Tuesday, June 9, 2009

கூத்துப்பட்டறையில் -- 13

கூத்துப்பட்டறையில் --13


கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ்ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?”-------[பரஞ்சோதி முனிவர்]

முனைவர் கணேசமூர்த்தியின் உரை தொடங்கிய பிறகுதான், சுற்றுச்சூழலே உணர்வில் உறைத்தது. உள்ளூர கனன்று கொண்டிருந்த கோபத்தை மறக்க ,அவையை நோக்கியபோது, இவர்கள் எழுந்து வந்த இருக்கையில், அருமைத்தோழிகள் மங்கை, கீதா, அன்னபூரணி, என நிறைந்து அமர்ந்திருந்தார்கள். இவளை நோக்கி, மகிழ்ச்சியோடு கை காட்ட,
இவளால் கை காட்ட முடியவில்லை. ஸ்க்ரிப்டில் மீண்டும் ஒருமுறை கண்களை ஓட்டினாள்.
முனைவர் கணேசனின் உரை அசலாயிட்டும் ஒரு பேராசிரியரின் உரை.ஆழமாக ஆராய்ந்து, மணிமணியாய் எடுத்துக்காட்டினார்.

அடுத்து புலவர் சபேசன், இவரது பார்வை மற்றொரு கோணம். துளிதுளியாய் இவள் உடம்பில் உயிர் ரசம் ஏறியது.மூன்றாமவள் --இவளது உரைதான். எழுந்து நிற்கவே கால்கள் நடுங்கியது. ’ கமலாக்‌ஷி”!என்று பக்கவாட்டில் அன்புக்கட்டளை வேறு.
[Language and literature--மொழியும் இலக்கியமும் கூட இவளது உரையில் ஒரு அங்கமே.] மலையாள அவையில் குறிப்பு கூட வேண்டாம், கடகடவென்று அருவியாய் பொழிய முடியும். தமிழில் அந்த ஆற்றல் இல்லை .

மொழிச்சரளத்தில் சிரமம் என்பதால் எப்பொழுதுமே, எழுதி வைத்துக்கொண்டுதான் பேசுவாள்.ஆனால் அதிசயம் நிகழ்ந்தது. மைக்கைப் பிடித்தபோது, அம்பிகை, ஈஷ்வரி கடாக்‌ஷத்தில் கம்பீரம் தானே வந்தது. முதல் பாராவுக்கு மட்டுமே பார்க்க வேண்டியிருந்தது. பிறகு ஸ்க்ரிப்டே தேவைப்படவில்லை. தனை மறந்தாள்.

[இவள் உரையிலிருந்து குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே கீழே தந்துள்ளேன்.]

சங்கமருவிய காலத்திலிருந்து, பல்லவர், சோழர், நாயக்கர், ஐரோப்பியர், எனத்தொடங்கி,வடமொழி,கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், போன்றமொழிகள் வழக்கொழிந்தும், தமிழ் பிறந்த சரிதம் என்ன? திரமிளம் என்ற சொல்லிலிருந்து தமிழ் பிறந்தது என்பது சரிதானா? சுமேரிய நாகரீகம், சுமேரிய மொழி, சொல்வளம் உடையதுதான்,ஆனால் -----etc
"Tamil is the most highly cultivated language and possesses the richest stores of indigenous literature " ஆனால்
The three classic languages of the world namely Sanscrit, Hebrew and Greek contains Tamil words in the vocabulary--Rys Davids,
எனும் மூலவேர் எங்கிருந்து -----_???

உலக இலக்கியங்கள் பலவற்றுக்கும் தாய்--------?? மொழி இலக்கியம் என்பதை எப்படி மறந்தோம்? பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இயற்றிய காலகட்டத்தில் 473 பேர் மட்டுமே அடையாளம் காட்டப்பெற்றனர், ஆங்கும் கூட முப்பதின் மேல் பெண்பாற்புலவர்கள் என்பதை பட்டியலிட்டு விளக்கினாள், சங்க இலக்கியத்தில் எத்துணையும் பொருட்கிசையா இலக்கணமில் கற்பனையை காணவே இயலாது.தொல்காப்பியனாரே உரிப்பொருள் அல்லன
மயங்கப்பெறும் என்றாரெனில் ----ஏன்? ஏன்? விளக்கினாள்.சான்றுகளோடு விளக்கினாள்.
இனி சேக்கிழாரின் பெரிய புராணம் காப்பியத்திற்கான இலக்கணமே இல்லை என்பது ஒரு சாராரின் கருத்து. ஏற்புடையதுதானா? தொடர்நிலைச் செய்யுளாய் பழஞ்சரிதத்தை உள்ளீடாக்கிய கற்பனையை கவிநூற எழுதப்பட்ட இப்புராணம் பெருங்காப்பியமே,
வரி வரியாய் விளக்கினாள். இலக்கணவரம்பும் இலக்கியப்பண்பும், சொல்லின் செல்வமும் தலை சிறந்து விளங்கும் தமிழின் சேய்மொழிகளாம், ,கன்னடம், துளு, மலையாளம்,தெலுங்கில் , தமிழ் எப்படி தேசியமொழியாக விரவி, ஒற்றுமையைப் புலப்படுத்துகிறது, எனத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பினாள்.
இனி சமணர்களும் ஐரொப்பியர்களும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு,
குலசேகர ஆழ்வார், கோவிலகம் கமலம் தம்புராட்டி,ரகுனந்த வர்மா, ராஜேந்திர நம்பூதிரி,
கன்னட ராஜாவின் மையலில் மயங்கிய தமிழ்ப்பெண் குந்தவையின் சுவைப்பா,
தெலுங்கு குறத்தியிடம் அடைக்கலம் போன உதிய பாண்டியனின் காதற்பா, , என இவர்கள் எல்லோருமே மொழிக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்களே, என இன்னும் இன்னும் கூட மழையாய் பொழிந்து விட்டு, இருக்கைக்கு வந்தமர்ந்தபோது, கொஞ்சம் ஆசுவாஸமாக இருந்தது. அடுத்து இறுதிப்பேச்சாளர்,முனைவர் திருவேங்கடம் பேசினார்.
மிக மிக சிறப்பாகப் பேசினார்.எப்பேர்ப்பட்ட தமிழறிஞர்கள் இவர்கள் தான் என்ற பிரமிப்பை மறுக்க இயலவில்லை.

தரமான , இலக்கிய நிகழ்வு என்பதில் கூட சம்சயமில்லைதான்.ஆனால், ஆச்சர்யம் அதுவல்ல. திருஷ்டிப்பொட்டுபோல் , அரசியல்வாதிகளின் பிச்சைக்காரன் வாந்தியெடுத்தாற்போன்ற குறுக்கீடு மட்டுமில்லாமலிருந்திருந்தால் , ---
நடுவர், அவையோரிடம் யாருக்கேனும் கேள்விகள் உண்டா, என்று கேட்க யாருக்குமே கேள்விகள் இல்லை என்றது இன்னொரு ஆச்சர்யம். இவர்கள் நிகழ்வுக்கடுத்து வில்லுப்பாட்டு, பிறகு மதிய உணவுக்கு அனைவரும் எழ, தோழிகள் அனைவரும் இவளை சூழ்ந்து கொள்ள, அருகே வந்தார் முனைவர் திருவேங்கடம். ”கமலாக்‌ஷி, உங்கள் பேச்சு-- ----’ முனைவர் கணேசன் , சபேசன் என , எலோருமே------
மற்ற நேரமாயிருந்தால் அவர்களது புகழுரையில் இவளும் மகிழ்ந்திருப்பாள், ஆனால் ஏனோ இவளால் சரளமாக உரையாடவே முடியவில்லை.

அப்பொழுது வயதான ஒருவர், முத்துசாமிசாரைவிட பெரிய மீசை வைத்துக்கொண்டிருந்தவர் அருகே வந்தார். என்னை தெரியுதா அம்மா? என்றுகேட்க, இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே, சட்டென்று நினைவு வரவில்லை. இவர்தான் பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்கள். அட, மரபுக்கவிஞர். சிங்கப்பூர் வந்தபோது இவர்களின் இலக்கியவட்டம் நிகழ்ச்சிக்கு, டாக்டர் திண்ணப்பன் சார் இவரை பேச அழைத்திருக்கிறார். கட்டுகட்டாக, இவரது புத்தகங்களில் சில இவளே கூட வாங்கியிருக்கிறாள்.
தமிழிலக்கியம் ,அதுவும் சங்க இலக்கியம் ----என்று அவர் இவளது உரையை சிலாகித்துவிட்டு, ----

முத்துசாமியை எனக்குத்தெரியும் அம்மா, கர்மவீரர், என்றும் மேலும் கூட அவர் அன்போடு பேசிக்கொண்டிருக்க, உணவுக்கு நேரமாகிவிட்டது என்று மங்கை நினைவுறுத்த, அவர் விடைபெற்றார்.உணவுஹாலை நோக்கி நடக்கும்போது, எதிரே வந்தவர் வணக்கம் கூறினார்.
அவருடனிருந்த முனைவர் கணேசன், இவர்தான் ஒளவை நடராசன் அய்யா அவர்கள், என்று அறிமுகப்படுத்தினார். என்ன சாத்வீகமான முகம் தெரியுமா? நமஸ்காரம் சார், என்றிவள் வணங்க, ”ஆழமான உரை அம்மா. மிக அருமையாகப் பேசினீர்கள் ,என்றவர், இவளைப் பற்றிக்கேட்க ராமானுஜம், முத்துசாமி, போன்றோரிடம் பயிற்சிக்கு வந்துள்ளேன், சார், என்று முடிக்குமுன், பேராசிரியர் ராமானுஜம் அவர்களைத் தெரியும் அம்மா, என்று கூற, மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது யாரோ, பின்னாலிருந்து வணக்கம் என்று
நாடகீய பாணியில் அழைக்க நடராசன் அய்யா விடைபெற்றார். யார் ? பட்டை உரிக்கும் அந்த வெயில் சீசனில் கறுப்புக்கணாடி அணிந்து,பெமூடாவில் கொஞ்சமும் நிகழ்வுக்குப் பொருத்தமில்லாத வேஷத்தில் யாரிந்த ஆள்?

”இன்றுமாலை அடியேனுடைய நூல் வெளியீட்டுவிழா கீழே 3வது மாடியில் நடக்க உள்ளது. தாங்கள் அவசியம் கலந்துகொள்ளவேண்டும், ஏதோ தமிழுக்கு என்னால் இயன்ற சிறு காணிக்கை “ என்றவாறே,படு ஸ்டைலாக கண்ணாடியைக்கழற்ற, இவளுக்கு நம்பவே முடியவில்லை. மலையாளி, தெலுங்கன்,கன்னடன் என காலையில் திட்டோ திட்டென்று திட்டினாரே, சாக்‌ஷாத் அதே அரசியல் வாதிதான்., காலையில் முண்டும் ஜிப்பாவும், ஒருமணிநேரத்தில் இப்படி ஒரு வேஷத்தில்,. இவள் புத்தகத்தை பெற்றுக்கொள்ளவில்லை.
பின் அழுத்தம் திருத்தமாகக் கூறினாள். ”ஞான் மலையாளி,எனக்கு நிங்ஙளின் நூலைப்படித்தறியும் ஆற்றல் இருப்பதாக நினைக்கவில்லை, “ என்று கூறிவிட்டு,
பட்டென்று முகத்தைத் திருப்பிக்கொள்ள, ”அட, மேடையில் அந்த போடு போட்டீங்களே”என்று அவர் விடாது இவளது முகத்துக்கு நேராகவே கேட்க,
i am sorry, i am a singaporean, i am leaving soon "என்று வேண்டுமென்றே ஆங்கிலத்தில் கூறிவிட்டு நடந்து விட்டாள். என்ன ? இப்பொழுது திருப்தியா?” என்று முனைவர் திருவேங்கடம் கேட்க, அப்பொழுதுதான் சிரிப்பு வந்தது.
பின் என்ன? பிறப்பால்,வளர்ப்பால், வாழ்வால், ரசனையால், உணவால், உணர்வால், உடையால் கூட , இவள் அப்பட்டமான மலையாளி தான். நிதர்சனம் எப்படி இல்லாமல் ஆகும்? தமிழை நேசிக்கலாமே தவிர, ------- ஆனால் பாரதி, எண்டெ பாரதி ,பாரதியை மட்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டேன், எந்த ஜம்பம் சிலிர்த்துக்கொண்டு வந்தாலும், பாரதியைப் பற்றி எந்த அசத்து, அசமந்தம் பேசினாலும் , சாட்டையடி கொடுப்பேன்.பாரதி, பாரதி தான் தமிழின் சிகரம்,. ---- என்ன இது ? கமலாக்‌ஷியின் கோபம் போய்விட்டது போலிருக்கிறதே?” இனி சகஜமாக பேசலாம்தானே?என்றவாறே சபேசன் சிரிக்க,
கமலாக்கா, என்று பொன்னுத்தாயி உலுக்க, தோழிகளிடமும், மற்றவர்களிடமும் உண்மையைக்க்கூறினாள் இன்னும் ஒருமணிநேரத்தில் இவள் விடை பெறவேண்டும்.
என்னம்மா , இன்றுமாலை வரை நிகழ்ச்சிகள் உண்டே?என்று திருவேங்கடம் சார், உரிமையோடு கோபித்துக்கொள்ள, வ்ருத்தமாகதான் இருந்தது.
இந்த ஜென்மத்து சுகிர்தமல்லவா இவர்களின் அன்பு? எப்படி மறப்பேன்? ஆனால் ,
பட்டாபிஷேகமே ஆனாலும்கூட, இன்னும் 2 மணிநேரத்தில், தமிழின் இன்றியமையாத இலக்கியவாதி ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது.
யாரவர் ? தெரியுமா? அசோகமித்திரன் சார் தான்? என்ன புறப்பட வேண்டாமா?

........... தொடரும்

No comments:

Post a Comment