Monday, February 23, 2009

பெண்ணியலில் பூம் பின்னல்

பெண்ணியலில் பூம் பின்னல்

தமிழ்ச்சிறுகதைகளை உலக அளவுக்கு எடுத்துச் சென்றவர் , புதுமைப்பித்தன் எனில்,ஜெயகாந்தனின் இலக்கியப்பிரவேசம் தமிழ்க்கூறு
நல்லுலகுக்குக் கிட்டிய மாபெறும் பேறு, என்பதில் ஐயமேயில்லை. பிராமணர்கள் கூட எழுதாத, பிராமண வாழ்வியலை, எவர் மனதும் புண்படாதபடி அற்புதமாக எழுத்தில் கொண்டுவந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே. பின் நவீனத்துவத்தின் உச்சம் என சொல்லிக் கொள்ளும் எழுத்தாளர்களைக் கூட,
ஜெயகாந்தனின் பின்வரவாகவே கருத வேண்டியுள்ளது.
புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம், அகிலனின் எரிமலை, ஜெயந்தனின் மொட்டை, ப்ரபஞ்சனின் நேற்று மனிதர்கள்,
குஷ்வந்த் சிங்கின் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த ’அனைத்தும் கடந்து,’ எனும் பஞ்சாபிக்கதை,சிந்தி மொழியில் ராம் பாட்டியாவின்,
”காதலினால்”, எனும் ஆண்பெண் உளவியல் ப்ரச்சினையை மயிலிறகால் வருடும் கதை, வண்ணனிலவனின் 2 பெண்கள், , என அன்றிலிருந்து இன்றுவரை, ஆடவ எழுத்தாளர்களின் பெண்பால் பற்றிய பல பல கதைகள் , அக்கறையோடு கூர்ந்து கவனிக்க வைப்பவை.

இலா.வின்சென்ட் தமிழில் அதிகம் கேள்விப்பட்டிராத பெயர்.தமிழிலக்கிய பர பரப்பில், சிற்றிதழில் மட்டுமே எழுதியவராக அறியப்படும்,
இலா. வின்சென்ட்,டின்” ரவுக்கை” சிறுகதையைபடித்தபிறகு, அக்கதையின் பிரமிப்பிலிருந்து மீண்டெழவே சில நிமிடங்கள் பிடித்தது. இன்று வெகுஜன பத்திரிகைகளில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் பலரும் கவனிக்கத்தவறும், அல்லது கைவிடும் உத்தி உருவகம்.
ஒரு சிறுகதைக்கு, உத்தி, உள்ளீடு, எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், புனைவியல் இலக்கியத்துக்கு உருவகம்.
கதை புனையும்போது இஷ்டத்துக்குப்போய் முடிக்காமல், கதையின் தொடக்கமும் முடிவும் வருமுன்னே, இடையிலான பயணத்தில் கதைச்சூழலை, பூம்பின்னல்போல் உருவாக்கி எடுத்ததில் ரவுக்கை அருமையான சிறுகதை.
ரவுக்கையே அணியாத ஒரு கிராமத்தின் கட்டுப்பாட்டையும் மீறி, காலேஜில் படிக்கும் தாய்மாமனும் ,அவளுக்காகப் பேசிவைத்துள்ள அவளது முறைப்பையனுமான முத்துசாமி , பொம்மக்காவுக்கு யாருமறியாமல் ரவுக்கையும் பிராவும் வாங்கிக்கொடுக்க, மாமனின் ஆசையை மீறமுடியாமல்,
அவனுக்காக ரவுக்கை போட்டுக்காட்டுகிறாள் பொம்மக்கா. முத்துசாமி ஆசையோடு அவளைப்புகைப்படம் எடுக்க, அது அவள் அம்மாவின் கையில் மாட்டி, அடிஅடியென பொம்மக்காவை போட்டுபுரட்டியெடுக்கிறாள் அம்மாக்காரி [கிராமத்தின் கட்டுக்கோப்பை மகள் குலைத்துவிட்டாளாம்.]
முத்துசாமி பிடிவாதமாக ரவுக்கை அணியும் பெண்ணைத்தான் கட்டுவேன் என்று தீர்மானித்து,அசலூரில் போய் மணந்துகொண்டு திரும்ப,
ஊரேகூடி அவர்களை குற்றவாளியாக்க, எரிமலையாய், வந்து நிற்கிறாள் பொம்மக்கா.
’ஆம்பிளையாயிருந்தா என்னை ரவுக்கை போட வச்சு கட்டியிருக்கணும்.அதுக்குத் துப்பில்லாம,எங்கேயோபோய் ஒருத்தியைக் கட்டியிருக்காரு.
இதுக்குப்போயி ஒரு பஞ்சாயத்து,--தூ !!!,எனக் கூட்டத்தையும் முத்துசாமியையும் பார்த்துக் காறி உமிழும் பொம்மக்கா, அங்கேயே மாமன் வாங்கிகொடுத்த ரவுக்கையை அணிய முற்பட, பளார் பளாரென பொம்மக்காவை அறைந்த தாயைதள்ளிவிட்டு, தாய் எழுந்து வருவதற்குள்,பிராவை மாட்டி,
ரவுக்கையை, போட்டு விடுகிறாள் பொம்மக்கா, எனக் கதை முடிகிறது.
என்ன அழகான கதையிது, கட்டுசெட்டான வாக்கிய கொஞ்சல்களும், தொட்டுதொட்டு போகும் கதைப்பின்னலும் மிகவும் கவர்கிறது.
ரவுக்கை அணியாத கிராமங்களும் தமிழ் நாட்டிலுண்டு, அங்கே ஒரு இளம்பெண்ணின் ரவுக்கை அணியும் தாகம்,அதுவும் ஆசைப்பட்ட மாமனுக்காக, அவள் படும் துயரம்,அப்படியும் அவளைப்புறக்கணிக்கும் மாமன்காரனை நோக்கி வீசும் கோபாக்னி, ஒட்டுமொத்த, ஆண்வர்க்கத்தையே சாடுகிறது. இலா.வின்சென்ட்டின் நுணுக்கமான பார்வையில் வரிக்குவரி, நம்மை வெலவெலக்க வைக்கிறது.
சிற்றிதழிலும் அருமையான எழுத்தாளர்களின் கதைகள் மலர்கிறது. இந்த எழுத்தாளர் இன்னும் கூட சற்று முயன்றால்,
இவர் தமிழிலக்கியத்தில் நிச்சயம் முத்திரை பதிப்பார்.
அடுத்து காஷ்மீரிமொழியில் ஹரிகிருஷ்ண கெளல்லின் ”சூரிய ஒளியில்”சிறுகதையில், வயதான கிராமத்து மூதாட்டி, கிராமத்தில் வாழும்,
ஏழ்மையில் உள்ள மூத்த மகனிடமிருந்தும், முதியவள் சதா மூதேவி எனத்திட்டும் ,அவன் மனைவியிடமிருந்தும்,, ஒரு மாறுதலுக்காக,
டில்லியிலுள்ள இளைய மகனின் வீட்டிற்கு வருகிறாள். அங்கு வெயில் அவ்வளவு இதமாக இருக்கிறது.கிராமத்தின் குளிர் இல்லை.
வறுமை, தட்டுப்பாடு, எதுவுமே இல்லையென்றாலும் ,இளைய மருமகளின் விட்டேற்றித்தனம்,மேல்தட்டு நாகரீகம்,ஒவ்வாமை,, என எல்லாமாக அலைக்கழிக்க, அப்பொழுதுதான்மூத்தமகனின் அன்பு, வசதிக்குறைவால் வாடும் பேரனின் ஏக்கம், மூதேவி எனக்கரித்துக்கொட்டிய மருமகளின் அடங்கிப்போகும் குணம்,பணிவு, , எனும் அந்த ஏழ்மையே தான் தனக்குப் பொருத்தமான இடம் என, கிராமத்துக்குப்போக
முடிவெடுக்கிறாள்.
ஆனால் போவதற்குமுன், கொஞ்சம் வெயிலை மட்டும் கொண்டுபோக முடிந்தால் என, ஏங்குவதாக கதை முடிகிறது.
ஆற்றொழுக்கான ஆங்கில நடையில், நெஞ்சைத்தழுவும் சிறுகதை இது.
இப்படிப்பல ஆண்கள், பெண்களைப்பற்றி எழுதியிருந்தாலும், பெண்கள் பெண்களைப்பற்றி எழுதும் எழுத்தைப் படிக்கும்போதுள்ள சுகமே
அலாதிதான்.தமிழில் இன்று எத்தனை பேருக்குத் தெரியுமோ,கமலா மார்க்கண்டேயா, எனும் பெயர். இவர்தான் முதன்முதலாக ,
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒடுக்கப்பட்டவரின் அனீதியை, , ஒரு பெண்ணின் பார்வையில் எழுதி சலசலப்பைக்கொண்டுவந்தவர்.
தலித் இலக்கியம் ஒரு தலித்தால் மட்டுமே எழுதமுடியும் எனும் கூற்றை, இரண்டு துண்டாக முறித்துப்போட்டவர் கமலா மார்க்கண்டேயா, எனும் பிராமணப்பெண். ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினையை, உணர்வுகளை, வாழ்க்கை அவலத்தை,எழுதுவதுதான் தலித் இலக்கியமெனில்,
1970ல் இவர் எழுதிய,இரு கன்னியர் எனும் நாவலை ப்புறந்தள்ளவே முடியாது.
ஆங்கிலத்தில் வெளிவந்த Nectar in a sieve பற்றி, N.Y.Times, இப்படி எழுதுகிறது.
probably the ablest indian novelist now writing in english.... author of the finest novel by an indian i have ever read,very mooving....[N.Y.Times.]
என் மேனியைத்தீண்ட, கணவரின் விரல்கள் துடிதுடிப்பதைக்கண்டு, என்னுடைய அங்கங்கள் மலர்ந்து கொடுத்தன.,
என ஏழைகளுக்கே எளிதாகக் கிடைக்கும் சுகத்தை மறைக்காமல் எழுதியுள்ளார்.வயிற்றுப்பட்டினியால் வழிதவறிப்போனதை
நியாயப்படுத்தி கதை நாயகிக்காக இப்படி எழுதுகிறார்.
இன்றைக்கு, நாளைக்கு என, இனி ஒவ்வொரு நாளும் இப்படித்தான், இனியும் பட்டினி கிடக்க என்னால் முடியாது., எனும் குருதி கொப்புளிக்கும் வரிகளால் சமூகத்தின் மீது வீசும் பகிரங்கக் குற்றச்சாட்டில்,கமலா மார்க்கண்டேயாவின் தனி முத்திரையைக் காணலாம்.
இரு கன்னியர்கள் எனும் இன்னாவல், சென்னைப்பல்கலைக்கழகத்தில் கல்லூரிப்பாடமாக வைக்கப்பட்டு, பிறகு அரசு தடை செய்துள்ளது, வியப்பாக உள்ளது.
இன்று பெண் எழுத்துக்கள் என்ற பெயரில் வரும் அழிச்சாட்டியத்தையெல்லாம், இதுவன்றோ, நவீனத்துவம் என, கொண்டாடலாமாம். ஆனால் கதைனாயகியே கதை சொல்வதுபோல் சமுதாய நிர்வாணத்தை தோலுரித்துக்காட்டிய இன்னாவல் அன்று தடை செய்யப்பட்டுள்ளது புரியாத புதிரே.
கமலாமார்க்கண்டேயா, டெய்லர் எனும் ஆங்கிலேயரை மணந்து தற்போது லண்டனில் வசித்துவருகிறார்,
அவருக்கு எண்டெ மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

[தொடரும்]

No comments:

Post a Comment