Saturday, June 27, 2009

கூத்துப்பட்டறையில் - 16 நமஸ்காரம்! போய் வரவா?!!!

நமஸ்காரம்! போய் வரவா?!!!

"நலமாக போய் வாருங்கள்,அம்மா!” என்று இசை ஆசிரியரும்,களறி ஆசிரியரும் விடைபெற்றுச்செல்ல, மாணவர்கள் அத்தனைபேரும் வட்டமாக இவளைச்சுற்றி அமர்ந்து கொண்டு பேசினார்கள், பேசினார்கள். இவள் சேச்சியாய் லட்ஷணமாக , அவர்களை உபதேசித்தாள். விநாயகத்தை திட்டக்கூடாது!முருகனும் அப்புக்குட்டனும் சண்டை போடக்கூடாது. சந்திராவின் மகன் வளர்ந்து பெரியவானாகும் வரைதான்,பிறகு சந்திரா உச்சாணிக்கொம்பில் வாழலாம் ,இல்லைய ?. பசுபதி! கூத்துப்பட்டறையின் சட்டாம்பிள்ளைதான், ஆசிரியருக்கு அடுத்த ஸ்தானமே பசுபதிக்குத் தான்! யாரில்லையென்றார்கள்! அதற்காக என்ன செய்ய வேண்டும்? விநாயகத்தின் பரீட்ஷை[பி.ஏ]சமயத்தில் அவனுக்கு படிக்க நிரம்ப நேரம் கொடுக்க வேண்டும் .
பசுபதி! சும்மா சும்மா! பிள்ளைகளை திட்டக்கூடாது. யாரையும் யாரையுமே திட்டக்கூடாது.புரிந்ததா? பசுபதி? “ சொல்லும்போதே வருத்தம் மண்டிக்கொண்டு வந்தது.
இல்லையே, சேச்சி, ஞான் யாரையுமே தேவையில்லாமல் திட்டுவதில்ல, இவன்கள் தான்,--
ரவிவர்மாவின் பி.எச் டி. பேப்பர் முடிந்ததும் எனக்கு எழுத வேண்டும்!
முருகன்,முருகனுக்கு ஆங்கிலம் பேச 'crash course'ஐ கற்பிப்பதாக இவள் ஏற்றிருந்தாள், ஆனால் நேரமின்மையால் முடியவே இல்லை.

அந்தக்குற்ற உணர்வில், முருகனுக்குப் பயிற்றுவிக்க வேண்டியது நிண்டெ கடமை என்று பசுபதியிடம் வேண்டுகோள் விடுத்தாள். சரி சேச்சி, சரி சேச்சி,!என்று மட்டுமே பசுபதி தலை ஆட்டினான். திடீரென்று வினாயகம் கேட்டான், ‘சேச்சி, இனி இங்கே வரவே மாட்டீர்களா? உடனே இவள் பேச்சை மாற்றினாள். ”நிங்ஙளில் யாராவது பாடுங்களேன்.--
அப்புக்குட்டன்[புரிசை கண்ணப்பதம்பிரானின் பேரன்],2 வரி பாடினான்., முருகன் உற்சாகமாக பாட, விநாயகமும் ஏதோ பாட, யாருக்குமே சூழ்நிலை ரசிக்கவில்லை. எப்படிப் பேச்சை தொடர என்றும் தெரியவில்லை. இவள் எழுந்தாள். நாளை பிரயாணம் இல்லையா? எல்லோருமே போய்விட்டார்கள். சந்திரா மட்டும் இவளோடு தங்கிவிட்டாள்.சந்திரா நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தாள்.
கண் மயங்கியது எப்பொழுது என்றே தெரியவில்லை. டாண்’ என்று மணியடித்தாற்போல் பழக்க தோஷத்தில்,கண்விழித்தபோது சமையல் அம்மா எழுந்து விட்டார். குளித்து பூஜை முடித்து வெளியே வந்தபோது சந்திராவும் எழுந்து விட்டாள்.
சாய வேண்டுமா? என்று சமையல் அம்மா கேட்க, இப்போது வேண்டாம் என்றிட்டு,விளக்கைப்போட்டு, சந்திராவையும் கூட்டி, அந்த 3 மாடியையும் சுற்றி வந்தாள். கொட்டிவாக்கத்தில் சுற்றிலும் பச்சைப்பசேலென்று, செடி கொடிகளும், கொப்பும் கிளையுமாக
உயரமான விருட்ஷங்களுமாய் கூத்துப்பட்டறை சூழலே என்ன அழகு?
2 மாடியும் இட்டாலியன் மார்பிள் பதித்து, எட்டாச் பாத்டப்புமாய் ஒவ்வொரு அறையும் தான் என்ன விசாலம்!

இசைப்பயிற்சிக்கு ஒர் அறை, ,உடல் பயிற்சி, களரி பயிற்சி,யோகா, தியானம், நாடக வகுப்புக்கள், சுவரொட்டிகள் தயாரிப்பு, என எல்லாமே மூன்றாம் மாடியில்,கீழே அலுவலக அறை கூட முற்றிலும் வேறுமாதிரியான பாணியில், இசைக்கருவிகள் அறை,
என என்னமாய் தேர்வு செய்திருக்கிறார் முத்துசாமி சார் இந்த இடத்தை! இவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, பொழுது பள பள வென்று விடிந்துவிட்டது. வானம் உல்லாசமாய் விரிந்திருந்தது. எல்லோருமே வந்துவிட்டார்கள், இவள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டாள். எக்காரணத்தை முன்னிட்டும் இங்கிருந்து போகும்போது அழக்கூடாது.யார் அழுதாலும் இவள் அழக்கூடாது. அழுதால் யாராவது மதிப்பார்களா சார்? அதுவும் இவள் யார்? சாஹித்யக்காரியல்லவா? ஒரு சாஹித்யக்காரி போய் அழலாமா? சீச்சீ?
அழுவது முட்டாள்களின் பலவீனமல்லவா? அதுவும் முத்துசாமி சாரின் முன்னால் அழலாமா? பிறகு இவள் கெளரவம் என்னாவது? ஜம்மென்று புறப்படவேண்டாமா? yes! ஜம்மென்றே ரெடியானாள். படு படு ஜம்மென்றே நடமாடினாள்.

முத்துசாமி சார் வந்தார். “எல்லாம் கவனமாக எடுத்து வைத்தாயிற்றா?என்று கேட்க, பசுபதி தான் பதில் சொன்னான். புறப்படும் நேரம் வந்தது. சரவணனின் காரும் வந்தது. பதறியவாறே மாணவர்கள் எல்லோருமே அருகே வர, இவள் , --- ஆசிரியரை நமஸ்கரித்தாள். கமலாதேவி! எப்பொழுதும் பயிற்சியில் இருங்கள்.பயப்படக்கூடாது. அமானுஷ்யம் என்று ஒன்றில்லை. அது வெறும் ப்ரம்மையே.
தைர்யமாக இருங்கள். இங்கு படித்த களறி,யோகா, தியானம், எல்லாம் எப்போதுமே தொடரவேண்டும்..என்ன? சரி சார்!” என்றபோது இவள் குரல் இவளுக்கே கேட்கவில்லை..
சேச்சி, பசுபதி அருகே வந்தான். ”சேச்சி, நிங்ஙள் மீண்டும் இங்கே வரவேண்டும்! அவசியம் வரவேண்டும், இங்கேயிருந்து போனாலும் எங்களையெல்லாம் மறந்து விடாதீர்கள் சேச்சி,” சந்திரா அழுதாள். இவள், முருகன், வினாயகம், ஜோர்ஜ், என ஒவ்வொருவராய் பார்த்துப், பார்த்து, பார்த்து- பார்த்த வினாடியில், சிதறிப்போனாள். ”கமலாதேவி? அழாதீர்கள்! நீங்கள் வராவிட்டாலும் நாங்கள் சிங்கப்பூருக்கு வருவோம், பின் என்ன? அழாமல் போய் வாருங்கள்!
கூத்துப்பட்டறையின் ஒவ்வொரு நிலையிலும் நிங்ஙள் இருப்பீர்கள்.மாணவர்கள் ஒருபோதும் உங்களை மறக்கமாட்டார்கள்.”

முத்துசாமி சாரின் குரலின் கம்பீரம் எங்கே? ஆசிரியரின் குரலும் கம்மியிருந்தது.
போய் வருகிறேன் சார்,” சரவணனின் காரிலேறியும், விமானத்திலேறியும், சிங்கப்பூருக்கு வந்தும் சேச்சி! என்ற பாச விளியை மறக்கவே முடியவில்லை.
முத்துசாமி சார் கூறியதுபோலவே சிங்கப்பூர் கலாச்சார அமைப்பின் அழைப்பின் பேரில்,தனது கூத்துப்பட்டறை மாணவர்கள், Dr.ரவீந்திரன் சார்,[டெல்லி]
காசித்தம்பிரான்,என ஒரு குழுவையே அழைத்துக்கொண்டு , சிங்கையில் வந்து வெற்றிகரமாக, நிகழ்ச்சி நடத்திச்சென்றனர். கூத்துப்பட்டறை மாணவர்கள் பலரும் இன்ரு சினிமாவில் ஜொலிக்கிறார்கள். ஜொர்ஜ்,சந்திரா குமார், எனப்பலரும் தங்கர்பச்சானின் சினிமாவில் காண்கிறேன். ப்ரவீன் மண்ரத்தினம் சினிமாவில், குமரவேல் பிச்சைக்காரனாய் அபியும் அப்பாவும் சினிமாவில் மெயின் ரோலில் நடிக்கிறான். கலை ராணியும் சினிமாவில் காலூன்றி விட்டாள்.

பசுபதி, எண்டெ அருமைத்தம்பி பசுபதி, ரவீந்திரன் சாரின் செல்லப்பிள்ளை பசுபதி, முத்துசாமி சாரின் பெருமிதத்துக்குரிய பசுபதி, இன்று சினிமாவில் முத்திரை பதித்த நடிகன்.விருமாண்டியில் கொத்தாலந்தேவராக கமலஹாஸனோடு, வசந்த பாலனின் இயக்கத்தில் “வெயில் ”படத்தில், குசேலனில் ரஜனி காந்தின் நண்பனாக, சேரனின் சினிமாவில் கண் தெரியாத அந்தகனாய், எனப்பல பல புகழ் பெற்ற படங்களில் , பெயர் பெற்ற நடிகனாகி விட்டான்.இவர்களை எல்லாம் சினிமாவில் பார்க்கும் போது முத்துசாமி சாரின் உழைப்பு வீண் போகவில்லை, என்றே தெரிகிறது. இன்று ஞான் மேடை நாடகத்துறை, டைரக்‌ஷன், என எல்லாவற்றையும் முற்றாக விட்டு விலகி ,10 வருடகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், முத்துசாமிசார், ராமானுஜம் சார்,Dr.ரவீந்திரன் சார், போன்றோரிடம் பெற்ற பயிற்சியில், இவள் எழுதி இயக்கிய நாடகம்,
இவளது இலக்கிய வாழ்வில் முத்திரை பதித்த நாடகம், சிங்கை மலையாள இலக்கியத்தில் பெயர் பெற்ற நாடகம் ,என்பதை எப்படி மறக்க முடியும்?. எப்படி மறுக்கமுடியும்? அனைத்து வெற்றியும் , எல்லாம் , வணக்கத்திற்குரிய என்டெ ஆசிரியர்களுக்கே சமர்ப்பணம்.

முற்றும்

பி.கு--- இன்றுவரை எண்டெ கட்டுரைத்தொடரை பொறுமையாகப்படித்து, அவ்வப்போது ஊக்கமூட்டிய அனைத்து என்டெ அன்பான நெஞ்சங்கட்கும், சிரம் தாழ்ந்த நன்றி. இனி கொஞ்சம் நாட்களுக்கு மின்தமிழில் அதிகம் வரமுடியாது. 26 வாரங்களுக்கான 2 தொடர்களில் ,எழுத ஒப்பந்தமாகியுள்ளேன்.உருப்படியாய் எழுதி முடிக்கவேண்டுமே என்ற பரபரப்பில் உள்ளேன். அனைவரின் ஆசிகளும் வேண்டி--கமலம்.

Thursday, June 25, 2009

கூத்துப்பட்டறையில் - 15 -குருவே நமஹ

குருவே நமஹ

ஞான் --இலக்கியத்துக்கு சமூகக் கண்ணோட்டமே தேவையில்லை.வெறும் ருசிதான் இலக்கியம்,என்கிறார்களே, இது சரியா சார்? அசோகமித்திரன் -சமூகக்கண்ணோட்டம் கூட தேவையா? இல்லையா என்பதை முடிவெடுக்கும் ,உரிமை எழுத்தாளனுக்கிருக்கலாம் ஆனால இப்படிப்பட்டஎழுத்து வாசகனுக்குததேவையா இல்லையா, என்பதையும் வாசகனே தீர்மானித்துக்கொள்வான். பிறகு குறை சொல்லக்கூடாது. இப்படியெல்லாம் சில கேள்விகட்கு சுவாரஸ்யமாக, பதில் சொல்லிக்கொண்டே திடீரென்று அசோகமித்திரன் சார் கேட்டார்.

ஆமாம்!நாடகத்துறை என்கிறீர்களே? இந்திரா பார்த்தசாரதியைப்போய் பார்த்தீர்களா?
ஞான் --- இல்லை சார்!. நேரமே கிட்டவில்லை.கூத்துப்பட்டறையில், என்டெ பயிற்சிகள்,
ஸ்க்ரிப்ட், வேலையே சரியாக இருந்தது ,என்றிவள் கவலைப்பட, ஏன் கவலைப்படுகிறீர்கள்? நாளை நாங்கள் அழைத்துப்போகிறோம், என்று சா. க வின் மனைவி ரோகிணி கூற , மகிழ்ச்சியாக இருந்தது. இதற்குள் காப்பி வர, இவளே எடுத்து, அ.மித்திரன் சாருக்கு கொடுக்க,மனசு உற்ற சந்தோஷம் இம்மட்டு அம்மட்டு அல்ல.
இவர்களெல்லாம் தமிழில் இவள் பெரிதும் மதிக்கும் மனிதர்கள்.தமிழிலக்கியத்தில் இவள் வணக்கத்திற்குரிய சான்றோர்கள். இவளால் தனது அன்பை இந்த எளிமையில் தான் நிரவல் செய்ய முடிந்தது.பேசிப் போதவில்லை தான். என்றாலும் நேரமில்லை. மாலையாகிவிட்டது. அசோகமித்திரன் சார் புறப்பட்ட, அடுத்த நிமிஷம் இவள்
சரவணனின் காரில்,கூத்துப்பட்டறைக்குப் புறப்பட்டாள். உள்ளே நுழைந்த மறுநிமிஷம், சேச்சி!என்ற கூக்குரலோடு மாணவர்கள் சூழ்ந்து கொள்ள, முத்துசாமி சார், அலுவலக அறையினின்று வெளிப்பட்டார்.

மானாட்டில் நடந்த அனைத்து சேதிகளையும், ஆசிரியரிடம் பேசி முடித்தபிறகுதான் இவளுக்கு ஆஸ்வாசம் ஏற்பட்டது. அதற்குள் தொலைபேசி அடிக்க, முத்துசாமி சார் எடுத்துப்பேசினார். பின் கடகடவென்று சிரிக்கிறார்.” அதெல்லாம் கவனமாக இருப்பார், பத்திரமாக வந்து சேருவார்.கவலைப்படாதீர்கள். சரி, நிங்ஙள் என்று சென்னை வருகிறீர்கள்? என்றெல்லாம் கேட்டு போனை இவளிடம் கொடுக்க, கணவர்தான். பரவசம் தாங்கவில்லை, குழந்தைகள் பற்றி இவள் கேட்க, அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல்,
”பாஸ்போட் பத்திரம் ,,லக்கேஜ் பத்திரம், புறப்படுவதற்கு முன் எல்லாம் , ஒன்றுக்கு 2 முறை ,கவனமாக செக் செய்து லக்கேஜைப் பூட்டு! பாஸ்போட்டை கைப்பையிலேயே வைத்துக்கொள்!” , உபதேச ரத்தினமாலைகள்., முத்துசாமி சார் இதனால்தான் சிரித்தாரா?
இவளுக்கு ரொம்ப அவமானமாக இருந்தது. ”அதெல்லாம் ஞான் கவனமாக பார்த்துக்கொள்கிறேன். இது கூடவா எனக்குத் தெரியாது?” என்றிவள் சொல்ல, “உன்னைப்பற்றி எனக்குத்தெரியாதா? உன்னுடைய பொறுப்பு பற்றி எனக்குத்தானே தெரியும், சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கிறதல்லவா? என்று கணவர் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல், உபதேசம், உபதேசம் உபதேசம் ,என்று பொழிய, பின், இவள் போனை வைத்துவிட்டுத்திரும்பினால், முத்துசாமிசார் மீண்டும் சிரிக்க , இவளுக்கு யார் மீது என்றே தெரியாமல், கோபம் கோபமாய் வந்தது. பட்டென்று இவள் அறைக்குள் போய் விட்டாள்.
2 மணிநேரத்துக்குப்பிறகு, ஒரு வழியாக லாக்கேஜை சரிப்படுத்திவிட்டு, குளித்து, பூஜை முடித்து, வெளியே வர, ஜெயந்தன் சார், ஹாலில் காத்திருந்தார்.!மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அன்றைய ஜெயந்தனின் அனைத்து எழுத்துக்களையும் இவள் ஆய்வுக்கு படித்திருந்தாள்.
அவரும் ராமானுஜம் சாரின் மாணவர் என்றறிய ஆச்சர்யம் இம்மட்டு அம்மட்டல்ல.[இவரும் நவீன நாடகத் துறைப் பக்கம் போய் விட்டதால், இப்பொழுது சிறுகதை எழுதுகிறாரா? என்று தெரியவில்லை.] "அட! நம்ம முத்துசாமிதான் கமலா சொன்ன வீரபாண்டிய கட்டபொம்மனா?"என்று திடீரென்று ஜெயந்தன் போட்டுடைக்க, வெலவெலத்துப்போனாள்.
நல்லவேளை, கட்டபொம்மன் கோபப் படவில்லை.எனக்குத் தெரியும் ,என்பதுபோல் இன்னும் ஜோராய் மீசையை முறுக்கிவிட்டு கம்பீரம் காட்டினார்.
இலக்கியம், இலக்கியம், இலக்கியம்,தான் பேசினாள். ஜெயந்தன் சாரின் ,அனைத்துக் கருத்துக்களுமே, விரிவாக்க நிலையில், பரந்து பட்ட பார்வையிலிருந்ததில் ஆச்சர்யமில்லை. தொழில்துறையில் மருத்துவர் அல்லவா?
ஞான் --Non Linear ஆகட்டும் magical realism ஆகட்டும். எப்படியெல்லாம் நவீனத்துக்கு, பதக்கம் சூட்டினாலும், கதை சொல்லும் மரபை உள்வாங்கி, புதிய கோணத்தில் ஒரு வடிவம் கொடுக்கிறோம். கலை ஸ்தூலமானது என்பதுபோல் தானே சார் இலக்கியமும்?
ஜெயந்தன் --தெளிவாகவே சொல்கிறீர்கள்! கமலா!? மூணாந்தரம், நாலாந்தரம், எழுத்துகூட சில சமயத்தில் ---------தேர்வு செய்யப் படுகிறதுதான ஆனாலும் இதனால் எல்லாம் பாதிக்கப்படாமல், தன்னுடைய பன்முகப்பார்வையிலிருந்து விலகாமல், ஒழுங்காக தன்னுடைய பதிவுகளைச்செய்யதெரிந்தாலே போதுமே ! ஆத்மதிருப்தியின் விருதுதானே அவனது முதல் வெற்றி? ‘என்றும் இன்னும் கூட பேசினார். அருமையான அடக்கமான,ஆனால் கம்பீரமான எழுத்தாளர்.

அடுத்த முறை வரும்போது பார்ப்போம், கமலா! .என்றவாறே, முத்துசாமி சாருடன் சேர்ந்து கூத்துப்பட்டறை முழுக்க சுற்றிப்பார்த்தார். அவர் விடை பெற்றுச் சென்றபிறகு, முத்துசாமிசாரும் புறப்பட, மாணவர்களும் வீடு திரும்பும் நேரம், ”சேச்சி, இனி, திரும்ப இங்கே வரவே மாட்டீர்களா?” என்று முருகன் கேட்க, ”அதெப்படி, எங்கள் சேச்சியை பார்க்காமலிருப்பது? சேச்சியின் தமிழைக்கேட்க இனி சிங்கப்பூருக்கேதான் போகவேண்டும் போலுள்ளது?!. என்று பசுபதி கேட்க , அவளுக்கு மனசு கனத்துப் போயிற்று.எல்லோருமே போனபிறகு, சமையல் அம்மாவும் இவளும் மாத்திரம் தனித்து விடப்பட, அப்பொழுதுதான் இனம் புரியா வேதனை நெஞ்சைக் கவ்வியது. மறுநாள் காலையிலேயே, சா.க வும், மனைவியும் இவளை அழைத்துப்போக, முதல் பார்வையிலேயே , இந்திரா பார்த்தசாரதி சாரை மனதார நமஸ்கரிக்கத்தோன்றியது. இவளை அறிமுகப்படுத்திவிட்டு, சா.க. செல்ல, இவளால் நம்பவே முடியவில்லை. வெலிய அம்மாவன் போல், இளையச்சன் போல், ரொம்ப சொந்தமான உறவுக்கார மனிதரைப்பார்ப்பதுபோல் அப்படியொரு அன்னியோன்யம் , அவரைக்கண்டதுமே ஏற்பட்டது.

[ல.ச. ரா.வைக்கண்டபோது மட்டுமே இவளுக்கு இப்படியொரு மனநிலை ஏற்பட்டுள்ளது
”கமலம்! மலையாளம், தெரியுமா? ஆனால் நம்ம கமலம்! என்ன சொல்றாய்? ”என்று மாமியிடமிருந்து காப்பியை வாங்கி இவளுக்குக் கொடுத்த ,ல.ச.ரா.வின் அந்த அன்பான விளியை மறக்கமுடியுமா , ”இவள் எழுத்தாளர் இல்லையாம், சாஹித்யக்காரியாம்!” என்றவாறே குழந்தையாய் சிரித்த , ல. ச.ராவின் குமிழ்ச்சிரிப்பு, ஏனோ , இன்னிமிஷம் கண்களை நிரப்புகிறது] இந்திரா பார்த்தசாரதி சாருடனான உரையாடலும், -- கிட்டத்தட்ட அப்படித்தான் பேசினார். --அவ்வளவு மென்மையாகப் பேசினார். குழந்தை போல் சிரித்த முகம். கண்கள் கூட அன்பாகப் பேசியது. மலையாளம் பேசும் திருவனந்த புரத்து மாப்பிள்ளையை இவளுக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு முன்னால் தன்னை ஒரு டைரக்டர் என்று சொல்லிக் கொள்ளவே இவளுக்கு தயக்கமாக இருந்தது.
கணவர், குடும்பம், குழந்தைகள், என்றெல்லாம் அன்பாக விசாரித்தார். சிங்கப்பூர் இலக்கியம் பற்றி விசாரித்தார். பிறகுதான் சாஹித்ய பக்கம் வந்தார். இவள் தனது சம்சயங்களை யெல்லாம் கேட்டாள்.

[1]”சார்! realistic நாடகங்களைத் தெரிந்து கொண்டபிறகு தான், ஸ்டைலைசேஷன் நாடகங்களுக்குப்போக வேண்டுமென்பது என்டெ அபிராயம், இது சரியா சார்?
[2] சத்யஜித்ரேயின் பதர் பாஞ்ஜாலியின் பாணியில் வருபவை மட்டும் தான் நவீனத்தின் உச்சமா?
[3] horizontal movementsக்கும், verticl movements க்குமான,நளினம் எனக்கு புரிய சிரமமாக உள்ளது .
நடன அசைவுகள், அடவுகள், இசைக்கூறுகள், என அனைத்து அம்சங்களும் சேர்ந்தால் தானே dramatic text பூர்த்தியாகும்?
[4] நவீன நாடகத்தில் வரும் ஒவ்வொரு பரிசோதனை முயற்சியும், அவரவர் புரிதலாகத் தானேஇருக்கிறது? எல்லோரையும் சென்றடையும் உத்தியாக ,ஆடாமல், அசையாமல் பார்வையாளர்களை, இருக்கையிலிருத்தி வைக்கும் சாகசம்----------, -------------, போன்றோரால் மட்டுமேதான் சாத்தியமா சார்?
[5] யதார்த்த நாடகங்களில் ஒரு ப்ரத்யேக அடித்தளமுள்ளதாக எனக்குப் படுகிறது.
ஆனால் யதார்த்ததை புறந்தள்ளிய நவீனத்துவ ஆசிரியர்களிடம் தான், oriental தியேட்டருக்கான பாணி அதிகம் என்பதை ,என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.எது சத்யம்?
[6] Narrative styleல் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு,performing artsல் கொண்டு வந்தால் என்ன தப்பு?

இந்திரா பார்த்தசாரதி சார் நவீன நாடக முன்னோடிகளுள் ஒருவரல்லவா?அழகாக விளக்கினார், மிக அருமையாக விளக்கினார். பிறகுதான் இவளது படைப்பு பற்றி விசாரித்தார். யார் டைரக்‌ஷன் என்று கேட்க, ஒரு நிமிஷம் ஸ்தம்பித்துப்போனாள்,
தயக்கத்துடன் , என்டெ ஸ்க்ரிப்டை ஞானேதான் சார், டைரக்ட் செய்வேன்,”என்றிட மலர்ந்து சிரித்தார். அவரது, மழை, போர்வை போர்த்திய உடல்கள்,முத்துசாமி சாரின் நாற்காலிக்காரர், உந்துச்சுழி,ராமானுஜம் சாரின் வெறியாட்டம், அல்காஷியின் தேசிய நாடகப்பள்ளி பற்றிய தகவல்கள்,எனப்பேசிக் கொண்டிருக்க, சா. கந்தசாமி வர, அருமையான அந்த மனிதரை வணங்கி விடை பெற்றாள். திரும்பி கூத்துப்பட்டறைக்குள் நுழைந்த போது, முத்துசாமி சாரின் மனைவி, அம்மா வந்து காத்திருந்தார்.
அப்படியே அவரைக்கட்டிக்கொண்டு நின்றபோது, அம்மா அன்போடு அணைத்துக்கொண்டார். அம்மா போனபிறகு இவளது வேலைகள் ஆக்ரமிக்க, மாலை வந்தது. மாணவர்கள் அனைவரும் அன்று அவளுடன் பேச அருகே வந்து விட்டனர். வகுப்பு கூட அன்று நடக்கவில்லை. நாளை பயணம் அல்லவா? ”சேச்சி”என்றழைத்தவாறே, சந்திரா அருகே வர, அந்தப்பெண்ணைப் பார்க்கப் பார்க்க அவ்வளவு கவலையாக இருந்தது.
முதன் முதலாக சென்னைத்தமிழை அவள்தான் பேசிக்காட்டினாள். பசுபதி, என்டெ அருமைத்தம்பி, பசுபதி, சேச்சி” என்று அழைத்தபோதே , அவனுடைய குரல் கம்மியது. வினாயகத்துக்கு மட்டும் இவள் அம்மா!. அப்புக்குட்டன், குமார், குமரவேல்,முருகன், தென்னாற்காடு, களறி ஆசிரியர், இசை ஆசிரியர், ரவிவர்மா, என
ஒவ்வொருவரும் அவள் அருகே வர, அவர்களின் சோகம், நெஞ்சைத் தொட,
கட்டுப்பாட்டையும் மீறி , அவளுக்கும் கண்ணீர் வந்தது.

...........அடுத்த இதழில் முற்றும்

Wednesday, June 17, 2009

கூத்துப்பட்டறையில் - 14 - சந்தனக்காற்றே , செந்தமிழ் ஊற்றே

கூத்துப்பட்டறையில -- 14

சந்தனக்காற்றே ,செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப்பாட்டே வா வா
காதோடுதான் நீ பாடும் ஓசை
என்னோடு நீ வா ??

இன்னும் ஒரு மணிநேரத்தில் பிரியப்போகிறோம் , என்ற பரபரப்பில் தோழிகள் புகைப்படம் எடுக்கத் தவித்தார்கள். இவளது கேமரா அந்த சமயம் பார்த்து மக்கர் செய்தது. மானாட்டில் பலருக்கும் உதவிய கேமரா, இவளது சொந்த உபயோகம் என்று வந்தபோது
முரண்டு பிடித்தது. இவளுக்கானால் தலைவலி முணுமுணுவென்று, நெற்றிப்பொட்டில் நெறியத்தொடங்கியது. பட்டை உரிக்கும் வெயில், காலையிலிருந்தே அனுபவித்த டென்ஷனா, தெரியவில்லை. நல்ல சமயம் நோக்கி ஆபத்பாந்தனாய் கணேசமூர்த்தி, தன்னுடைய கேமராவில் அனைவரையும் போட்டோ எடுத்தார்.
அக்நிபுத்திரன், சடகோபன், ராசையா, எனப்பல பேராசிரியர்கள் அன்போடு வந்து பேச, வேகம் வேகமாக இவளை நோக்கி வந்தார் Dr.ராஜமாணிக்கம். ”கமலாக்‌ஷி! இன்றே புறப்படுகிறீர்களாமே? ”இன்னும் ஒரு மணி நேரத்தில் சார், நாளை மறுநாள், சிங்கப்பூருக்குத் திரும்புகிறேன்..இன்று மாலைக்குள் எண்டெ எல்லா இலக்கிய நிகழ்வுகளையும் முடித்துக்கொண்டால்தான், நாளை புறப்பட ஏற்பாடு செய்யமுடியும்.” அதுவரை ஏன் நிற்கிறீர்கள்? இப்படி அமர்ந்து பேசலாமே, என்று, மங்கையும், அன்னபூரணியும் அருகில் அழைக்க, அனைவரும் அங்குள்ள லோபியிலமர்ந்து கொண்டோம்.
”ஒரே ஒரு கேள்வி அம்மா! சிரமமில்லையே?? என்று ராஜமாணிக்கம் சார் தயங்க, ” கேளுங்கள் சார்” என்றாள். திரமிளம் என்ற சொல்லிலிருந்துதான் -----பிறந்தது, என்பதற்கான விளக்கம் எப்படி என்று கொஞ்சம் விளக்கமுடியுமா ,கமலாக்‌ஷி??
மேடையிலேயெ இவர் கேட்டிருந்தால் இவள் உற்சாகமாக பதில் சொல்லியிருக்கலாம்தான்.ஆனால் இப்பொழுது தலைவலி,புறப்படும் டென்ஷன்,
என பரிதவித்துக்கொண்டிருக்க, திரமிள விளக்கமா? என்றாலும் தமிழறிஞர், மதிப்பிற்குரிய அன்பான மனிதர், அவரை அலட்சியப்படுத்தமுடியவில்லை.

’”கால்ட்வெல்லின் இலக்கிய ஆய்வில்சான்றுள்ளது. வி,ஆர், வெங்கடேச சர்மாவின் தமிழ் வரலாறு [17ம் நூற்றாண்டு நூல்,] நூலில், நீலகண்ட சாஸ்திரியின் history of south india, roots of languages, எனும் நூல்களில் விவரித்துள்ளனர்.
செப்பேடுகளின் ஆய்வு ---பாண்டியவர்மா எழுதிய நூல்[தமிழில், மலையாளத்தில், ஆங்கிலத்தில்] என 3 மொழிகளிலும் , இதற்கான விளக்கம் தெளிவாக உண்டு. ஆனால் இவையொன்றும் இந்த நூற்றாண்டு நூல்களே அல்ல. [18,19]
ஆனால், 20ம் நூற்றாண்டு சண்முகம் பிள்ளை,எனும் நூலார், திரமிளம், திராவிடம் போன்ற சொற்கள் தமிழ் எனும் பழஞ் சொல்லிலிருந்துதான், தோன்றியிருக்கவேண்டுமென்கிறார். இதற்கும் மறுப்பாய், புனரலிங்கம் பிள்ளையின் தொல்காப்பியம் கண்ட தமிழ், எனும் நூலில் வேறுமாதிரி சித்தரிக்கிறார்.

ஆய்வாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. இதில் பரந்து பட்ட பார்வை எது, என்பதை பேராசிரியர் நிங்ஙளைப் போன்றோர் தான் , பகுத்தறிந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.” ’அடடா! இந்த விளக்கங்களே போதும் அம்மா! என்று சொல்லி முடிக்குமுன், கமலாக்கா, “என்ற விளி. திரும்பினால் 3 வயசுக்குழந்தையோடும்,
கணவரோடும் பொன்னுத்தாயி! இவுங்க தான் எங்க மாமன் , இது எங்க பாப்பா?! ஏனோ பொன்னுத்தாயியின் கணவர் அனியாயத்துக்கு வெட்கப்பட்டார்.
ஆனால், குழந்தைப்பாப்பா, மிட்டாய்கலரில் கவுன் போட்டு, உப்பிய கன்னங்களும், கன்னத்தில் பெரிய திருஷ்டிப்பொட்டுமாய், கண்டவுடனேயே
நெஞ்சை அள்ளினாள். ‘வா! என்று கையை நீட்டியதுமே, எந்த பிகுவுமே இல்லாமல், தாவி இவளிடம் வந்த குழந்தையை அப்படியே நெஞ்சோடணைத்துக் கொண்டபோது மனசெல்லாம் விகசித்து சிலிர்த்தது. அப்பொழுதுதான் கவனித்தாள். தலைமுடியை இறுக்கிக்கட்டி, கூம்பாய் நடு உச்சியில் அந்த இறுக்கம் ---, சகலமும் பதறியவளாய்
குழந்தையின் சிரசின் நடு உச்சியிலிருந்த ரப்பர்பேண்டை அவிழ்த்தெறிந்து பொன்னுத்தாயியை கடிந்து கொண்டாள். “நடுசிரசில் ஒருபோதும் இப்படிக் கட்டாதே! அது குழந்தைக்கு எவ்வளவு பாதிப்பு தெரியுமா>?” என்று விளக்க, ‘பொன்னுத்தாயி! அப்படித்தான் அக்கா! படிச்சிருக்கே தவிர, அதுக்கு ஒரு மண்ணும் தெரியாதுக்கா”!என்று மாரிமுத்து ,கணவராய் லட்ஷணமாய் சொல்ல, பட்டுப்பாப்பா, தன் கரிய விழிகளால் இவளையே உறுத்து நோக்கி, பின் சிரிக்க,, ஒரு நிமிஷம் உலகமே மறந்து போயிற்று
தங்கக்குட்டியை மடியில் உட்கார வைத்து,,இவளது சீப்பால் முடியை சீவி, பெளடரைத் தீற்றி, அழகுக்கு அழகு சேர்த்து,, “இந்தா” என்றிவள் நீட்ட, பணத்தை கச்சிதமாக கண்மணி வாங்க்கிகொள்ள , அந்த சமத்துக்கு கட்டி முத்தமிடாமலிருக்கமுடியுமா?
தங்கத்தை மார்போடணைத்தபோது தலைவலிகூட மட்டுப்பட்டதுபோல் தானிருந்தது. பட்டுப்பாப்பாவை கொடுக்கவே மனமில்லை, அதற்குள், சா.கந்தசாமியின் மகன் சரவணன் வந்துவிடவே,அனைவரிடமும் பிரியாவிடை பெற்றாள். தோழிகள் அணைத்து விடைதர,
பொன்னுத்தாயி மட்டும், ”கமலாக்கா! ஞான் உங்களை முத்தமிடலாமா?! என்று குறும்பாகக் கேட்க, “வேண்டாம்!அந்த முத்தத்தை மாரிமுத்துவுக்குக் கொடு? ” என்றிவளும் குறும்பாகச் சொல்ல ,கொல்லென்று எல்லோருமே சிரிக்க, அந்த சிரிப்பை ரசித்தவாறே, காரிலேறினாள்.

சா.கந்தசாமியும்,மனைவியும் அன்பொழுக வரவேற்றுப் பேசிக்கொண்டிருக்கும்போதே, உள்ளே நுழைந்த மெலிந்த உருவத்தைக்கண்டு , தனை மறந்து எழுந்து நின்றாள். ‘நமஸ்காரம் சார், ‘என்றிவள் வணங்க, அசோகமித்திரன் சார் ”வணக்கம் அம்மா என்றார்.தமிழின் முதல் குறியீட்டுநாவல், அசோகமித்திரனின் தண்ணீர்,
தான் என்பார் ந.முத்துசாமி. இவரது, கரைந்த நிழல், ஒற்றன், தண்ணீர், ,என 3 நாவல்களையும் மலையாளத்தில் மதிப்பீடு செய்த கமலாதேவியின் கூற்று,
’Non-fiction வடிவ ரீதியை தமிழில் முதன்முதலாக அசோகமித்திரனின் எழுத்தில் தான் காண முடிகிறது”என்பதாகும். எளிமையான மொழிநடையில்,,எந்த அலங்காரமுமே இன்றி, பாசாங்கற்ற நடையால்,எழுதுவதைப்போலவே,நேரிலும் அவ்வளவு எளிமையாகப்பேசினார்.
சமகால இலக்கிய பரிமாணம் பற்றி தனக்கே உரிய பாணியில் விளக்கினார்.
இலக்கியத்தில் நவீனம், பழமை, என்ற ஜோடனையே தேவையற்றது அம்மா! வாசகனின் மனதில் கதை உயிர்ப்புடன் ஜீவித்திருக்குமாயின் அதுதான் அம்மா அவனது இலக்கிய வெற்றி.

மிகவும் பிடித்தது இந்த பதில்.பளிச்சென்று அவளது கருத்துக்களை முன்வைக்க முடிந்தது.
பூமணியின் நைவேத்யம், கந்தர்வனின் சாசனம், ஜெயந்தனின் சாய்வு, ப்ரபஞ்சனின் மீன்,,and etc------எனப்பட்டியலிட்டால், தமிழில் கதை சொல்லிகளுக்கா பஞ்சம்?ஒவ்வொரு எழுத்தாளனும் ஒவ்வொரு நடையால் அவளைத் திகைக்க வைத்திருக்கிறார்கள்?
கற்கக்கசடற, ஈஷ்வரோ ரக்‌ஷது., கொசு, ஊமங்காடை,திருமுகப்பில்,சுழல்பந்து, என எண்ணிலடங்கா, தமிழ்ச்சிறுகதைகள் இவளை கவர்ந்துள்ளது.
பலரும் அவர்களது வட்டார வழக்குத் தமிழால் இவளைத் திணறடித்திருக்கிறார்கள்.ஆனாலும் இவள் தமிழ் பயின்றாள் . அவர்கள் எல்லோரிடமுமே இவள் தமிழை திணறத் திணற , படித்திருக்கிறாள். ஆனால் இவர்களுக்கும் முந்தைய எழுத்தாளர்களின் உன்னதங்களுக்கு முன்னே ஒப்பீடு செய்ய முடியுமா? யார் உசத்தி? யார் மட்டம்?எல்லோருமே உசத்திதான், தரமான கதை புனையும் எல்லோருமே அருமைதான்.கதை சொல்லும்போதே வாசகர்களூடே நெருக்கமாகும், எழுத்தின் லாவகம் யாருக்கிருந்தாலுமே அது நைவேத்யமே.பிரதமன் ருஜி என்றால் சர்க்கரைப்பொங்கல் என்ன மட்டமா? கோழியும் ,இறைச்சியும் ஒருவகைப்பித்து, என்றால்,கருவாட்டுக்குழம்பும் , மொச்சைக்காய் கறியும் எதில் குறைந்துவிட்டது?
[சரியாகத்தெரியவில்லை, மொச்சைக்காயா? மொச்சைக்கட்டையா?] இப்படி நூற்றுக்கணக்கில் தமிழில் அற்புதங்கள் சிருஷ்டிக்கும் எழுத்தாளர்களை ஞான் சுட்டுவேன். ஆனால் , என்டெ, என்டெ இஷ்டப்பட்ட எழுத்தில் stream of conciousness உத்தியை தமிழில் கையாண்ட, ல. ச.ரா.வின் எழுத்து மெய்ம்மறக்கச்செய்த எழுத்தாக்கும்.

சாரே! ல.ச. ராவின் அனைத்து எழுத்துக்களுமே, என்டெ இஷ்டப்பட்ட எழுத்து தான் தெரியுமா? ஞான் மட்டுமல்ல, சுஜாதாவே ஒருமுறை ல.ச.ரா.வின் பாற்கடலுக்கீடான சிறுகதை தமிழில் இதுவரை வெளி வந்ததுண்டா? என்றாரே? இன்றும் கூட ரசித்து மயங்கும் உத்தியில் இப்படியும் அல்புதம் உண்டு. ஆனால் தப்புத்தப்பாய் வரும் சில மதிப்பீடுகள் காணும் போது கண்ணில் ரத்தம் வருகிறது. தத்துப்பித்தென்று எதையாவது எழுதிவிட்டால் சாஹித்யம் மன்னிக்குமா நம்மை? எந்த ஜனரஞ்சக பத்திரிக்கை புகழுமே இன்றி, சிற்றிதழ்களில் மட்டுமே எப்பொழுதாவது மின்னல் தெறித்தாற்போல் எழுதிவரும் எழுத்தாளர்களை ஞான் தெறிவு செய்துள்ளேன்.தமிழில் நனவோடை உத்தியை நமக்கு அறிமுகப்படுத்திய புதுமைப்பித்தன் நமக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம்
இந்த முத்துத்தெறிக்கும் எழுத்தாளர்களும் எனக்கு,----------என்றெல்லாம் இவள் தன் கருத்துக்களைச்சொல்ல, ரசித்துக்கேட்டார். பின் அசோக மித்திரன் சார்,
புதுக்கவிதை, நவீன நாடகப்பார்வை, முத்துசாமி சாரிடம் தனக்குள்ள நட்பு,என தொடர்ந்தார்,

..........தொடரும்

Tuesday, June 9, 2009

கூத்துப்பட்டறையில் -- 13

கூத்துப்பட்டறையில் --13


கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ்ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?”-------[பரஞ்சோதி முனிவர்]

முனைவர் கணேசமூர்த்தியின் உரை தொடங்கிய பிறகுதான், சுற்றுச்சூழலே உணர்வில் உறைத்தது. உள்ளூர கனன்று கொண்டிருந்த கோபத்தை மறக்க ,அவையை நோக்கியபோது, இவர்கள் எழுந்து வந்த இருக்கையில், அருமைத்தோழிகள் மங்கை, கீதா, அன்னபூரணி, என நிறைந்து அமர்ந்திருந்தார்கள். இவளை நோக்கி, மகிழ்ச்சியோடு கை காட்ட,
இவளால் கை காட்ட முடியவில்லை. ஸ்க்ரிப்டில் மீண்டும் ஒருமுறை கண்களை ஓட்டினாள்.
முனைவர் கணேசனின் உரை அசலாயிட்டும் ஒரு பேராசிரியரின் உரை.ஆழமாக ஆராய்ந்து, மணிமணியாய் எடுத்துக்காட்டினார்.

அடுத்து புலவர் சபேசன், இவரது பார்வை மற்றொரு கோணம். துளிதுளியாய் இவள் உடம்பில் உயிர் ரசம் ஏறியது.மூன்றாமவள் --இவளது உரைதான். எழுந்து நிற்கவே கால்கள் நடுங்கியது. ’ கமலாக்‌ஷி”!என்று பக்கவாட்டில் அன்புக்கட்டளை வேறு.
[Language and literature--மொழியும் இலக்கியமும் கூட இவளது உரையில் ஒரு அங்கமே.] மலையாள அவையில் குறிப்பு கூட வேண்டாம், கடகடவென்று அருவியாய் பொழிய முடியும். தமிழில் அந்த ஆற்றல் இல்லை .

மொழிச்சரளத்தில் சிரமம் என்பதால் எப்பொழுதுமே, எழுதி வைத்துக்கொண்டுதான் பேசுவாள்.ஆனால் அதிசயம் நிகழ்ந்தது. மைக்கைப் பிடித்தபோது, அம்பிகை, ஈஷ்வரி கடாக்‌ஷத்தில் கம்பீரம் தானே வந்தது. முதல் பாராவுக்கு மட்டுமே பார்க்க வேண்டியிருந்தது. பிறகு ஸ்க்ரிப்டே தேவைப்படவில்லை. தனை மறந்தாள்.

[இவள் உரையிலிருந்து குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே கீழே தந்துள்ளேன்.]

சங்கமருவிய காலத்திலிருந்து, பல்லவர், சோழர், நாயக்கர், ஐரோப்பியர், எனத்தொடங்கி,வடமொழி,கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், போன்றமொழிகள் வழக்கொழிந்தும், தமிழ் பிறந்த சரிதம் என்ன? திரமிளம் என்ற சொல்லிலிருந்து தமிழ் பிறந்தது என்பது சரிதானா? சுமேரிய நாகரீகம், சுமேரிய மொழி, சொல்வளம் உடையதுதான்,ஆனால் -----etc
"Tamil is the most highly cultivated language and possesses the richest stores of indigenous literature " ஆனால்
The three classic languages of the world namely Sanscrit, Hebrew and Greek contains Tamil words in the vocabulary--Rys Davids,
எனும் மூலவேர் எங்கிருந்து -----_???

உலக இலக்கியங்கள் பலவற்றுக்கும் தாய்--------?? மொழி இலக்கியம் என்பதை எப்படி மறந்தோம்? பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இயற்றிய காலகட்டத்தில் 473 பேர் மட்டுமே அடையாளம் காட்டப்பெற்றனர், ஆங்கும் கூட முப்பதின் மேல் பெண்பாற்புலவர்கள் என்பதை பட்டியலிட்டு விளக்கினாள், சங்க இலக்கியத்தில் எத்துணையும் பொருட்கிசையா இலக்கணமில் கற்பனையை காணவே இயலாது.தொல்காப்பியனாரே உரிப்பொருள் அல்லன
மயங்கப்பெறும் என்றாரெனில் ----ஏன்? ஏன்? விளக்கினாள்.சான்றுகளோடு விளக்கினாள்.
இனி சேக்கிழாரின் பெரிய புராணம் காப்பியத்திற்கான இலக்கணமே இல்லை என்பது ஒரு சாராரின் கருத்து. ஏற்புடையதுதானா? தொடர்நிலைச் செய்யுளாய் பழஞ்சரிதத்தை உள்ளீடாக்கிய கற்பனையை கவிநூற எழுதப்பட்ட இப்புராணம் பெருங்காப்பியமே,
வரி வரியாய் விளக்கினாள். இலக்கணவரம்பும் இலக்கியப்பண்பும், சொல்லின் செல்வமும் தலை சிறந்து விளங்கும் தமிழின் சேய்மொழிகளாம், ,கன்னடம், துளு, மலையாளம்,தெலுங்கில் , தமிழ் எப்படி தேசியமொழியாக விரவி, ஒற்றுமையைப் புலப்படுத்துகிறது, எனத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பினாள்.
இனி சமணர்களும் ஐரொப்பியர்களும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு,
குலசேகர ஆழ்வார், கோவிலகம் கமலம் தம்புராட்டி,ரகுனந்த வர்மா, ராஜேந்திர நம்பூதிரி,
கன்னட ராஜாவின் மையலில் மயங்கிய தமிழ்ப்பெண் குந்தவையின் சுவைப்பா,
தெலுங்கு குறத்தியிடம் அடைக்கலம் போன உதிய பாண்டியனின் காதற்பா, , என இவர்கள் எல்லோருமே மொழிக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்களே, என இன்னும் இன்னும் கூட மழையாய் பொழிந்து விட்டு, இருக்கைக்கு வந்தமர்ந்தபோது, கொஞ்சம் ஆசுவாஸமாக இருந்தது. அடுத்து இறுதிப்பேச்சாளர்,முனைவர் திருவேங்கடம் பேசினார்.
மிக மிக சிறப்பாகப் பேசினார்.எப்பேர்ப்பட்ட தமிழறிஞர்கள் இவர்கள் தான் என்ற பிரமிப்பை மறுக்க இயலவில்லை.

தரமான , இலக்கிய நிகழ்வு என்பதில் கூட சம்சயமில்லைதான்.ஆனால், ஆச்சர்யம் அதுவல்ல. திருஷ்டிப்பொட்டுபோல் , அரசியல்வாதிகளின் பிச்சைக்காரன் வாந்தியெடுத்தாற்போன்ற குறுக்கீடு மட்டுமில்லாமலிருந்திருந்தால் , ---
நடுவர், அவையோரிடம் யாருக்கேனும் கேள்விகள் உண்டா, என்று கேட்க யாருக்குமே கேள்விகள் இல்லை என்றது இன்னொரு ஆச்சர்யம். இவர்கள் நிகழ்வுக்கடுத்து வில்லுப்பாட்டு, பிறகு மதிய உணவுக்கு அனைவரும் எழ, தோழிகள் அனைவரும் இவளை சூழ்ந்து கொள்ள, அருகே வந்தார் முனைவர் திருவேங்கடம். ”கமலாக்‌ஷி, உங்கள் பேச்சு-- ----’ முனைவர் கணேசன் , சபேசன் என , எலோருமே------
மற்ற நேரமாயிருந்தால் அவர்களது புகழுரையில் இவளும் மகிழ்ந்திருப்பாள், ஆனால் ஏனோ இவளால் சரளமாக உரையாடவே முடியவில்லை.

அப்பொழுது வயதான ஒருவர், முத்துசாமிசாரைவிட பெரிய மீசை வைத்துக்கொண்டிருந்தவர் அருகே வந்தார். என்னை தெரியுதா அம்மா? என்றுகேட்க, இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே, சட்டென்று நினைவு வரவில்லை. இவர்தான் பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்கள். அட, மரபுக்கவிஞர். சிங்கப்பூர் வந்தபோது இவர்களின் இலக்கியவட்டம் நிகழ்ச்சிக்கு, டாக்டர் திண்ணப்பன் சார் இவரை பேச அழைத்திருக்கிறார். கட்டுகட்டாக, இவரது புத்தகங்களில் சில இவளே கூட வாங்கியிருக்கிறாள்.
தமிழிலக்கியம் ,அதுவும் சங்க இலக்கியம் ----என்று அவர் இவளது உரையை சிலாகித்துவிட்டு, ----

முத்துசாமியை எனக்குத்தெரியும் அம்மா, கர்மவீரர், என்றும் மேலும் கூட அவர் அன்போடு பேசிக்கொண்டிருக்க, உணவுக்கு நேரமாகிவிட்டது என்று மங்கை நினைவுறுத்த, அவர் விடைபெற்றார்.உணவுஹாலை நோக்கி நடக்கும்போது, எதிரே வந்தவர் வணக்கம் கூறினார்.
அவருடனிருந்த முனைவர் கணேசன், இவர்தான் ஒளவை நடராசன் அய்யா அவர்கள், என்று அறிமுகப்படுத்தினார். என்ன சாத்வீகமான முகம் தெரியுமா? நமஸ்காரம் சார், என்றிவள் வணங்க, ”ஆழமான உரை அம்மா. மிக அருமையாகப் பேசினீர்கள் ,என்றவர், இவளைப் பற்றிக்கேட்க ராமானுஜம், முத்துசாமி, போன்றோரிடம் பயிற்சிக்கு வந்துள்ளேன், சார், என்று முடிக்குமுன், பேராசிரியர் ராமானுஜம் அவர்களைத் தெரியும் அம்மா, என்று கூற, மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது யாரோ, பின்னாலிருந்து வணக்கம் என்று
நாடகீய பாணியில் அழைக்க நடராசன் அய்யா விடைபெற்றார். யார் ? பட்டை உரிக்கும் அந்த வெயில் சீசனில் கறுப்புக்கணாடி அணிந்து,பெமூடாவில் கொஞ்சமும் நிகழ்வுக்குப் பொருத்தமில்லாத வேஷத்தில் யாரிந்த ஆள்?

”இன்றுமாலை அடியேனுடைய நூல் வெளியீட்டுவிழா கீழே 3வது மாடியில் நடக்க உள்ளது. தாங்கள் அவசியம் கலந்துகொள்ளவேண்டும், ஏதோ தமிழுக்கு என்னால் இயன்ற சிறு காணிக்கை “ என்றவாறே,படு ஸ்டைலாக கண்ணாடியைக்கழற்ற, இவளுக்கு நம்பவே முடியவில்லை. மலையாளி, தெலுங்கன்,கன்னடன் என காலையில் திட்டோ திட்டென்று திட்டினாரே, சாக்‌ஷாத் அதே அரசியல் வாதிதான்., காலையில் முண்டும் ஜிப்பாவும், ஒருமணிநேரத்தில் இப்படி ஒரு வேஷத்தில்,. இவள் புத்தகத்தை பெற்றுக்கொள்ளவில்லை.
பின் அழுத்தம் திருத்தமாகக் கூறினாள். ”ஞான் மலையாளி,எனக்கு நிங்ஙளின் நூலைப்படித்தறியும் ஆற்றல் இருப்பதாக நினைக்கவில்லை, “ என்று கூறிவிட்டு,
பட்டென்று முகத்தைத் திருப்பிக்கொள்ள, ”அட, மேடையில் அந்த போடு போட்டீங்களே”என்று அவர் விடாது இவளது முகத்துக்கு நேராகவே கேட்க,
i am sorry, i am a singaporean, i am leaving soon "என்று வேண்டுமென்றே ஆங்கிலத்தில் கூறிவிட்டு நடந்து விட்டாள். என்ன ? இப்பொழுது திருப்தியா?” என்று முனைவர் திருவேங்கடம் கேட்க, அப்பொழுதுதான் சிரிப்பு வந்தது.
பின் என்ன? பிறப்பால்,வளர்ப்பால், வாழ்வால், ரசனையால், உணவால், உணர்வால், உடையால் கூட , இவள் அப்பட்டமான மலையாளி தான். நிதர்சனம் எப்படி இல்லாமல் ஆகும்? தமிழை நேசிக்கலாமே தவிர, ------- ஆனால் பாரதி, எண்டெ பாரதி ,பாரதியை மட்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டேன், எந்த ஜம்பம் சிலிர்த்துக்கொண்டு வந்தாலும், பாரதியைப் பற்றி எந்த அசத்து, அசமந்தம் பேசினாலும் , சாட்டையடி கொடுப்பேன்.பாரதி, பாரதி தான் தமிழின் சிகரம்,. ---- என்ன இது ? கமலாக்‌ஷியின் கோபம் போய்விட்டது போலிருக்கிறதே?” இனி சகஜமாக பேசலாம்தானே?என்றவாறே சபேசன் சிரிக்க,
கமலாக்கா, என்று பொன்னுத்தாயி உலுக்க, தோழிகளிடமும், மற்றவர்களிடமும் உண்மையைக்க்கூறினாள் இன்னும் ஒருமணிநேரத்தில் இவள் விடை பெறவேண்டும்.
என்னம்மா , இன்றுமாலை வரை நிகழ்ச்சிகள் உண்டே?என்று திருவேங்கடம் சார், உரிமையோடு கோபித்துக்கொள்ள, வ்ருத்தமாகதான் இருந்தது.
இந்த ஜென்மத்து சுகிர்தமல்லவா இவர்களின் அன்பு? எப்படி மறப்பேன்? ஆனால் ,
பட்டாபிஷேகமே ஆனாலும்கூட, இன்னும் 2 மணிநேரத்தில், தமிழின் இன்றியமையாத இலக்கியவாதி ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது.
யாரவர் ? தெரியுமா? அசோகமித்திரன் சார் தான்? என்ன புறப்பட வேண்டாமா?

........... தொடரும்

Thursday, June 4, 2009

கூத்துப்பட்டறையில் - 12 கலிங்கத்துப்பரணி விம்மியதே ?

கலிங்கத்துப்பரணி விம்மியதே? தேம்பாவணி அழுததே???!!!

அற்புதமான இசைக்கச்சேரிக்குப் பிறகு, தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு கரகாட்டம்.
கூத்துப்பட்டறையில் படித்ததற்கும், இவர்களின் நிகழ்வுக்கும் நிரம்ப வேறுபாடிருந்தது.ஆனாலும் ரசித்துப்பார்க்கமுடிந்தது.
அடுத்துக்காப்பிக்கு எல்லோரும் எழ, தோழிகளோடு சென்று, சாயைக்கு கப்பில் வார்த்துக்கொண்டிருக்க, ”கமலாக்‌ஷி,” என்ற விளி. திடுக்கிட்டுத் திரும்பினால், Dr.ராஜமாணிக்கம், யாரோ 3 பேரோடு நின்று கொண்டிருந்தார்.
இவள் பெயர் படும் பாடு நினைத்தபோது ஏனோ சிரிப்பு வந்துவிட்டது.மலையாள அவையில் கமலம்.தமிழ்த்தோழிகட்கு கமலா, ஆசிரியர், மற்றும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே, இவளை முழுப்பெயரில் அழைப்பார்கள்.மலையாளிகட்கு மறந்தும் இவள் முழுப்பெயர் வராது. எல்லோருக்குமே கமலம்தான். அதனாலேயே இவளே கூட,கமலமாகிப்போனாள்.ஆனால் கமாலாக்‌ஷி, --
இதுவரை கேட்டே இராத பெயர். ஆனாலும் இவள் திருத்த முன்படவில்லை.எவ்வளவு அன்பாக அழைக்கிறார். எதிரில் நின்ற எல்லோருமே இவளைவிட எவ்வளவோ பெரியவர்கள் தான். ’நமஸ்காரம் சார்,” என்றிட, ”கமலாக்‌ஷி, இவர் முனைவர் திருவேங்கடம், இவர் புலவர் சபேசன், இவர் முனைவர் கணேசமூர்த்தி.இவர்கள் மூவரும் உங்கள் அமர்வில்தான் பேசுகிறாரகள்.”

கமலாக்‌ஷி எழுத்தாளர் கூட தெரியுமா? என்று ராஜமாணிக்கம் , பரஸ்பரம் அறிமுகப் படுத்த, பொல்லென்று வெளுத்த தலைமுடியோடு முனைவர் திருவேங்கடம் ஏனோ அச்சாவை நினைவு கூர்ந்தார். சபேசன் கேட்டார். ”என்ன செய்கிறீர்கள்? ”
”நிங்ஙளைப் போன்றோரிடம் தமிழ் பயின்று கொண்டிருக்கிறேன் சார்.”
”நம்பாதீர்கள், கமலாக்‌ஷி பேசும்போது உங்களுக்கே தெரியும் ”!, என்று ராஜமாணிக்கம் சார் மேலும் இவளை சிலாகிக்க, இவளுக்கு வெட்கமாகிவிட்டது.அதற்குள், அடுத்த நிகழ்வுக்கு நேரமாகிவிட்டது.அரசியல் வாதிகளின் உரைக்குப்பிறகு தான், இவர்கள் நிகழ்வு.
அதனால் முன்னேற்பாடாக, முனைவர் திருவேங்கடம், இவள், கணேசமூர்த்தி,சபேசன் என , முன்னிருக்கையிலேயே அமர்த்தப்பட்டார்கள்.

வழக்கமான அமர்க்களத்தோடே அரசியல்வாதிகளின் சரித்திரப்புகழ் பெற்ற சொற்பொழிவு . [செந்தமிழ்தேன்மொழி அழத்தொடங்கினாள்.] அரசியலில் அப்பொழுதுதான் பதவியிழந்த மூவர், ஒரு அமைச்சர் பெண்மணி, இன்னொரு எம்.பி. பெண்மணி, என பந்தா படுதா தொடங்கியது. அமைச்சர் பெண்மணி சிரித்துக்கொண்டேயிருந்தார்.எம்.பி. பெண்ணும்,இன்னொருவரும் உம்மென்றிருந்தார்கள். முக்கியப் பிரபலம் நிறுத்தி நிதானமாகப் பேசினார்.அடுக்கடுக்காய் மூன்று குற்றச்சாட்டை அடுக்கினார். அரசு இவ்வளவு வசதிகள் செய்தும் இளைஞர்கள் ஏன் வசதிகளைப் பயன்படுத்துவதில்லை? பிறகு அவர் சின்ன வயதில் கஞ்சிக்கு பட்ட பாட்டை , பிறகு எப்படி படிப்படியாய் முன்னேறினார் என்பதையெல்லாம்
விளக்கினார். தனக்கிருந்த இந்த முனைப்பு ஏனினின்றைய இளைஞர்களிடம் இல்லை” என்றெல்லாம் கேட்டு ஒருவழியாக அமர்ந்தார். அடுத்து அமைச்சர் பெண்மணி எழுந்தார்.”பெண்களெல்லாம் எவ்வளவுகாலத்துக்கு இப்படிகட்டுப்பெட்டிகளாகவே வாழ்வது, கூட்டை விட்டு வெளியே வாருங்கள்?

பிள்ளை பெறுவதும், ஆம்பிளைக்கு சோறு பொங்கிப்போடுவதும் மட்டும்தான் நம்ம வேலயா? நடிகனின் காதலி நாட்டை ஆள வந்துவிட்டாள், நாம் சாதனை செய்யவேண்டாமா? ”என்று கேட்க, அக்குளில் கிச்சு கிச்சு மூட்டினாற்போல் சிலர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உடனே அம்மையாருக்கு வேகம் கூடிற்று.பிறகு தேம்பாவணியை சம்பந்தமேயில்லாமல் கொண்டுவந்தார். ஆனால் சத்யமாயிட்டும் அது தேம்பாவணியல்ல.
அதைவிடக் கொடுமை அவர் உதாகரணம் காட்டிய பெண்களின் பெயர்கள். தப்பு.,தப்பு மஹா மஹா தப்பு. சாதனை செய்த இந்தியப்பெண்மணிகளுக்கா பஞ்சம்? மணக்க மணக்க, அவர்களின் பெயர்களை கண்ணிலொற்றி சொல்லலாமெ? தேவதாசிமுறைக்கு சாவுமணியடித்த மூவலூர் ராமாமிர்தம்,போராடிக்கல்வி கற்ற ருக்மா, ரமாபாய்,முத்துப்பழனி, தில்லையாடி வள்ளியம்மை, குடியாலோ, பிக்காஜி,எனப் பட்டியலிட்டால் எழுத, எழுதத் தீருமா?? அவரை உட்கார வைக்க காதோரம் ஏதோ கிசுகிசுக்க வேண்டியிருந்தது.

போனால் போகிறதென்று மனமில்லாமல் போய் அமர்ந்தார். அடுத்து எம்.பி. பெண்மணி உம்மென்ற முகத்தோடே மைக்கைப் பிடித்தார்.இன்று இலக்கியம் என்ன செய்கிறது? என்று தொடங்கினார். சங்க காலக் கவிதைகள் மட்டுமே கவிதைகள்,என்றவர் ஒளவையாரைத்தவிர
யாரையுமே உவமானம் காட்டவில்லை.பாண்டியனின் மனைவி ஒரு கவிதை சொன்னாள், என்று மேலும் தொடர்ந்தார். நம்பவே முடியவில்லை. ஆதிமந்தியார், வெள்ளிவீதியார், காக்கைப்பாடிணியார்,நச்செள்ளையார், கச்சிப்பேட்டு நன்னாகையார்,, குறமகள் இளவெயினி,ஒக்கூர் மாசாத்தியார், அள்ளூர் நன்முல்லையார்,காவற்பெண்டு, நக்கண்ணையார்,நப்பசையார், நல்வெளியார்,என சங்ககாலத்தில், கல்வியில் சிறந்து விளங்கிய , பெருமைக்குரிய பெண்புலவர்களைப் பட்டியலிட்டால் தீருமா? ஆனால் எம் .பி. பெண்மணியின் உரையில் அவர்கள் யாருமே வரவில்லை.
வேடிக்கை என்னவென்றால் அவர் பேசியது கூட கவி உரையாம்?
மூன்றாமவர் புயலாய் மைக்கைப்பிடித்தார். சூறாவளியாய் பேச்சைதொடங்கினார்.சீற்றத்தோடு அவர் மைக்கைப்பிடிக்க, தோள்துண்டு கூட பதறிக்கீழே விழுந்தது. எடுத்துக்கொடுக்க வந்த ஒரு ஜால்ராவைப்பார்த்து, பார்வையாலேயே,வேண்டாம் என்று ஒரு சீறல்.
தொடக்கமே, செந்தமிழே, என் தமிழே, ‘என்று தொடங்கியது கேட்க இன்பமாகத்தானிருந்தது. அடுத்துப் பாண்டியனின் வரலாறிலிருந்து தொடங்கினார்.
கொஞ்சமும் பொருத்தமில்லாமல், திடீரென்று,கலிங்கத்துப்பரணியை உவமானம் காட்டினார். சத்யமாயிட்டும் அது கலிங்கத்துப் பரணிப்பா அல்ல. புகழேந்திப் புலவரின் வெண்பாப் பாடல் அது. குறுகத்தரித்த குறள் ,எனக் குறளையும் வள்ளுவரையும் துணைக்கழைத்தார். சட்டென்று அவருக்கு உக்கிரம் ஏற்பட்டது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதால்தானே, மலையாளத்தானும், கன்னட------, தெலுங்கு----என எல்லா மானிலக்காரனுமே இங்கே வந்து கொட்டமடிக்கிறார்கள்? நம் தாய்ப்பாலைக்குடித்தே நமக்கே குழி வெட்டுகிறார்களே? எங்கே? தெலுங்கானாவில் போய் நாம் இடம் கேட்டால் அவன்கள் கொடுப்பார்களா? அண்டை மானிலம்தானே என்று உட்கார இடம் கேட்டால் கன்னட--- நம்மை உட்கார வைப்பானா?ஆனால் கூத்தாடியாக வந்த
மலையாளத்தான் ,மஞ்சள் துணி போட்டு நம் கழுத்தையே அறுத்தானே? அவனை நம்மால் என்ன செய்ய முடிந்தது? ---and etc----

அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்துப்போனாள். அவ்வளவு நேரமுமிருந்த உற்சாகம், மகிழ்ச்சி போன இடம் தெரியவில்லை. படித்தது, வளர்ந்தது, வாழ்வது எல்லாமே, நாகரீகமான ,multi racial country யில்தான். இந்த நிஷ்டூரம், இந்த வேற்றுமை, அவள் அறியாத விஷயங்கள். அமிலக்கட்டி உடைந்து விஷத் திராவகம், துள்ளத்துடிக்க அவள் மேல் கொட்டப்பட்டதாய் , துடித்துப்போனாள். , மலையாளத்தான், தமிழிலிருந்து பிச்சை கேட்ட மலையாளத்தான், என்ற ஒவ்வொரு விஷ அம்புக்கும் , நெஞ்சுடைந்து அழுகை வந்தது. எந்த ஜென்மத்துக்கு கர்மவினை இது? எந்தக்குற்றமுமே செய்யாமல்,ஏன்? ஏனிந்த தண்டனை? விரல் நீட்டி குற்றம் சாட்டப்பெற்ற,கொலைக்குற்றவாளியாய் ,
அவளால் தாங்கவேமுடியவில்லை. கண்ணீரை அடக்க பகீரதப் பிரயத்னம் வேண்டியிருந்தது. தக்‌ஷண்மே அங்கிருந்து வெளியேறி கணவருக்கு போன் செய்து அழவேண்டும்போலிருந்தது.[என்ன? இந்த ஜென்மத்தில் இனி தமிழ் நிகழ்வுக்கே கணவர் அனுப்பமாட்டார்.]
ஆனால் அவளால் அசையக்கூட முடியவில்லை. ஒரு க்‌ஷணம் தான் இருக்குமிடம், சூழ்னிலை, எல்லாமே மறந்துபோய் ஒரு தாவரம் போல் அமர்ந்து விட்டாள்.
வெட்கக்கேடு என்ன தெரியுமா? தமிழ், தமிழ், என்று இப்படி அடுக்குமொழி வசனம் பேசும் இந்த ஆளுக்கு, தமிழ் வரலாறே தெரியவில்லை. தமிழின் மாண்புமிகு சான்றோர்களின் பெயர்கள் கூடத்தெரியவில்லை. வெறும் அரை வேக்காட்டுப் பிதற்றல்தான்.
அடுத்து இன்னொரு கண்டனம், முதலில் இந்த-------பாப்பத்திகளை --- ஆணவத்தை அடக்கவேண்டும்? இவளுக்குப்புரியவில்லை. பாப்பாத்தி என்றால் என்ன பொருள்? தமிழில் யார் யார் பேரிலெல்லாம் இவருக்குக் கோபம்? நெஞ்சு விம்மியது, கட்டுப்பாட்டையும் மீறி அவள் விசும்ப, ”ஸ்ஸ்ஸ், அழக்கூடாது.அவன் ஆளுங்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட கோபத்தில் உளறிக்கொண்டிருக்கிறான்.அதற்குப்போய் அழலாமா?”
அச்சாமாதிரி தோற்றம் தந்த முனைவர் திருவேங்கடம், இவளத்தேற்ற,வாயில் கைக்குட்டையை அழுத்திக்கொண்டு, அவள் உடைந்து போய் அழுதாள்.
”கமலாக்‌ஷி, ரொம்ப புத்திசாலிப்பெண் என்று ராஜமாணிக்கம் சொன்னாரே, என்ன.இது? அவன் யாரைத் திட்டவில்லை? பிராமணர்களை இப்படி திட்டுகிறானே?
இப்பொழுது பிராமணர்கள் பிராமணியம் பேசுவதில்லை.இவர்கள்தான் பேசுகிறார்கள், இப்படியொரு வக்கிர இன்பம்?முதலில் கண்ணீரைத்துடையுங்கள், “
என்று முனைவர் கணேசன் ஆறுதல் கூற அப்பொழுதுதான் அவள் கேட்டாள் .
சார், பாப்பாத்தி என்றால் யார்? புலவர் சபேசன் விளக்கினார். ஆத்திரம்,அழுகை , இயலாமை, எல்லாமுமாய் , தலை வலித்தது.

எப்பொழுது அரசியல்வாதிகள் முடித்தார்கள் என்றுகூடத் தெரியவில்லை. இவர்கள் நிகழ்வுக்கு முனைவர் திருவேங்கடம் அழைத்தபோதுதான் உணர்வே வந்தது.
எல்லோருடனும் மேடையேறியபோது, முனைவர் கணேசன் , ஒரு தண்ணீர் பாட்டில் மூடியைத்திறந்து, முதலில் இதைக் குடியுங்கள், என்றார்.
2 மிடறு குடித்தபிறகு ஆஸ்வாசம் வந்தது, .என்ன, கமலாக்‌ஷி? என்று, திருவேங்கடம் சார் பார்க்க, சிரிப்பு வந்தது. தமிழர்கள் நல்லவர்கள். மிக மிக அன்பானவர்கள். கமலாக்‌ஷிக்கு பேச வேண்டிய தலைப்பு ஞாபகத்துக்கு வந்தது.


......தொடரும்