Saturday, February 14, 2009

பேட்டி - சிவகாமி - பாகம் 1

2004ல் சிவகாமி சிங்கை வந்தபோது கண்ட பேட்டியும் எண்டெ அனுபவமும்-----

தமிழிலக்கியத்தில் ஞானும் உங்களோடு

சாதீயம் பற்றி எழுதுவதில் எனக்கு எப்பொழுதுமே தயக்கமுண்டு. எவர் மனதையேனும் புண்படுத்திவிடுமோ என்ற பயத்தைவிட, ப்ராமணீயம் தவிர்த்து, தமிழில் எது உசந்த சாதி, எது தாழ்ந்த சாதி என்பது பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது என்பதாலும், அந்தக் கலன்களைத் தொடுவதேயில்லை. முதன்முதலாக மலையாள மாநாட்டில் கலந்து கொள்ள கேரளம் சென்றபோது, இலக்கிய உலகிலும் சரி, நிதர்சன வாழ்விலும் சரி, இன்றும் நியதி. கோட்பாடு என்ற பெயரில் உள்ள மனச்சாய்வின் பெரிய அடிப்படையே சாதியின் பிண்னனிதான் என்று மலையாள மாநாட்டில், தலீத்திய இளைஞர், கவிஞரொருவர் நம்பூதிரிகளை சாடியபோது வலித்தது. எந்த இலக்குமேயில்லாமல் இவர் ஏன் இந்த போடுபோடுகிறார் என்று திகைத்ததுண்டு. வருந்தியதுண்டு.

சூத்திரர்கள் என்றால் நாங்கள் எதில் குறைந்துபோய்விட்டோம், எங்களால் எழுதமுடிந்த பிரச்சினைகளை மற்றவர்களால் எழுதிவிடமுடியுமா என்ற இன்னொரு எகிறல்,--- அந்த எகிறல் எழுத்தாளரின் எழுத்து இவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் அவரது சீற்றம், எரிச்சல், பிளிறிய வசன மொழி, சே,--- அன்று இவளுக்கு வயது 25, 2 குழந்தைகட்கு அன்னையும் கூட. ஆனாலும் கூட புரியவே இல்லை.

இலக்கிய உலகில் பரஸ்பரம் எழுத்தின் மதிப்பீட்டில்தானே பெருமிதமே, இங்கு எங்கு வந்தது இந்த விதண்டாவாதம்? என்றெல்லாம் நினைத்து, இவளுக்கு கோபம் வந்தது. பிடித்தமான அவரது எழுத்தினை மனதார பாராட்டும் எண்ணம் கூட மடிந்திட இவள் தமையனோடு இல்லம் திரும்பிவிட்டாள். அன்று புரியாத பல விஷயங்கள் சிவகாமியின் எழுத்தில் , சிவகாமியின் நாவலகளைப்படித்தபோது, உள்ளங்கை நெல்லிக்கனியாய் புரிந்தது. படிக்கப்படிக்க , படித்துமுடித்தும் அம்மாடி, அம்மாடி, என்ன சோகமது, என்னதுன்பமது என்று நெஞ்சு விம்முகிறது .பொங்கிபொங்கி அழுகை வருகிறது.

சாதியின் அசுரப்பிடியில் இவர்களைப்போலவே அன்றாடக்கூலிகளாகப்பணிபுரியும் படையாச்சிகள் கேவலம் கூலிக்கு ஏர்பிடிக்க உடையார் பக்கம் சேர்ந்து விடுகிறார்களாம், கோவணத்துக்கு மாற்றுக்கோவணமில்லாதவன், அதே போல் உள்ள கோவணாண்டியை பள்ளன் என்கிறான், பறையன் என்கிறான், பள்ளனோ பறையனை கேவலமாயும்,பறையன் சக்கிலியை கேவலமாயும், இவனெல்லாம் சேர்ந்து பறவண்ணாணை இன்னும் கேவலமாய்-------இப்படி சீறுகிறார் சிவகாமி.

தன்னுடைய சமூகத்தைப்பற்றித்தான் என்ன துல்லியமான கணிப்பு, நுட்பமான சின்ன விஷயங்கள் கூட ஒளிக்கபடவில்லை. இந்த எழுத்துனேர்மை ஒன்றே போதுமே இவரது இலக்கிய யோக்கியதாம்சத்துக்கு, இந்த சிவகாமி சிஙகை வந்தபோது,
என் தந்தையின் பெற்றோர் பன்றிமலம் பொறுக்கியவர்கள், தாய்வழிப்பெர்றோர் மாடுமேய்த்தவர்கள் அம்மாவுக்கு படிப்பறிவேயில்லை, அப்பாவுக்கு 2 மனைவியர், 20 குழந்தைகள், இப்படிப்பட்ட சூழலில் பிறந்துவளர்ந்த ஞான் கலவியே குறியாய் படித்து, முன்னேறி, இன்று அகில இந்திய தலீத்து, மாநாட்டின் தலைவியாக யூரோப்பிய நாட்டுக்கு செல்கிறேன், என்றபோது சபாஷ் போடத்தோன்றியது.

என்னை எவனொருவன் தலீத் என்றெண்ணி ஒதுங்கிப்போகிறானோ, அவனைக்கண்டு ஞான் தான் வெட்கப்படுகிறேன், அனுதாபப்ப்படுகிறேன், என்று மேடையில் முழங்கிய , சிவகாமியைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது, கொஞ்சம் பிரமிப்பாய் கூட இருந்தது. சிவகாமியின் எழுத்தைப்படித்து ஓரளவுக்கு எதிர்பார்த்தாற்போலவே தான் தோற்றம். கறுப்புத்தான் என்றாலும் பளீரென்ற சிரிப்பில், ஒட்டவெட்டிய கிராப்புத்தலையும், கட்டுக்குட்டான [சிவகாமியின் பாஷைதான்] உடல்தோற்றமுமாய் அழகிய டிஷ்யூ சுடிதாரில் கவர்ச்சியாகவே தெரிந்தார்.மறுநாள், சிங்கையின் ப்ரதான சைவ உணவகத்தில் இக்குவனம் அய்யா, இவள், சிவகாமி மூவருமாய் மதிய உணவுண்டு கொண்டே, பேசிய விஷயங்களும், மறுநாள் காலை தொலைபேசியில் சம்பாஷித்த தகவல்கலுமாய் தொகுத்துள்ளேன். தமிழில் கேட்ட கேள்விகளுக்கு தமிழிலும், ஆங்கிலத்தில் வந்து விழுந்த கேள்விகட்கு அழகான பிழையில்லாத ஆங்கிலத்திலும் சிவகாமி உரையாடினார்.

தமிழிலக்கியம் மட்டுமல்ல, மலையாள இலக்கியம், முற்போகுவாதம், நவீனக்கவிதை எனபலதுறை பற்றியும் பேசினோம். சிரிக்கசிசிரிக்க, பொறுமையாக, தெளிவாக தன் கருத்துக்களை சிவகாமி எடுத்தியம்பினார், சிவகாமி, நாவலாசிரியை மட்டுமல்ல, ஊடாடி எனும் குறும்படமெடுத்து தமிழக விருதும்கூட பெற்றவர். ------------------------------------------------------------------------------------------------------


கே---காத்தமுத்து, பெரியண்ணன், நலமா அம்மா?

சிவ----[பளிச்சென்று சிரிக்கிறார்,,] அவர்கள் நலமாக உள்ளதால் தானே ஆனந்தாயியும், கனகு நாகமணி, போன்றோர் உருவானார்கள்.

கே---சமகால இலக்கியம் இன்று தமிழ் நாட்டில் எப்படியுள்ளது?

சிவ--- ஆரோக்கியமாகவே உளளதாகவே நம்புகிறேன்.

கே--பழையன கழிதலும் நாவலின் பிறபகுதி இன்னும்கூட கொஞ்சம் செப்பனிட்டிருக்கலாமோ எனும் குறையை ஆனந்தாயி நாவல் பூர்த்தியாக்கியுள்ளது. என்றாலும் ப்ராமணீயத்தை தாக்குவதென்பதும், நையாண்டியாக எதிர்ப்பதும், இன்றைய முற்போக்குவாதமாக
பல இடங்களில் காணப்படுகிறதே, இது சரியா?

சிவ--- அது அவரவர் பார்வையை பொறுத்த விஷயம். இலக்கியத்தில் எதுவுமே நையாண்டியில்லை.அவரவர் அனுபவத்தை அவரவர் எழுதுகிறார்கள்.

கே--- தலீத்திய இலக்கியம் ஒரு தலீத்தால் மட்டுமே எழுதமுடியும் அப்படிப்பட்ட எழுத்து மட்டுமே வெற்றிபெறும் என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.ஏன் மற்றவர்களால் அவர்கள் வேதனையை உள்வாங்கி எழுதமுடியாதா?

சிவ---- சேச்சி, கிராமம் என்றால்கூட என்னவென்று தெரியாத உங்களுக்கு சேரியைப்பற்றி என்ன தெரியும்?. காயம் பட்டவர்களுக்கு மட்டுமே ரணத்தின் வலி புரியும்.பள்ளிச்சிறுமியாக உள்ளபோது, வயசுக்குவந்த தோழியின் வீட்டுக்குச் சென்றபோது மொட்டைப்பாட்டி ஒருத்தி அத்தனை பேரையும் உள்ளேவிட்டு , என்னை மட்டும் வெளியே சாக்குப்போட்டு அமர்த்தி, தனி லோட்டாவிலும் அலுமினிய வட்டிலிலும் சாப்பாடு போட்டதை மறக்கமுடியுமா? படித்து பட்டம்பெற்றும், ஐ. ஏ. எஸ். பயிற்சியின்போதும் கூட என்ன்னிடம் முக்கியப் பொறுப்பு ஒப்ப்டைக்கப்பட்டபோது, தாங்கமாட்டாத , அந்த உயர்சாதிப்பெண் ஒருத்தி, ஷெட்யூல் காஸ்ட் பிட்ச்' என காதுபடவே திட்டினாளே, கற்றறிந்தும் கூட நாகரீகம் கற்காத இவர்கள் எங்கே முன்னேறியிருக்கிறார்கள்?
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பந்தலே ஒழிய, நடைமுறையில் பக்கா பச்சோந்திகளாக வாழ்பவர்களைப்பற்றி எழுதினால் என்ன தப்பு?

கே-- எழுத்தில் ஆண் என்ன? பெண் என்ன? எல்லாமே ஒன்றுதான், எங்களைப்பாகுபடுத்தி அல்லது பிரித்துப்பார்க்காதீர்கள் என்று சில பெண் எழுத்தாளினிகள் கோஷம் போடுகிறார்களே? இது ஏற்புடையதுதானா?

சிவ-----சேச்சி, நீங்களே, எழுத்தாள்ர்தானே உங்கள் அபிப்ராயமென்ன????????????????????????????

எண்டெ பதில்------- நிச்சயமாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது,ஏன் நினைத்துப்பார்க்ககூட முடியாது. ஒரு ஆடவ எழுத்தாளரின் எழுத்துக்கும் ,
எண்டெ எழுத்துக்கும் நூறு நூறு வித்தியசங்களை என்னால் காட்டமுடியும்,பெண்மையின் உளவியல்சிறப்பினை ஆண்களோடு ஒப்பீடு செய்வதே தப்பு,

சுட்டுப்போட்டாலும் வயிற்றுக்குள் குழந்தை புரளும் அனுபவத்தை ஒரு ஆடவ எழுத்தாளரால் உணர்ந்து எழுத முடியுமா? பிரசவவலியை அனுமானித்து எழுதிடல் முடியுமா அம்மா?

சிவ----சபாஷ், சேச்சி, இதுவே தான் எந்தன் கருத்தும் கூட, பெண்மையின் தனித்துவத்தை தூர நின்று பார்ப்பதுபோலல்ல, அனுபவித்தெழுதுவது-------தாய்மை என்று, மட்டுமல்ல, பெண்ணின் அனைத்துக்கூறுகளுமே ---அடடா இப்பொழுது புரிகிறதா?

இதுபோலவேதான் தலீத்திய எழுத்தும் ஒரு தலீத்தால் எழுதினால் மட்டுமே சிறப்புறும் என்று உடனே என்னை மடக்கினார்.

{தொடரும்}

2 comments:

  1. கமலகானம் மிகவும் ஆழமாக பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. நிறைய படித்து இருக்கிறீர்கள். படித்ததை கோர்வையாக தொகுத்து இருக்கிறீர்கள். தமிழ்நாட்டுப் பெண்மணிகள் செய்வதை விட ரொம்பவும் உருப்படியான காரியத்தை உங்கள் பதிவுகளில் செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ரொம்ப லேசாக மலையாள வாடை அடித்தாலும் அதுக்கொரு அழகு இருக்கவே செய்கிறது.

    தொடருங்கள்.

    அன்புடன்

    பென்னேஸ்வரன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு நன்றி திரு பென்னேஸ்வரன்.
    கமலம்

    ReplyDelete