Saturday, January 31, 2009

கட்டுரைத்தொடர் - --- கவிதாரஸம்

[ கவிதாரஸம்]

கவிதை என்றாலே எதுகை, மோனை, யாப்பிலக்கணம்,முறையாகப் பயின்றவர்களால் மட்டுமே தரமான கவிதைகளை படைக்கமுடியும் , என்பது என்டெ அழுத்தமான நம்பிக்கை. இல்லையோ என்று அண்மையில் என்னை சிந்திக்கச் செய்த சில கவிதைகளை இணையத்தில்
வாசிக்கக் கிட்டியபோது, ஏனோ அகம் மகிழ்ந்து போனேன். உடனே அது தப்பு என, சரேலெனக் கீறிவிட்டு ரத்தம் கொப்புளிக்கும் துளியைக் கண்டபோது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

கவிதை என்றால் என்ன?
வார்த்தை விளயாட்டில் மொழி தெரிந்த யார் வேண்டுமானாலும் விளையாடலாமாக்கும்?அதுவும் எப்படி? அதிரடி, உத்திகளும், தடாலடி சாகஸங்களும் மட்டுமே இருந்தால் கூடபோதுமே, ஞான் தான் கவிஞன், ஞான் எழுதுவது மட்டுமே கவிதை, அல்லது, இதுதான் புதுக்கவிதை, என்ற அலட்டலகளையெல்லாம் காணும்போது, இப்பொழுதெல்லாம் எந்த கவிதை வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் வந்தாலும் ,
ஏனோ மனசு சுகப்படவில்லை. கவிதைகள் முன்று தளங்களில் இயங்கி வருகிறது.ஒன்று-பழமைத்துவத்தளம், இரண்டு-- நவீனத்துவத்தளம்,மூன்று, பின் நவீனத்துவத்தளம்...
ஆனால் மானுடத்தை முன்னெடுத்துச்செல்லும்,முற்போக்கு அணி, பகுத்தறிவின் பாசறையே, எங்கள் பின் நவீனத்துவக்கவிதைதான், என்று சொல்லிக்கொள்ளும் கவிஞர்கள் ஒன்றை மறந்து போனார்கள்.கவிதையின் காலணியாக எழுதுபவர்கள்கூட,உரை வீச்சில் அப்படி என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்?புதுக்கவிதையில் , நிமிஷத்தில் சொல்லமுடிந்த ,கருத்தை மரபுக்கவிதையில் சொல்லமுடிவதில்லையே என்பது ,
மற்றொரு சாராரின் குற்றச்சாட்டு.வள்ளுவரும் ,இளங்கோவும், கம்பரும், பட்டினத்தாரும், சொல்லாததையா இனி சொல்லப்போகிறார்கள்?, என்பவர்கள் அருமையான, அற்புதமான , ஒரு கவிப்பொக்கிஷத்தின் பெயரை மறந்துபோனார்கள், அவர்தான் மஹாகவி. அவர் தான் கவி, அவ்ர்தான் கவிதை, என்பது , வெறும் பரவச வசனமல்ல.பாரதியே கவிதை, பாரதி மட்டுமே கவிதை, பாரதிக்கீடான கவிஞன் , இனிதான் பிறக்கவேண்டும்., என்பதை, மலையாளிகள் ஏற்றுக்கொளவேண்டுமென்று ஞான் ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை. கவிதையின் உள்ளடக்கமும்,உருவகமும், வெளிப்பாடுகளில், ஆழமும், கூர்மையும், பாடுபொருளும், ஒப்பு நோக்கிப்பார்க்கும்போதும், என்டெ பாரதியின் மாண்பு புரியும். எந்த ஒரு நல்ல கவிதை படிக்கும் போதும் பாரதியின் தாக்கம் தானே என்று மனசு உல்லாஸிக்கிறது.பாரதியைப் படிக்கும்போதெல்லாம் ஆனந்தத்தில் விம்முகிறேன், புத்திலக்கியப்பார்வையைவிட, வார்த்தை அழகில், அவனது அலகிலா விளையாட்டில், கரைந்து கரைந்து அழுகிறேன். இந்த பரவசம் எனக்கு மட்டும், எனக்கு மட்டுமே, என்று சொந்தம் கொண்டாடுகிறேன்.

மலையாளக்கவிதைகள் அரசியல் பேசுகின்றன.மக்களோடு ஐக்கியப்பட்டுள்ளன . ஆனால் நவ கவிதை மட்டும் மக்களிடம் சென்றடையவேஇல்லை. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு,கடம்பனிட்ட ராமக்ரிஷ்ணன், போன்றோரின் கவிதைகள் மரபு பேசினாலும், தனித்வம் விலகவில்லை. நமக்குத்தெரிந்த, நாம் அறிந்த விஷயத்தையே,மிக இயலபாகவும் கூர்மையாகவும் ஒரு கவிஞன் சொல்லும்போது, அட, என்று ஒரு நிமிஷம்
வியந்தாலும் கூடப்போதும் அதுவே கவிஞனின் வெற்றி, .எப்பொழுது வாசகனின் உணர்வுகளைத் தொடமுடியுமோ, அப்பொழுதே அவன் பாதிக்கிணற்றைத் தாண்டிவிடுகிறான்.அறிவுஜீவித்தனமான வசீகரத்தால் மட்டும் ஒரு கவிதை வெற்றி பெறுவதில்லை.ஆழ்ந்த சிந்தனையும், முறையான கவிவடிவமும் , நாம் காணும் படிமத்தின் வெளிப்பாடே, என்பதை உணரும்போது தனித்துப்பார்த்து ரசிக்கத்தோன்றுகிறது.
மரபு வடிவங்களை, நாட்டார் பாடலின் செழுமையின் தாக்கத்தால் வரும் கவிதைகள் கூட பேசுகின்றன, பிரச்சாரக்கவிதைகள், செய்தி சொல்லும் கவிதைகள், மழை வெள்ளத்திலடித்துச் செல்வதுப்போல் , மறைந்து விடும், எழுத்து என்பது சமூக மாற்றத்துக்கு ஒரு கருவி என்பதில் அட்டியில்லை ஆனால், எழுத்து வேறு , வாழ்க்கை வேறு, எனும் தளத்தில் எழுதுபவர்களும் , அவ்வப்ப்போது நல்ல கவிதைகளையே தருகிறார்கள் என்பதும் மகிழ்ச்சியாகவே உள்ளது. மொழியறிவோ, எந்த அனுபவமுமே இல்லாமல்,முரண்பாடுகளை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு, சாகஸம் செய்வது சாஹித்யமல்ல. இலக்கியத்தில் மொழி என்பது வெறும் feudal language மட்டுமல்ல.ஆழமாக நாம் கடக்கவேண்டிய பொக்கிஷம், அப்பொக்கிஷத்தின் ஒரு துளியை , தேனாய் , விழுங்கும் அமிர்த சுகம் , உணர்ந்த பிறகு , பேனாவை எடுங்களேன்

[சாஹித்ய கமலம்--தொடருக்காக, ]

2 comments:

 1. பாரதியைப் பற்றிய அருமையான கட்டுரை. என்னைக் கேட்டால் இருபதாம் நூற்றாண்டில் இரு கவிஞர்கள் உலா வந்தனர். ஒருவன் பாரதி.. மற்றவன் கண்ணதாசன்.
  இருவருமே சாதாரண மக்கள் முதற்கொண்டு சான்றோர் வரை தமிழையும் தமிழ் மூலம் நல்ல கருத்துகளையும் மிக எளிய வழியில் எடுத்துச் சென்ற ம்கான்கள்

  தொடருங்கள் கமலம். வாழ்த்துகள்

  திவாகர்

  ReplyDelete
 2. திவாகர்,
  நிங்ஙள் சரித்திர நாவலாசிரியர், நிங்ஙளின் வாழ்த்துக்கு நன்றி.
  என்டெ தமிழை அப்படியெ ஏற்றுக்கொண்டமைக்கும் நன்றி.
  அன்புடன் கமலம்

  ReplyDelete