Saturday, June 27, 2009

கூத்துப்பட்டறையில் - 16 நமஸ்காரம்! போய் வரவா?!!!

நமஸ்காரம்! போய் வரவா?!!!

"நலமாக போய் வாருங்கள்,அம்மா!” என்று இசை ஆசிரியரும்,களறி ஆசிரியரும் விடைபெற்றுச்செல்ல, மாணவர்கள் அத்தனைபேரும் வட்டமாக இவளைச்சுற்றி அமர்ந்து கொண்டு பேசினார்கள், பேசினார்கள். இவள் சேச்சியாய் லட்ஷணமாக , அவர்களை உபதேசித்தாள். விநாயகத்தை திட்டக்கூடாது!முருகனும் அப்புக்குட்டனும் சண்டை போடக்கூடாது. சந்திராவின் மகன் வளர்ந்து பெரியவானாகும் வரைதான்,பிறகு சந்திரா உச்சாணிக்கொம்பில் வாழலாம் ,இல்லைய ?. பசுபதி! கூத்துப்பட்டறையின் சட்டாம்பிள்ளைதான், ஆசிரியருக்கு அடுத்த ஸ்தானமே பசுபதிக்குத் தான்! யாரில்லையென்றார்கள்! அதற்காக என்ன செய்ய வேண்டும்? விநாயகத்தின் பரீட்ஷை[பி.ஏ]சமயத்தில் அவனுக்கு படிக்க நிரம்ப நேரம் கொடுக்க வேண்டும் .
பசுபதி! சும்மா சும்மா! பிள்ளைகளை திட்டக்கூடாது. யாரையும் யாரையுமே திட்டக்கூடாது.புரிந்ததா? பசுபதி? “ சொல்லும்போதே வருத்தம் மண்டிக்கொண்டு வந்தது.
இல்லையே, சேச்சி, ஞான் யாரையுமே தேவையில்லாமல் திட்டுவதில்ல, இவன்கள் தான்,--
ரவிவர்மாவின் பி.எச் டி. பேப்பர் முடிந்ததும் எனக்கு எழுத வேண்டும்!
முருகன்,முருகனுக்கு ஆங்கிலம் பேச 'crash course'ஐ கற்பிப்பதாக இவள் ஏற்றிருந்தாள், ஆனால் நேரமின்மையால் முடியவே இல்லை.

அந்தக்குற்ற உணர்வில், முருகனுக்குப் பயிற்றுவிக்க வேண்டியது நிண்டெ கடமை என்று பசுபதியிடம் வேண்டுகோள் விடுத்தாள். சரி சேச்சி, சரி சேச்சி,!என்று மட்டுமே பசுபதி தலை ஆட்டினான். திடீரென்று வினாயகம் கேட்டான், ‘சேச்சி, இனி இங்கே வரவே மாட்டீர்களா? உடனே இவள் பேச்சை மாற்றினாள். ”நிங்ஙளில் யாராவது பாடுங்களேன்.--
அப்புக்குட்டன்[புரிசை கண்ணப்பதம்பிரானின் பேரன்],2 வரி பாடினான்., முருகன் உற்சாகமாக பாட, விநாயகமும் ஏதோ பாட, யாருக்குமே சூழ்நிலை ரசிக்கவில்லை. எப்படிப் பேச்சை தொடர என்றும் தெரியவில்லை. இவள் எழுந்தாள். நாளை பிரயாணம் இல்லையா? எல்லோருமே போய்விட்டார்கள். சந்திரா மட்டும் இவளோடு தங்கிவிட்டாள்.சந்திரா நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தாள்.
கண் மயங்கியது எப்பொழுது என்றே தெரியவில்லை. டாண்’ என்று மணியடித்தாற்போல் பழக்க தோஷத்தில்,கண்விழித்தபோது சமையல் அம்மா எழுந்து விட்டார். குளித்து பூஜை முடித்து வெளியே வந்தபோது சந்திராவும் எழுந்து விட்டாள்.
சாய வேண்டுமா? என்று சமையல் அம்மா கேட்க, இப்போது வேண்டாம் என்றிட்டு,விளக்கைப்போட்டு, சந்திராவையும் கூட்டி, அந்த 3 மாடியையும் சுற்றி வந்தாள். கொட்டிவாக்கத்தில் சுற்றிலும் பச்சைப்பசேலென்று, செடி கொடிகளும், கொப்பும் கிளையுமாக
உயரமான விருட்ஷங்களுமாய் கூத்துப்பட்டறை சூழலே என்ன அழகு?
2 மாடியும் இட்டாலியன் மார்பிள் பதித்து, எட்டாச் பாத்டப்புமாய் ஒவ்வொரு அறையும் தான் என்ன விசாலம்!

இசைப்பயிற்சிக்கு ஒர் அறை, ,உடல் பயிற்சி, களரி பயிற்சி,யோகா, தியானம், நாடக வகுப்புக்கள், சுவரொட்டிகள் தயாரிப்பு, என எல்லாமே மூன்றாம் மாடியில்,கீழே அலுவலக அறை கூட முற்றிலும் வேறுமாதிரியான பாணியில், இசைக்கருவிகள் அறை,
என என்னமாய் தேர்வு செய்திருக்கிறார் முத்துசாமி சார் இந்த இடத்தை! இவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, பொழுது பள பள வென்று விடிந்துவிட்டது. வானம் உல்லாசமாய் விரிந்திருந்தது. எல்லோருமே வந்துவிட்டார்கள், இவள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டாள். எக்காரணத்தை முன்னிட்டும் இங்கிருந்து போகும்போது அழக்கூடாது.யார் அழுதாலும் இவள் அழக்கூடாது. அழுதால் யாராவது மதிப்பார்களா சார்? அதுவும் இவள் யார்? சாஹித்யக்காரியல்லவா? ஒரு சாஹித்யக்காரி போய் அழலாமா? சீச்சீ?
அழுவது முட்டாள்களின் பலவீனமல்லவா? அதுவும் முத்துசாமி சாரின் முன்னால் அழலாமா? பிறகு இவள் கெளரவம் என்னாவது? ஜம்மென்று புறப்படவேண்டாமா? yes! ஜம்மென்றே ரெடியானாள். படு படு ஜம்மென்றே நடமாடினாள்.

முத்துசாமி சார் வந்தார். “எல்லாம் கவனமாக எடுத்து வைத்தாயிற்றா?என்று கேட்க, பசுபதி தான் பதில் சொன்னான். புறப்படும் நேரம் வந்தது. சரவணனின் காரும் வந்தது. பதறியவாறே மாணவர்கள் எல்லோருமே அருகே வர, இவள் , --- ஆசிரியரை நமஸ்கரித்தாள். கமலாதேவி! எப்பொழுதும் பயிற்சியில் இருங்கள்.பயப்படக்கூடாது. அமானுஷ்யம் என்று ஒன்றில்லை. அது வெறும் ப்ரம்மையே.
தைர்யமாக இருங்கள். இங்கு படித்த களறி,யோகா, தியானம், எல்லாம் எப்போதுமே தொடரவேண்டும்..என்ன? சரி சார்!” என்றபோது இவள் குரல் இவளுக்கே கேட்கவில்லை..
சேச்சி, பசுபதி அருகே வந்தான். ”சேச்சி, நிங்ஙள் மீண்டும் இங்கே வரவேண்டும்! அவசியம் வரவேண்டும், இங்கேயிருந்து போனாலும் எங்களையெல்லாம் மறந்து விடாதீர்கள் சேச்சி,” சந்திரா அழுதாள். இவள், முருகன், வினாயகம், ஜோர்ஜ், என ஒவ்வொருவராய் பார்த்துப், பார்த்து, பார்த்து- பார்த்த வினாடியில், சிதறிப்போனாள். ”கமலாதேவி? அழாதீர்கள்! நீங்கள் வராவிட்டாலும் நாங்கள் சிங்கப்பூருக்கு வருவோம், பின் என்ன? அழாமல் போய் வாருங்கள்!
கூத்துப்பட்டறையின் ஒவ்வொரு நிலையிலும் நிங்ஙள் இருப்பீர்கள்.மாணவர்கள் ஒருபோதும் உங்களை மறக்கமாட்டார்கள்.”

முத்துசாமி சாரின் குரலின் கம்பீரம் எங்கே? ஆசிரியரின் குரலும் கம்மியிருந்தது.
போய் வருகிறேன் சார்,” சரவணனின் காரிலேறியும், விமானத்திலேறியும், சிங்கப்பூருக்கு வந்தும் சேச்சி! என்ற பாச விளியை மறக்கவே முடியவில்லை.
முத்துசாமி சார் கூறியதுபோலவே சிங்கப்பூர் கலாச்சார அமைப்பின் அழைப்பின் பேரில்,தனது கூத்துப்பட்டறை மாணவர்கள், Dr.ரவீந்திரன் சார்,[டெல்லி]
காசித்தம்பிரான்,என ஒரு குழுவையே அழைத்துக்கொண்டு , சிங்கையில் வந்து வெற்றிகரமாக, நிகழ்ச்சி நடத்திச்சென்றனர். கூத்துப்பட்டறை மாணவர்கள் பலரும் இன்ரு சினிமாவில் ஜொலிக்கிறார்கள். ஜொர்ஜ்,சந்திரா குமார், எனப்பலரும் தங்கர்பச்சானின் சினிமாவில் காண்கிறேன். ப்ரவீன் மண்ரத்தினம் சினிமாவில், குமரவேல் பிச்சைக்காரனாய் அபியும் அப்பாவும் சினிமாவில் மெயின் ரோலில் நடிக்கிறான். கலை ராணியும் சினிமாவில் காலூன்றி விட்டாள்.

பசுபதி, எண்டெ அருமைத்தம்பி பசுபதி, ரவீந்திரன் சாரின் செல்லப்பிள்ளை பசுபதி, முத்துசாமி சாரின் பெருமிதத்துக்குரிய பசுபதி, இன்று சினிமாவில் முத்திரை பதித்த நடிகன்.விருமாண்டியில் கொத்தாலந்தேவராக கமலஹாஸனோடு, வசந்த பாலனின் இயக்கத்தில் “வெயில் ”படத்தில், குசேலனில் ரஜனி காந்தின் நண்பனாக, சேரனின் சினிமாவில் கண் தெரியாத அந்தகனாய், எனப்பல பல புகழ் பெற்ற படங்களில் , பெயர் பெற்ற நடிகனாகி விட்டான்.இவர்களை எல்லாம் சினிமாவில் பார்க்கும் போது முத்துசாமி சாரின் உழைப்பு வீண் போகவில்லை, என்றே தெரிகிறது. இன்று ஞான் மேடை நாடகத்துறை, டைரக்‌ஷன், என எல்லாவற்றையும் முற்றாக விட்டு விலகி ,10 வருடகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், முத்துசாமிசார், ராமானுஜம் சார்,Dr.ரவீந்திரன் சார், போன்றோரிடம் பெற்ற பயிற்சியில், இவள் எழுதி இயக்கிய நாடகம்,
இவளது இலக்கிய வாழ்வில் முத்திரை பதித்த நாடகம், சிங்கை மலையாள இலக்கியத்தில் பெயர் பெற்ற நாடகம் ,என்பதை எப்படி மறக்க முடியும்?. எப்படி மறுக்கமுடியும்? அனைத்து வெற்றியும் , எல்லாம் , வணக்கத்திற்குரிய என்டெ ஆசிரியர்களுக்கே சமர்ப்பணம்.

முற்றும்

பி.கு--- இன்றுவரை எண்டெ கட்டுரைத்தொடரை பொறுமையாகப்படித்து, அவ்வப்போது ஊக்கமூட்டிய அனைத்து என்டெ அன்பான நெஞ்சங்கட்கும், சிரம் தாழ்ந்த நன்றி. இனி கொஞ்சம் நாட்களுக்கு மின்தமிழில் அதிகம் வரமுடியாது. 26 வாரங்களுக்கான 2 தொடர்களில் ,எழுத ஒப்பந்தமாகியுள்ளேன்.உருப்படியாய் எழுதி முடிக்கவேண்டுமே என்ற பரபரப்பில் உள்ளேன். அனைவரின் ஆசிகளும் வேண்டி--கமலம்.

No comments:

Post a Comment