Thursday, February 19, 2009

ஆண்களின் பார்வையில் பெண்மை

ஆண்களின் பார்வையில் பெண்மை


அமரர் சிட்டி அவர்களின்” கெளரவ நாசம்” எனும் சிறுகதை எந்த ஆண்டில் எழுதப்பட்டது, என்ற தகவல் சரியாகத் தெரியவில்லை. ஆனால்
நிச்சயம் 40, 50, ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டது என்று மட்டும் யூகிக்க முடிகிறது. ஆச்சர்யமே ஆங்குதான்.
இந்த எழுத்தாளர் அந்தக்காலகட்டத்திலேயே , குழந்தை மணத்தை எப்படி எதிர்த்திருக்கிறார், பாரதி கண்ட பெண் விடுதலைக்காக,
எப்படியெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார், என்பதை நினைக்கும்போதே மெய்சிலிர்க்கிறது.
திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் மணம் செய்த லெட்சுமியின் தவிப்பும், ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டோம் என்ற அகந்தையிலேயே, லெட்சுமியை அலட்சியப்படுத்தும் பெற்றோரோடு சேர்ந்து கொண்டு துள்ளும் ராஜகோபாலனுமே கதை மாந்தர்கள்.
பருவம் வருமுன்னேயே தாலி கட்டிக்கொண்ட லெட்சுமி,பருவம் வந்தபின்னும் கணவன் வீட்டார், தன்னை வந்து அழைத்துப்போகாததால்,,
பெற்றோருக்கும் கண்வன் வீட்டாருக்குமிடையே, ஏற்பட்ட மனத்தாங்கலால்,.அவமானத்தோடு, ஊராரின் முன்னே இப்படி வாழாவெட்டியாய்
வாழ்வதைவிட உயிர் விடுதலே மேல் என, சாவைத்தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் தற்கொலை செய்வதற்கு முன் அந்தப்பேதைப்பெண் , துணிச்சலோடு
கண்வனுக்கு ஒரு கடிதம் அனுப்ப, அக்கடிதமே அவளுக்கு வாழவை மீட்டுத்தருவதாக , மிக அழகாக, எழுதப்பட்டுள்ள கதை இது.
. பெண்ணுக்கு கல்வியறிவும் துணிச்சலும் எவ்வளவு முக்கியம், என்பதை, கடிதம் படித்த ராஜகோபாலன் பதறித்துடித்து ஓடிவரும் கட்டத்தில்,
[தன்னைத்தற்காத்துக் கொள்வதற்காவது,] நம்மையும் பதறிப் பதறி கதையைப்படிக்க வைக்கும், ஆசிரியரின் கதை சொல்லும் னேர்த்தி வெகு சொகுசு.
முழுக்க முழுக்க பெண் விடுதை பேசும் கதை இது. பெண்பால் ஏற்பட்ட பரிவினை, நெகிழ்வை, எந்த வார்த்தை ஜாலமோ,
அலங்கார முலாம் பூச்சுகூடஇன்றி, மிக இயலபாகப் பேசும் இக்கதை, தமிழிலக்கியத்தில் எந்தபெண் எழுத்தாளருமே பெருமிதப்படவேண்டிய கதை ,
என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லலாம். ஸ்ரீமான் சிட்டி அவர்கள் வாழும் காலத்தில் அவரை சந்தித்த பெண்கள் பேறு பெற்றவர்கள்.

அடுத்து வருவது மலையாளத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர் காரூர் நீலகண்டம் பிள்ளையின் மர பொம்மைகள், .இன்றைய எழுத்தாளர்களாகிய,
நம்மில் பலரும் எழுதத் தயங்கும், முற்றிலும் புதிய கோணத்தில், உரையாடல் வழி கதை மாந்தர்களை நகர்த்திச்செல்லும் நகாசு வேலைப்பூச்சு,
வெறும் புதிய உத்திமட்டுமல்ல. பூரணத்தில் மாற்று கோணமாகவும் நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சிறுகதை இது.
வாசிக்கத்தொடங்கும் போது கவர்ச்சியோ,சுவாரஸ்யமோ, இல்லையெனினும். 2ம் பக்கத்தாளை நகர்த்திய பின்னர் ,கதையிலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை.மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்,வாசற்படியில் நின்று கேட்கும் கேள்விகட்கு,வீட்டினுள்ளிலிருந்து வரும் பெண்ணின்
பட், பட், டென்ற உடனடி பதிலும்,அக்கேள்வி, பதிலினூடேயே, மர பொம்மை செய்து ஜீவித்து வரும், அவளது சோகவாழ்வை, செப்புப்பட்டயமாய்,
நம் முன்னே கொண்டுவருவதில் எழுத்தாளரின் வெற்றியை சம்மதித்தே ஆகவேண்டும்.
அவளது அவலம் புரிந்து விடை பெறும்போது , அவள் தனது அன்றாட வாழ்வின் ஜீவனோபயமான ஒரு மரபொம்மையை
அவனுக்குக் கொடுக்கிறாள்..ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு, அடியும் உதையுமாக சீரழிந்து,, இனியும் மிருகமான உன்னோடு வாழ மாட்டேன்,,
என்று வெளியேறிய அவளின் கோபம் போலவே,அவள் கொடுத்த பொம்மையின் முகமுமிருப்பது கண்டு அவன் முகம் வாடுகிறது.
.உடனே ஒரு காகிதத்தை எடுத்து, அவளிடம் நீட்ட,, அச்சு அசல் அப்படியே, அவள் உருவம் .
பேசிக்கொண்டிருக்கும் போதே,அவளது உருவத்தை, அச்சாக அப்படியே வரைந்திருக்கிறான்.. மகிழ்ந்து போன அவள் உள்ளே போய், பகவதி தவம் செய்யும், அழகான பொம்மையை கொண்டு வந்து அவனிடம் நீட்ட, மகிழ்ச்சியோடு விடை பெறுகிறான், அந்த ஓவியன்.
இரண்டு கலைஞர்களின் சந்திப்பை ஒரு நிமித்தமாய்,அதிலேயே நிறைவு பெறும் அந்த பேதமையை கட்டுசெட்டோடு சொல்லி முடிக்கும் கதை.
பெண் எப்படிப்பட்ட அவலம் நிறைந்த வாழ்வில் உழன்றாலும் பெண் எப்போதுமே பெண்ணே, என னாசூக்காய் சொல்லும் பதிவு இது.
வந்தவனும் கலைஞனே, அதிலும் ஓவியன் என்றறியும்போது, கோபம் போய் அவள் மகிழ்ந்து நிற்கும் காட்சியில், ஓவியனின் தோழமையில் ஆண்மையின் கம்பீர்யத்துக்கு நிறைவாக ஒரு சல்யூட் அடிக்கத்தோன்றுகிறது.

நா. கண்ணனின் ’ சிறுகதைத்தொகுப்புக்கு, இரா.முருகன் அழகான முன்னுரை கொடுத்திருக்கிறார். அதில் ஒரு வரி, இப்படி வரும்.
நல்லவேளை கண்ணன் ஜெர்மனி போனார், என்று----அத்தொகுப்பிலுள்ள ”நெஞ்சு நிறைய’ , சிறுகதையை, படித்தபிறகு மீண்டும் இவ்வரிகளைப்
படித்தபோது, ஏனோ இரா.முருகனுக்கு சபாஷ் போடாமலிருக்க முடியவில்லை.என்ன பொருத்தமான உவமை,
ஒரு நூலுக்கு பொருத்தமான முன்னுரையின் தேவையை , வஞ்சகமேஇன்றி, கொடுத்துள்ளார், இரா.முருகன்.
பின் என்ன சார்? ஐரோப்பிய நாட்டில் வாழும் இளைஞன் என்ன இப்படி அனியாயத்துக்கு, நல்லவராக இருக்கிறார்? இருக்கலாமோ?
என்ன? கதை, வசனம் புரியவில்லையாக்கும்?
வெள்ளைக்காரத்தோழியைக்காணச்செல்லும், கதை நாயகனுக்கும் தோழிக்குமிடையே நிகழும் பரிமாணத்தின் அனுபவமே கருவூலம்..
கணவனைப்பிரிந்து ஒரு பெண்குழந்தையோடு வாழும் , தோழியைக்காண நம் கதை நாயகன் செல்லும் அதே தினத்தன்று தான் ,
தோழியின் முன்னாள் கணவன், தன் காதலியோடு வர ,அதற்கான முஸ்தீப்புகளில் இவன் காணச்சென்ற தோழி இருக்க, குழந்தையோடு அமரும்
நாயகன், அந்தப்பெண்குழந்தை அவர்கள் நாட்டில் தவறே இல்லாத, குழந்தைகளின் பாலியல் படம் காட்டும் புத்தகத்தை ,
சர்வசாதாரணமாக புரட்டிக்கொண்டிருக்க, தர்ம சங்கடத்தில் நெளிகிறான். குழந்தையே ஆனாலுமவள் பெண்தானே எனும் , சங்கோஜம்.
மாலை புதுக்காதலியோடு வரும் முன்னாள் கணவனை, தோழியும், குழந்தையும், இவனுமாக வரவேற்கும் சூழல்,
கதை படிக்கும் நமக்குத்தான் சோகமே தவிர, அந்த நாட்டின் கலாச்சாரத்தில் இதொன்றும் பொருட்டே அல்ல, என்பதுபோல்,
கதை போனாலும் சராசரி இந்தியப்பெண்ணால் அந்தக்காட்சியை எந்த அளவுக்கு ஜீரணிக்க இயலும் என்று யூகிக்கலாம்.
அதுவும் காதலி சகஜமாக இருக்க அடிக்கடி, முத்தமிட்டு, முத்தமிட்டு அவளை சகஜமாக்க முயலும் தந்தையை, அந்தப்பெண்குழந்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.
ஆச்சு போச்சு.!
என்று எப்படியோ அவர்கள் விடைபெற்றுச்செல்ல, தோழி குழந்தையோடு அறைக்குள் தூங்கச் செல்ல,, தனியாகத் தூங்கி எழும் கதை நாயகன்,
காலையில் எழுந்து பார்க்கும்போது, சுருண்டு தூங்கும் இரண்டு பூஞ்சிட்டுக்குழந்தைளாய் மட்டுமே அவர்களைக் காண்கிறான். தானே போய் காப்பிபோட்டுக்கொண்டு வந்து, அவளுக்கும் கொடுத்து, தானும் குடிக்கும் போது தார்மீகத்தின் உன்னதம் நம்மை, ஸ்தம்பிக்க வைக்கிறது.
அக்கறைவாழ் ஆண்களில் பெரும்பாலோர், தானே சமைப்பதும் சாய போட்டுக்குடிப்பதொன்றும் புதுமையல்ல , என்றாலும் அதிதியாய்
சென்ற வீட்டில் தோழிக்கு காப்பி போட்டுக் கொடுக்கும் ஆதுரத்தில் இந்த கதை மாந்தனை கை குலுக்கத்தோன்றுகிறது.
அதைவிட விசேஷம் , விடைபெறும்போது இந்த அன்பான நண்பனுக்கு நெஞ்சார அணைத்து , பிரியா[பிரியத்தோடு]
விடை கொடுக்கும் , தோழியின் அணைப்பு ரொம்ப நேரத்துக்கு, நெஞ்சிலேயே நிற்பதாக கதை முடிகிறது.
ஆணாதிக்கம், ஆண்போராளிகள், பெண் விடுதலையின் உச்சமே, நாங்கள்தான் என்றெல்லாம், பம்மாத்து இலக்கியம் படைக்கவரும்
அத்தனைப்போலிகளையும் வெட்கித்தலை குனியவைக்கும் அற்புதமான சிறுகதை இது. .
கதைமாந்தனின் அன்பியலில், தோழி மட்டுமல்ல, கதை வாசிக்கும் எந்தப்பெண்ணுமே விகசிக்கும் படையல் இது.

இதுபோல் ப்ரபஞ்சன், குஷ்வந்த் சிங், மாத்வ ராயன், எனப்பலரும் பெண்மையைப்போற்றிய சங்கீர்த்தனங்களை , தொடர்வோமே.??

[தொடரும்]


இக்கட்டுரைத்தொடர் குறித்து என்னிடம் தனி மடலில் கருத்துரைத்து வரும் அன்பான என்டெ அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
இனிமுதல், kamalam.online@yahoo.com எனும் முகவரியில் எனக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

2 comments:

 1. நூல்களின் பெயருடன், பதிப்பாளர் விபரம் கொடுத்தால், உங்கள் அழகிய விமர்சனம் வாசித்த பின்னர் மேலும் படிக்க துடிக்கும் எங்களுக்கு உதவும். அருமை தொடருங்கள்.

  சு. விஜய் குமார்

  ReplyDelete
 2. அன்பின் விஜய்
  பலமொழிக்கதைகளை ஆய்வுக்கு ஞான் தெறிவு செய்தது பல்மொழி திரட்டுகளிலிருந்தும் கூட,
  மூன்று தலைமுறைக்கதைகள் என்பதால், னூலில் ஆண்டு கூட சரியாக எழுதப்படவில்லை. ஆயினும்
  நிங்ஙளின் கருத்துக்களை கவனத்தில் கொள்வேன்.
  கமலம்

  ReplyDelete