Wednesday, June 17, 2009

கூத்துப்பட்டறையில் - 14 - சந்தனக்காற்றே , செந்தமிழ் ஊற்றே

கூத்துப்பட்டறையில -- 14

சந்தனக்காற்றே ,செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப்பாட்டே வா வா
காதோடுதான் நீ பாடும் ஓசை
என்னோடு நீ வா ??

இன்னும் ஒரு மணிநேரத்தில் பிரியப்போகிறோம் , என்ற பரபரப்பில் தோழிகள் புகைப்படம் எடுக்கத் தவித்தார்கள். இவளது கேமரா அந்த சமயம் பார்த்து மக்கர் செய்தது. மானாட்டில் பலருக்கும் உதவிய கேமரா, இவளது சொந்த உபயோகம் என்று வந்தபோது
முரண்டு பிடித்தது. இவளுக்கானால் தலைவலி முணுமுணுவென்று, நெற்றிப்பொட்டில் நெறியத்தொடங்கியது. பட்டை உரிக்கும் வெயில், காலையிலிருந்தே அனுபவித்த டென்ஷனா, தெரியவில்லை. நல்ல சமயம் நோக்கி ஆபத்பாந்தனாய் கணேசமூர்த்தி, தன்னுடைய கேமராவில் அனைவரையும் போட்டோ எடுத்தார்.
அக்நிபுத்திரன், சடகோபன், ராசையா, எனப்பல பேராசிரியர்கள் அன்போடு வந்து பேச, வேகம் வேகமாக இவளை நோக்கி வந்தார் Dr.ராஜமாணிக்கம். ”கமலாக்‌ஷி! இன்றே புறப்படுகிறீர்களாமே? ”இன்னும் ஒரு மணி நேரத்தில் சார், நாளை மறுநாள், சிங்கப்பூருக்குத் திரும்புகிறேன்..இன்று மாலைக்குள் எண்டெ எல்லா இலக்கிய நிகழ்வுகளையும் முடித்துக்கொண்டால்தான், நாளை புறப்பட ஏற்பாடு செய்யமுடியும்.” அதுவரை ஏன் நிற்கிறீர்கள்? இப்படி அமர்ந்து பேசலாமே, என்று, மங்கையும், அன்னபூரணியும் அருகில் அழைக்க, அனைவரும் அங்குள்ள லோபியிலமர்ந்து கொண்டோம்.
”ஒரே ஒரு கேள்வி அம்மா! சிரமமில்லையே?? என்று ராஜமாணிக்கம் சார் தயங்க, ” கேளுங்கள் சார்” என்றாள். திரமிளம் என்ற சொல்லிலிருந்துதான் -----பிறந்தது, என்பதற்கான விளக்கம் எப்படி என்று கொஞ்சம் விளக்கமுடியுமா ,கமலாக்‌ஷி??
மேடையிலேயெ இவர் கேட்டிருந்தால் இவள் உற்சாகமாக பதில் சொல்லியிருக்கலாம்தான்.ஆனால் இப்பொழுது தலைவலி,புறப்படும் டென்ஷன்,
என பரிதவித்துக்கொண்டிருக்க, திரமிள விளக்கமா? என்றாலும் தமிழறிஞர், மதிப்பிற்குரிய அன்பான மனிதர், அவரை அலட்சியப்படுத்தமுடியவில்லை.

’”கால்ட்வெல்லின் இலக்கிய ஆய்வில்சான்றுள்ளது. வி,ஆர், வெங்கடேச சர்மாவின் தமிழ் வரலாறு [17ம் நூற்றாண்டு நூல்,] நூலில், நீலகண்ட சாஸ்திரியின் history of south india, roots of languages, எனும் நூல்களில் விவரித்துள்ளனர்.
செப்பேடுகளின் ஆய்வு ---பாண்டியவர்மா எழுதிய நூல்[தமிழில், மலையாளத்தில், ஆங்கிலத்தில்] என 3 மொழிகளிலும் , இதற்கான விளக்கம் தெளிவாக உண்டு. ஆனால் இவையொன்றும் இந்த நூற்றாண்டு நூல்களே அல்ல. [18,19]
ஆனால், 20ம் நூற்றாண்டு சண்முகம் பிள்ளை,எனும் நூலார், திரமிளம், திராவிடம் போன்ற சொற்கள் தமிழ் எனும் பழஞ் சொல்லிலிருந்துதான், தோன்றியிருக்கவேண்டுமென்கிறார். இதற்கும் மறுப்பாய், புனரலிங்கம் பிள்ளையின் தொல்காப்பியம் கண்ட தமிழ், எனும் நூலில் வேறுமாதிரி சித்தரிக்கிறார்.

ஆய்வாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. இதில் பரந்து பட்ட பார்வை எது, என்பதை பேராசிரியர் நிங்ஙளைப் போன்றோர் தான் , பகுத்தறிந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.” ’அடடா! இந்த விளக்கங்களே போதும் அம்மா! என்று சொல்லி முடிக்குமுன், கமலாக்கா, “என்ற விளி. திரும்பினால் 3 வயசுக்குழந்தையோடும்,
கணவரோடும் பொன்னுத்தாயி! இவுங்க தான் எங்க மாமன் , இது எங்க பாப்பா?! ஏனோ பொன்னுத்தாயியின் கணவர் அனியாயத்துக்கு வெட்கப்பட்டார்.
ஆனால், குழந்தைப்பாப்பா, மிட்டாய்கலரில் கவுன் போட்டு, உப்பிய கன்னங்களும், கன்னத்தில் பெரிய திருஷ்டிப்பொட்டுமாய், கண்டவுடனேயே
நெஞ்சை அள்ளினாள். ‘வா! என்று கையை நீட்டியதுமே, எந்த பிகுவுமே இல்லாமல், தாவி இவளிடம் வந்த குழந்தையை அப்படியே நெஞ்சோடணைத்துக் கொண்டபோது மனசெல்லாம் விகசித்து சிலிர்த்தது. அப்பொழுதுதான் கவனித்தாள். தலைமுடியை இறுக்கிக்கட்டி, கூம்பாய் நடு உச்சியில் அந்த இறுக்கம் ---, சகலமும் பதறியவளாய்
குழந்தையின் சிரசின் நடு உச்சியிலிருந்த ரப்பர்பேண்டை அவிழ்த்தெறிந்து பொன்னுத்தாயியை கடிந்து கொண்டாள். “நடுசிரசில் ஒருபோதும் இப்படிக் கட்டாதே! அது குழந்தைக்கு எவ்வளவு பாதிப்பு தெரியுமா>?” என்று விளக்க, ‘பொன்னுத்தாயி! அப்படித்தான் அக்கா! படிச்சிருக்கே தவிர, அதுக்கு ஒரு மண்ணும் தெரியாதுக்கா”!என்று மாரிமுத்து ,கணவராய் லட்ஷணமாய் சொல்ல, பட்டுப்பாப்பா, தன் கரிய விழிகளால் இவளையே உறுத்து நோக்கி, பின் சிரிக்க,, ஒரு நிமிஷம் உலகமே மறந்து போயிற்று
தங்கக்குட்டியை மடியில் உட்கார வைத்து,,இவளது சீப்பால் முடியை சீவி, பெளடரைத் தீற்றி, அழகுக்கு அழகு சேர்த்து,, “இந்தா” என்றிவள் நீட்ட, பணத்தை கச்சிதமாக கண்மணி வாங்க்கிகொள்ள , அந்த சமத்துக்கு கட்டி முத்தமிடாமலிருக்கமுடியுமா?
தங்கத்தை மார்போடணைத்தபோது தலைவலிகூட மட்டுப்பட்டதுபோல் தானிருந்தது. பட்டுப்பாப்பாவை கொடுக்கவே மனமில்லை, அதற்குள், சா.கந்தசாமியின் மகன் சரவணன் வந்துவிடவே,அனைவரிடமும் பிரியாவிடை பெற்றாள். தோழிகள் அணைத்து விடைதர,
பொன்னுத்தாயி மட்டும், ”கமலாக்கா! ஞான் உங்களை முத்தமிடலாமா?! என்று குறும்பாகக் கேட்க, “வேண்டாம்!அந்த முத்தத்தை மாரிமுத்துவுக்குக் கொடு? ” என்றிவளும் குறும்பாகச் சொல்ல ,கொல்லென்று எல்லோருமே சிரிக்க, அந்த சிரிப்பை ரசித்தவாறே, காரிலேறினாள்.

சா.கந்தசாமியும்,மனைவியும் அன்பொழுக வரவேற்றுப் பேசிக்கொண்டிருக்கும்போதே, உள்ளே நுழைந்த மெலிந்த உருவத்தைக்கண்டு , தனை மறந்து எழுந்து நின்றாள். ‘நமஸ்காரம் சார், ‘என்றிவள் வணங்க, அசோகமித்திரன் சார் ”வணக்கம் அம்மா என்றார்.தமிழின் முதல் குறியீட்டுநாவல், அசோகமித்திரனின் தண்ணீர்,
தான் என்பார் ந.முத்துசாமி. இவரது, கரைந்த நிழல், ஒற்றன், தண்ணீர், ,என 3 நாவல்களையும் மலையாளத்தில் மதிப்பீடு செய்த கமலாதேவியின் கூற்று,
’Non-fiction வடிவ ரீதியை தமிழில் முதன்முதலாக அசோகமித்திரனின் எழுத்தில் தான் காண முடிகிறது”என்பதாகும். எளிமையான மொழிநடையில்,,எந்த அலங்காரமுமே இன்றி, பாசாங்கற்ற நடையால்,எழுதுவதைப்போலவே,நேரிலும் அவ்வளவு எளிமையாகப்பேசினார்.
சமகால இலக்கிய பரிமாணம் பற்றி தனக்கே உரிய பாணியில் விளக்கினார்.
இலக்கியத்தில் நவீனம், பழமை, என்ற ஜோடனையே தேவையற்றது அம்மா! வாசகனின் மனதில் கதை உயிர்ப்புடன் ஜீவித்திருக்குமாயின் அதுதான் அம்மா அவனது இலக்கிய வெற்றி.

மிகவும் பிடித்தது இந்த பதில்.பளிச்சென்று அவளது கருத்துக்களை முன்வைக்க முடிந்தது.
பூமணியின் நைவேத்யம், கந்தர்வனின் சாசனம், ஜெயந்தனின் சாய்வு, ப்ரபஞ்சனின் மீன்,,and etc------எனப்பட்டியலிட்டால், தமிழில் கதை சொல்லிகளுக்கா பஞ்சம்?ஒவ்வொரு எழுத்தாளனும் ஒவ்வொரு நடையால் அவளைத் திகைக்க வைத்திருக்கிறார்கள்?
கற்கக்கசடற, ஈஷ்வரோ ரக்‌ஷது., கொசு, ஊமங்காடை,திருமுகப்பில்,சுழல்பந்து, என எண்ணிலடங்கா, தமிழ்ச்சிறுகதைகள் இவளை கவர்ந்துள்ளது.
பலரும் அவர்களது வட்டார வழக்குத் தமிழால் இவளைத் திணறடித்திருக்கிறார்கள்.ஆனாலும் இவள் தமிழ் பயின்றாள் . அவர்கள் எல்லோரிடமுமே இவள் தமிழை திணறத் திணற , படித்திருக்கிறாள். ஆனால் இவர்களுக்கும் முந்தைய எழுத்தாளர்களின் உன்னதங்களுக்கு முன்னே ஒப்பீடு செய்ய முடியுமா? யார் உசத்தி? யார் மட்டம்?எல்லோருமே உசத்திதான், தரமான கதை புனையும் எல்லோருமே அருமைதான்.கதை சொல்லும்போதே வாசகர்களூடே நெருக்கமாகும், எழுத்தின் லாவகம் யாருக்கிருந்தாலுமே அது நைவேத்யமே.பிரதமன் ருஜி என்றால் சர்க்கரைப்பொங்கல் என்ன மட்டமா? கோழியும் ,இறைச்சியும் ஒருவகைப்பித்து, என்றால்,கருவாட்டுக்குழம்பும் , மொச்சைக்காய் கறியும் எதில் குறைந்துவிட்டது?
[சரியாகத்தெரியவில்லை, மொச்சைக்காயா? மொச்சைக்கட்டையா?] இப்படி நூற்றுக்கணக்கில் தமிழில் அற்புதங்கள் சிருஷ்டிக்கும் எழுத்தாளர்களை ஞான் சுட்டுவேன். ஆனால் , என்டெ, என்டெ இஷ்டப்பட்ட எழுத்தில் stream of conciousness உத்தியை தமிழில் கையாண்ட, ல. ச.ரா.வின் எழுத்து மெய்ம்மறக்கச்செய்த எழுத்தாக்கும்.

சாரே! ல.ச. ராவின் அனைத்து எழுத்துக்களுமே, என்டெ இஷ்டப்பட்ட எழுத்து தான் தெரியுமா? ஞான் மட்டுமல்ல, சுஜாதாவே ஒருமுறை ல.ச.ரா.வின் பாற்கடலுக்கீடான சிறுகதை தமிழில் இதுவரை வெளி வந்ததுண்டா? என்றாரே? இன்றும் கூட ரசித்து மயங்கும் உத்தியில் இப்படியும் அல்புதம் உண்டு. ஆனால் தப்புத்தப்பாய் வரும் சில மதிப்பீடுகள் காணும் போது கண்ணில் ரத்தம் வருகிறது. தத்துப்பித்தென்று எதையாவது எழுதிவிட்டால் சாஹித்யம் மன்னிக்குமா நம்மை? எந்த ஜனரஞ்சக பத்திரிக்கை புகழுமே இன்றி, சிற்றிதழ்களில் மட்டுமே எப்பொழுதாவது மின்னல் தெறித்தாற்போல் எழுதிவரும் எழுத்தாளர்களை ஞான் தெறிவு செய்துள்ளேன்.தமிழில் நனவோடை உத்தியை நமக்கு அறிமுகப்படுத்திய புதுமைப்பித்தன் நமக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம்
இந்த முத்துத்தெறிக்கும் எழுத்தாளர்களும் எனக்கு,----------என்றெல்லாம் இவள் தன் கருத்துக்களைச்சொல்ல, ரசித்துக்கேட்டார். பின் அசோக மித்திரன் சார்,
புதுக்கவிதை, நவீன நாடகப்பார்வை, முத்துசாமி சாரிடம் தனக்குள்ள நட்பு,என தொடர்ந்தார்,

..........தொடரும்

No comments:

Post a Comment