். ”நன்றாக” என்று சொல்ல மட்டார்.இப்படி பல சொற்கள் அவர் பேசும்போது திருத்தணும் என்று யோசித்ததுண்டு.ஆனால் தைரியம் தான் வரவில்லை.
அதை விட கோபமூட்டும் கொடுமை ஒன்றையும் அவர் செய்தார் .அவளைப் பார்க்கும்போதெல்லாம் ”புதுசா என்ன எழுதிண்டிருக்கே மலயாளத்துக்குட்டி,” என்பார். பாருங்கள்.!

அப்பொழுது இவளுக்கு 14 வயது.உயிரினும் இனிய தோழி tan siew kimமோடு நடந்து வரும்போது, இவள் மலையாளியே என்றாலும் கூட, சீனத்தோழியின் முன்னால், மலையாளத்துக்குட்டி, என்றழைப்பது எந்த வகையில் நியாயம்?
பிறகு இவர் என்ன படித்து, என்ன கிழித்து, என்ன லட்ஷணம்? இந்த லட்ஷணத்தில்தான் 2 எனிமிகளை தமிழ் டான்ஸுக்கு தேர்வு செய்தார் வெங்கா சார்! என்ன பாடல் தெரியுமா? சந்திரபாபு பாடிய, ”குங்குமப்பூவே, கொஞ்சும் புறாவே, தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே?”என்ற பாடல்தான். அப்பொழுதே அது பழைய பாடல்தான்,என்றாலும் மிஸ்டர் வெங்காவுக்கு மிகவும் பிடித்தமான பாடலாம்.வகுப்பு முடிந்து ஒரு மணி நேரம் ஒத்திகை நடக்கும்.மிஸ்.பப்பாத்தி ஸ்டெப்ஸ் வைத்து ஆடவும் வளையவும் எல்லாம்,ஷேகருக்கும் இவளுக்கும் கற்றுக் கொடுத்தார். 3வது நாள் மிஸ்டர் வெங்காவும் கற்றுக்கொடுப்பதில் இணைந்து கொண்டார். ஒரு கட்டத்தில், ”சந்தனப்பொட்டும் தாவணிக்கட்டும் சலசலக்கையிலே,என்மனம் தொட்டு ஏக்கமும் தொட்டு என்னமோ பண்ணுதடி!” என்ற வரிகளுக்கு, வெங்கா சார் டீச்சரின் பின்னால் நின்றுகொண்டு அவரின் இடுப்பை பிடித்துக்கொள்ள, டீச்சர் அப்படியே அவரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, போக்கிரி போக்கிரி ராஜா, போதுமே போதுமே ராஜ்ஜாஆ, என்ற வரிகளில் , மெய்ம்மறந்து ஆடிய காட்சி கண்கொள்ளா காட்சி. அடுத்த கணம் இவளுக்கே வெட்கமாகப் போய்விட்டது.இவள் ஷேகரைப்பார்க்க ஷேகரும் இவளைப்பார்த்தபோது, இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது,சண்டை, பகை எல்லாமே மறந்துபோய் ஷேகர் இவளிடம் மெல்லிய குரலில் கூறினான்.they are in love!

இவள் அதிர்ந்து போனாள்.வெங்கா சார் மணமானவர்.ஒரு சின்னக்குழந்தை கூட உண்டு.எப்படி மிஸ் பாப்பாத்தியை இவர் லவ் பண்ணலாம்.???அப்பாவி வசந்தன் சாரை வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் இதுதானா? தக்‌ஷணமே சாரையும் டீச்சரையும் இவளுக்கு பிடிக்காமல் போய்விட்டது. ப்ளிட்ஸ் வைத்த ஸ்கர்ட்டும், வெள்ளை பஃப் வைத்த ப்ளவுஸுமாய் , டீச்சர் சுழன்றுஆடிக்கொண்டே மதிமயங்கி, அப்படி ஒரு உல்லாசமாக ஆடுவார்.வெங்கா சார் அவர் கைகளால் சுழற்றிவிட, மீண்டும் டீச்சர் சாரின் கைகளில் சாய்வார். குப்பென்று கோபமும் வெட்கமுமாய் இவள் ஷேகரிடம் கூறினாள்.
”நீ ஒருபோதும் என் இடுப்பைத்தொடக்கூடாது!” பட்டென்று ஷேகரும் கூறினான்.”நீயும் என் நெஞ்சில் சாயக்கூடாது.” பின் என்ன ?we are good students., நாங்களொன்றும் bad students அல்ல.ஆனால் டீச்சரின் ஸ்டெப்ஸ்களிலிருந்து தப்புவதெப்படி?
அந்தக் கவலையே வேண்டியிருக்கலை.பாடல் ஆடிக்காட்டியதும் ,டீச்சரும் சாரும்,சீனியர் ஸ்டூடண்ட்சிடம் இவர்களை விட்டுவிட்டு காணாமல் போய் விடுவார்கள்.ஒவ்வொரு நாளும் டீச்சரும் சாரும் எல்லையில்லா மகிழ்வோடு

[தங்கமே உன்னைக்கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே”என்ற வரிகட்குஆடும்போது அவர்கள் முகத்தில் மின்னும் பரவசத்தை மட்டும் வெட்கம் வெட்கமாய் ரசித்ததை மறக்கவே முடியவில்லை.] பாடலின் ஒவ்வொரு வரியையும் தமிழாசிரியரிடம் கேட்டுக்கேட்டு தெளிவுபெற்று,எப்படியோ ஒருமாதிரி, ஷேகரும் இவளுமே நடனத்தை வடிவமைத்தார்கள். சத்யமாயிட்டும் இடுப்பும் நெஞ்சும் தொடப்படவில்லை. நிகழ்ச்சி அன்று இவர்களின் குங்குமப்பூவே நடனத்துக்கு 2ம் பரிசு கிடைத்தபோது, ”மலையாளத்துக்குட்டி, பள்ளி மானத்தைக்காப்பாற்றிவிட்டாயே” என்று வெங்கா சார் தேடி வந்து பாராட்டியபோது, ஷேகர் முகத்தித் திருப்பிக்கொண்டான். பின்னாளில் இவள் நாடகப் பயிற்சியிலிருந்த போதுதான், அன்று theatrical signல் மிக முக்கியமான dramatic textல் , formal presentaation codeஐ த்தான், அது பற்றிய துளி அறிவு கூட இல்லாமலே, ஷேகரும் இவளும் அந்த சின்ன வயதிலேயே வடிவமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஏனோ இன்றும் பெருமிதமே.

கலையறிவு என்பது எங்கிருந்து வருகிறது?ஒவ்வொரு இலக்கியவாதியுமே அடிப்படயில் கலைஞனே>ஆனால் அந்தக்கலைஞர்களும் உணர்வால் குழந்தைகளே?!!!மனதால் குழந்தைகளே,வாழ்வியல் பார்வையில்,அதீத காதலோடு மானுட நேசத்தை கொண்டாடும் அபூர்வர்களே?அப்படி எத்தனையோ பேர் நம்மிடையே உண்டு.அப்படி ஒரு கலைஞனை
எங்கு சந்தித்தாலும் நாமும் தான் கொண்டாடுவோமே!.என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது?
.

3 comments:

 1. V, Dhivakar - venkdhivakar@gmail.com


  கமலத்தின் எழுத்தின் கவர்ச்சி வர்ணிக்கமுடியாதது.

  கமலத்தின் எழுத்துப் பூக்களை கோர்த்துக் கொடுக்கும்போது அதன் இன்பம் மேலும் கூடுகிறது. தேன் அதிகம் சுரப்பது போல ஒரு பிரமை கூட தோன்றுகிறது.
  வாழ்த்துகள்

  திவாகர்

  ReplyDelete
 2. PENNESWARAN KRISHNA RAO
  penneswaran@gmail.com  உண்மையிலேயே ஒவ்வொரு நினைவுப் பூவாக எடுத்துத் தொடுத்துக் கொடுக்கிறார் கமலம் அம்மையார்.

  இதுவே தனி இலக்கியமாகும் போல இருக்கிறதே.

  இந்தப் பூச்செண்டு மடல்களையே ஒரு தொகுப்பாக்கித் தரலாம். பெரிய்ய்ய்ய் பூச்செண்டாக.

  பென்னேஸ்வரன்

  ReplyDelete
 3. Innamburan Innamburan
  innamburan@googlemail.com

  தேன் சிந்தும்; இனிக்கும். தாமரையொன்று மலர்ச்செண்டளிக்க, மேலும் தேன் சிந்துகிறது.
  இன்னம்பூரான்

  ReplyDelete