Monday, February 16, 2009

பெண்ணின் உடல்மொழி

பெண்ணின் உடல்மொழி

அண்மையில் குறிப்பிட்ட ஒரு பேட்டிக்காக, இவளிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி , ஏனோ இவளை மிகவும் யோசிக்க வைத்தது.

கேள்வி---பெண்களின் உடல்சார்ந்த மொழியை இலக்கியமாகக் கொடுக்கும்போது, வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்களே,
அதுகுறித்த மாற்றுக்கருத்து ஏதேனும் உண்டா?

இவள்--புதுமை என்பதால் மட்டும் வாசகர்கள் விரும்பிப் படிக்கவில்லை. பெண்களின் உடல்மொழி சுவாரஸ்யம் என்பதாலும்
படிக்கிறார்கள். அதுவே சொல்லப்படும் விதத்தில் சொல்லும்போது, நடையழகின் லயத்துக்காகவும் ,
வாசிப்பு சுவாரஸ்யத்துக்காகவும் கூடத்தான் வாசிக்கிறார்கள். பெண்மொழியில் உடல் பற்றிய பார்வை, நடை எப்படி விழுந்திருக்கிறது
என்றறியும் ஆவலுக்காகவும் தான் வாசிக்கிறார்கள் என்பதை எப்படி மறந்து போனீர்கள்?
மாற்றுக்கருத்தா?ஹ்ம்ம்----இலக்கியத்தில் illusion and reality யில் கதை புனைந்த அனுபவமுள்ளவள், என்பதால்,
மாற்றுக்கருத்தில் நுழைய ஞான் விரும்பவில்லை.---------

இப்படி இன்னும் கூட சில வரிகள் . கேள்வியைச் சார்ந்த நிலையில் பேசினேன் தான்.
ஆனால்பேட்டி முடிந்து ,சில நாட்களாகியும் இக்கேள்வி ஏனோ என்னை, சிந்தனையில் முட்டிபோடவைத்து, கிளறிக்கொண்டேயிருந்தது.

பெண்கள் எழுத்து, நூற்றாண்டுகால வரலாறு சார்ந்தது.கிருபை சத்யனாதன், விசாலாட்சிஅம்மாள்,, வை.மு. கோதைனாயகி, கு.ப. சேது அம்மாள்.
மூவாலூர் ராமிம்ருதம்மாள்.போன்றோர் முதல் கட்ட எழுத்தாளர் என்றால், அடுத்து எழுத வந்தவர்கள் , கிருத்திகா, குமுதினி, லக்‌ஷ்மி, அனுத்தம்மா,
குயிலி ராஜேஸ்வரி,கோமதிசுப்ரமணியம், --------
மூன்றாவது காலகட்டத்தில் ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, வாஸந்தி,உஷாசுப்ரமணியம், இந்துமதி,------------
பிறகு வந்தவர்கள்தான், அம்பை,காவேரி, சிவகாமி, பாமா, உமா மகேஸ்வரி,அமரந்தா,--------------
இனி அக்கறை வாழ் எழுத்தாளர்கள், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்,காஞ்சனா தாமோதரன், சுமதி ரூபன், கமலாதேவி--------------------- -----
எனப் பட்டியலிட்டால் எழுத கை வலிக்குமளவுக்கு பட்டியல் நீண்டு கொண்டே தான் போகிறது.
இன்று பெண் எழுத்தாளர்கள் நிரம்ப பேர் இலக்கியம் படைக்க வந்துள்ளார்கள், அருமையாகவும் சில, பல, நல்ல எழுத்துக்களை ஆய்வுக்கு தெறிவு செய்யவும் முடிகிறது.
முதலில் பெண்ணியல் வாத எழுத்துக்களை நாம் எப்படி காண்கிறோம்.conservative feminism--பாணியில் வந்த கதைகளுக்கும்.யதார்த்தத்தில்,
புனைவுகளைக்கொண்டு வரும் கதைகளுக்கும் இடையே உள்ள அகழியும் கூட யோசிக்கவே வைக்கிறது.எந்த அளவுக்கு நவீனத்துவத்திலிருந்து
முன்னேபோய்விட்டோம். நவீனகாலம் என்று எதைக்கருதுகிறோம், என்று புரிந்து கொண்டபிறகு post modernism, பற்றி பேசலாமே என்ற
ப்ரக்ஞையற்று எழுதுபவர்களை , பட்டியலில் சேர்க்கமுடியவில்லை.
பொதுவாகவே பெண் எழுத்தாளர்களால், புதிய மாற்றத்தைக் கொண்டுவந்ததாகவோ,ஆண்களுக்கீடான, சக்தி வாய்ந்த எழுத்துக்களைக்
கொண்டுவந்ததாகவோ இல்லையே என்ற குற்றச்சாட்டு, இப்பொழுது, தேய்ந்து, மறைந்து விட்டது.மதம், சார்ந்த நமது வாழ்க்கை மரபுகள்,
நாம் கொண்டிருக்கிற பாரம்பரிய மதிப்பீடு,, இவைகளை எல்லாம் மீறிய ஒரு தெளிவான மாற்றம் எழுத்தில் கொண்டு வர வேண்டுமாயின்,
முதலில் என்டெ கேள்வி, Are they learned? பதில் ஆம் எனில் ஆஹா! நிச்சயம் அந்த எழுத்து வெற்றி பெறும் என அறுதியிட்டுக் கூறலாம்.
[அடடா, ஒன்றை மறந்து போனோமே, ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், சுயபச்சாபத்தில் கதைபுனைவது, மற்றவர் எழுத்தைச் சார்ந்து
அதேபோல் எழுத முயன்று,பின் ஓரளவு தேறி எழுதுவது, அதுவும் இல்லையென்றால் அவர் எழுதுகிறாரே,ஏன் எனக்கு எழுதத் தெரியாதாக்கும்?
என்ற போட்டாபோட்டி மன நிலையில் எழுதுவது, இன்றேல், இலக்கிய அடிப்படை என்றால் என்னவென்றே தெரியாமல்,மொழியில் வல்லுனர் என்ற
அலட்டலில் மட்டுமே கதை புனைய வரும் ஜம்பங்கள், ஹ்ம்ம்------, இப்படியெல்லாம் ஜிகினாப்பூச்சு போர்த்திக்கொண்ட , அனாமத்துக்களின் எழுத்துக்கள்
பாமரர்களிடம் கூட எடுபடுவதில்லை.]
கனவாய் மழையாய்,சுயம்புவாய்,இலக்கியம் மலரவேண்டும். அப்படிப்பட்ட கதைகளில் உயிர்னாடி, உக்கிரமாய் பேசாவிடினும், சிந்தனையில் சீரிளம்
புத்தாக்கம் நம்மை ஆட்கொள்ளவே செய்கிறது.
இனி இந்தபெண் எழுத்தை பெண்கள் மட்டும் தான் எழுத முடியுமா? ஏன் ? ஆண்கள் எழுதியதைல்லையா?
ஏனில்லை என்று பளிச்சென்று, மின்னல் போல் துலங்கிய நினைவாஞ்சலிக்கு, ஷொட்டு கொடுத்துக் கொண்டே,. நினைவலையைப் புரட்டினால்,
பட்டுப் பட்டாய் சில கதைகள் நினைவில் வருகிறது.
பெண்கல்வி,பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்முறை, குழந்தைமணக் கொடுமை, பாலியல் பலாத்காரம்,பெண்ணின் கைம்பெண்பிரச்சினை,
பிள்ளைப்பேறும் அறியாமையும் தான் பெண்ணை அடிமைப்படுத்தும் இயற்கைக்காரணிகள்,எனும் நிலையில் பெண்விடுதலைக்காக,
எழுதப்பட்ட பெண்ணிய எழுத்துக்கள் நிரம்பவே வருகிறது. ஆனால் பெண்ணியல் பிரச்சினைகளை, ஆண்களும் கூட மிக அழகாக,
நெகிழும் வகையில் ,உறுத்தாத நடையழகில் எழுதியுள்ளார்கள். பாரதியாரின் காந்தா மணி, ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம், புதுமைப்பித்தனின் சாப விமோசனம், சிட்டியின் கெளரவ நாசம், , நா.பார்த்தசாரதி,ஜெயந்தன், நா.கண்ணன்.,பிரபஞ்சன், எனப்பட்டியலிட்டால், முற்றுப்புள்ளியே இல்லை.
மணக்க மணக்க எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் என்னைக்கவர்ந்த பல கதைகளில், சில கதைகளை மட்டுமே உங்களோடு பகிர்ந்து
கொள்கிறேன்.
ஆடவ எழுத்தில் பெண்ணின் பால் உள்ள பரிவும் ,நெகிழ்வும் ,பெண்ணை அடிமைப்படுத்தியதால் ,ஏற்பட்ட தார்மீகக் கோபம் ,எப்படியெல்லாம்
வெளிப்படுகிறது என்றுணரும்போது, சக மனுஷ்ய எழுத்தின் மீது வரும் மரியாதையை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
முதலில் மணிக்கொடி எழுத்தாளர் அமரர் சிட்டி அவர்களின் பெண்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
கெளரவ நாசம் எனும் அருமையான கதையைக் காண்போம்.


[தொடரும்]

No comments:

Post a Comment