Friday, April 30, 2010

மந்திரம் சொன்னேன் வந்துவிடு

மந்திரம் சொன்னேன் வந்துவிடு

சிங்கை வானொலியில் நாவல் நாடகத்தொடர் என்றொரு புதிய இழை தொடங்கியிருந்தார்கள். நாவல் சாராம்சம் ,அற்புதமாக தொடங்கிவிட்டு, பின் நாடக வரைவிலக்கியத்தில் கதையை நகர்த்திச் செல்லவேண்டும்.
அப்பொழுதுதான் தமிழ்முரசில் பிரசுரம் கண்டு முற்றுப்பெற்ற இவளது நாவலை இந்த இழைக்கு தேர்வுசெய்த கடிதம் கிட்டியபோது, உற்ற மகிழ்ச்சி இம்மட்டு அம்மட்டல்ல.. நாடக இலக்கியத்தில் முற்றிலும் புதிய கோணம் அது.
இலக்கியத்தில் புதிது புதிதாய் எழுதுவதுதானே பரவசம்.
ரொம்ப ஜோராய் கணவரிடம் கடிதத்தைக்காட்ட, கணவருக்கு முகம் தெளியவில்லை.இவளை டிஸ்கஷனுக்கு அழைத்ததினத்தில் கணவருக்குத் தேர்வு தினம். அல்லும் பகலும் தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்த நேரம்.
அப்பொழுது கணவரின் வெலியேட்டன் [கணவரை விட 10 வயது மூத்தவர்] லண்டலிருந்து வந்திருந்தார்.

ஏட்டன் கூறுகிறார், அதனாலென்ன, குழந்தையை ஞான் பார்த்துக்கொள்கிறேன். அவள் போய் வரட்டுமே? வாட்? தனியாகவா? இவளா? இவளைத் தனியாக அனுப்புவதா? அய்யோ!1! என்று தேள் கொட்டினாற்போல் கணவர் அலற,
ஏண்டா? என்று ஏட்டன் அப்பாவியாய்க்கேட்க, 6 மணிக்குமேல் இவள் மட்டும் வீட்டில் பயமில்லாமல் தனித்திருப்பேன் என்று சொல்லட்டும், ஞான் ஒரு பக்க மீசையையே எடுத்துவிடுகிறேன் ,என்றிட,
ஏன்? என்று அதிர்ந்துபோய் ஏட்டன் கேட்க, விளம்புகிறார் தாலி கட்டிய மன்னவர்.
”மாலையானால் விளக்கேற்றும் நேரத்தில் சரியாக அது வந்து விடுமாம். அதுவும் இவள் தனியாக இருக்கிறாள் என்றால் அது வந்து
ஜன்னல் கதவில் நின்று ஆடுமாம். படுக்கப்போனால் காலை வருடிவிட்டுப்போகுமாம்.கண்ணை இறுக மூடிக்கொண்டு இவள்
உட்கார்ந்தாலும் ,கிறீச் சென்று எங்கிருந்தாவது சத்தம் போட்டு இவளைஅலற அடிக்குமாம். என்னமோ அதுக்கு இவள் மீது அவ்வளவு ப்ரேமையாம்??
எதுடா? அதற்குமேலும் தாங்கமாட்டாது, தன்னைமறந்து, ”அமானுஷ்யம்” என்றிவள் வெடிக்க, ”இப்பொழுது புரிந்ததா? அமானுஷ்யமாம்,” என்று கணவர் ஏட்டனிடம் கண்சிமிட்ட, ஏட்டன் அடக்கமாட்டாது சிரித்தார்.
கொஞ்ச நேரம் ஞான் வரத்தாமதமானாலும் வீடுமுழுக்க ஜோவென்று விளக்கை எரியவிட்டுவிட்டு,வியர்த்து விறு விறுத்து
வாசலில் வந்து நிற்கும் இவள் கோலத்தைக் காணவேண்டுமே?ஆனால் வேடிக்கை பாருங்கள், ஞான் வீட்டிலிருக்கும்போது ஒருநாள் கூட அது வரமாட்டேன்கிறது.அந்த மானுஷ்யத்துக்கு இவள் மீது மட்டும் தான் ப்ரேமமாம் .” என்று மேலும் கணவர் விஸ்தரிக்க, ஏட்டன் குலுங்கி. குலுங்கிச் சிரிக்கிறார்.
இவள் துக்கத்தின் எல்லையில் , கண்ணைக் கொட்டிக்கொட்டிக் கண்ணீரை அடக்கிக்கொண்டு, கணவர் மீது மன்னிக்கவே முடியாத கோபத்தோடு தக்‌ஷணமே சபதம் எடுத்தாள், [அடிக்கடி சபதம் எடுப்பது இவளது அன்றைய உச்சகட்ட லட்சியமாயிருந்தது]

இந்த முறை ஞான் யாரென்று காட்டுகிறேன். இந்தமுறை இவள் சபதத்தால் கணவரே,இவளிடம் கிடுகிடுத்துப்போய் மன்னிப்பு
கேட்கவேண்டும்.பிறகுதான் இருக்கிறது கச்சேரி.”
யாரிடம் என்ன பேசுவது என்ற விவஸ்தையே இல்லையா? மனைவியைப்பற்றி ஏட்டனிடம் இப்படியெல்லாம் பேசும் இவரை என்ன செய்தால் தகும்? இவர் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசுவாராம்..ஆனால் இரவானால் சரஸமாம்.
மறுநாள் காலை எழுந்ததும் வெட்கமே இல்லாமல், பரிந்து பரிந்து, சுடச்சுட வெள்ளைஅப்பமும், நாளிரம் சட்டினியும், ,மணக்கும் ஏலக்காய் சாயையுமாய் இவள் உபசரிப்பாளாம்.சீ, சீச்சீ? துளிக்கூட வெட்கமில்லாமல் என்ன வெட்கம் கெட்ட ஜென்மமிவள்? இவள் மீது இவளுக்கே கோபம் கோபமாய் வந்தது.
அலுவலகம் போகும்போது கணவர் கூறினார், 2 மணிக்கு வருகிறேன். ரெடியாயிரு, இவள் உம்மென்று முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு தலையை ஆட்டினாள். விறுவிறுவென்று வேலையை முடித்துக்கொண்டு, குழந்தையை கிண்டர்கார்டனிலிருந்து அழைத்துவந்து, ஏட்டனுக்கு உணவு பரிமாறி, , குழந்தைக்கும் சாதம் ஊட்டிவிட்டு, , விழுந்து விழுந்து, சிஙப்பூர் மேப்பை எடுத்து வைத்துகொண்டு ஆராயத்தொடங்கினாள்.அட, சுண்டைக்காய் விஷயம், இதற்கா இவ்வளவு பெரிய மலையைப் புரட்டிப்போடும் அலட்டல்.
சரிதான் போய்யா,, என்று மனதுக்குள்ளேயே, கணவரிடம் சிலிர்த்துக்காட்டினாள்.இவள் ரெடியாகும்போதே கணவர் வந்துவிட்டார்,
குழந்தையை ஏட்டனிடம் விட்டுவிட்டு வானொலி நிலையம் போகும்போது நேரம் தப்பவில்லை, எல்லா தயாரிப்பாளர்களுக்குமே இவளைப் பற்றித் தெரியும். கணவர், குழந்தை சகிதம் டிஸ்கஷனுக்குப்போகும் ஒரே பிரகிருதி இவள்தான்.
டிஸ்கஷன் முடிந்ததும் ரிசப்ஷனிலேயே இரு.ஞான் அலுவலகத்தில் தலைகாட்டிவிட்டு வருகிறேன், என்றுஎன்னமோ 10 வயசுப்பெண்ணுக்கு புத்திமதி சொல்வதுபோல், சொல்லிவிட்டு கணவர் போக , என்றுமே இல்லாத அவமானத்தில் இவள் உறைந்து நின்றாள். அன்றிருந்த மனநிலையில் தயாரிப்பாளர் விளக்கியபோது , தொடக்கமே இவளுக்கு சிரமமாக இருந்தது
18 வார நாவலை சுருக்கி, புனைவெழுத்திலும், உரைநடை இலக்கியத்திலுமாய் எழுதுவதொன்றும் லேசுபாசு அல்ல.
மிகச்சிரத்தையாய்,, குறிப்புக்கள் எடுத்தாள், கேள்விமேல் கேள்வியாய் கேட்க,
இது முற்றிலும் புதிய உத்தி, கமலாதேவி. நிங்ஙளால் முடியும், , என்று தயாரிப்பாளர் உற்சாகிக்க, இவளுக்கும் சுவாரஸ்யம் பிறந்தது .ரிஸப்ஷன் வரையிலும் தயாரிப்பாளர் உடன் வந்து விட்டுவிட்டுப்போக, கணவர் வந்துசேரவில்லை. உடனே அங்குள்ள தொலைபேசியில் கணவரை அழைத்து, ”ஞானே போய்க்கொள்கிறேன், நிங்ஙள் வரவேண்டாம்,”என்று சொல்லிவிட்டு, கணவர் மேலே தொடர்வதற்குள் போனை வைத்துவிட்டாள்.
விடுவிடுவென்று நடந்து வெளியே வந்தவள் டேக்சி பிடிக்கவில்லை, டேக்சியில் உட்கார்த்தி முகவரி கொடுத்தால், சின்னப்பாப்பா கூட தனியாகப்போய்விடும். ஆனால் பேரூந்தில் போய் சாகசம் செய்வதுதானே வெற்றியின் உச்ச கட்டம்?
ஹ்ம்ம். இவள் யார்? பாரதி கண்ட புதுமைப்பெண் இல்லையா? அதிலும் அகில உலக அறிவுச்சுடர், கேவலம் இதுகூடத்தெரியவில்லையென்றால் பின் வாழ்ந்தென்ன? வீழ்ந்தென்ன? வீராவேசத்தோடு, நடந்துபோய்,
அருகிலிருந்த பேரூந்து நிலையத்திலிருந்து 67ம் நம்பர் பஸ்ஸில் ஏறினாள்.மேப்பை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டாள்.
எங்கே இறங்கவேண்டும்?.ஆனால் தோம்சன் ரோடிலிருந்து ஏறின பஸ்,முக்கால் மணிநேரமாகியும், -----------

இவள் எதிர்பார்த்த இடம் வரவில்லை. NTUC பில்டிங்கிக்கு அருகில் தானே இறங்கவேண்டும்? ஆ, இதோ, தெரிகிறதே? ஹா, வந்துவிட்டதே?.ரொம்ப ஜோராய் இறங்கினாள். அருகில் சென்றபபோது தான் எத்தகு அதிர்ச்சி,
NTUC பில்டிங்கிற்குப் பதில் அது வேறு ஏதோ பேக்டரி பில்டிங்.. என்ன செய்வதென்றே தெரியவில்லை. கார்களும் பஸ்களும் படு வேகமாய் சாலையில் ஓடிக்கொண்டிருந்ததே தவிர, தெருவில் ஒரு சுடுகுஞ்சு இல்லை.
யாரிடம் போய் வழி கேட்பது? வேறு வழியில்லை, டேக்சி பிடித்தே போய்விடலாம் என்று , கைப்பையைத் திறந்தால்,
சில்லறைக்காசுகளும் 2 வெள்ளி நோட்டும் மட்டுமே இருந்தது. எல்லாத்திட்டமும் போட்ட இந்த புத்திசாலி,வரும்போது
அவளது வெல்வெட் பெட்டியிலிருந்து பணம் எடுத்துவரவேண்டுமென்பதை மட்டும் மறந்து போனாள்.
நிதர்சனம் பூதாகரமாய் உறைக்க, பயம் தொற்றிக் கொண்டது.
நடுமுதுகுத்தண்டு சில்லிட்டுப்போக, , நெஞ்சுக்குள் படபடப்பு..கைகால்களெல்லாம் கிடுகிடுக்க, முதன்முதலாக,
முட்டாள்தனம் உறைக்க,அதுவரை இருந்த வீராப்பு, ரோஷம் , எல்லாம் போன இடம் தெரியவில்லை. டிசம்பர் மாதத்து மழைக்காலம் வேறு. லேசாக இருந்த தூறல் ,எப்பொழுது பெருத்த மழையாக வருமோ என்று தெரியாமால் காற்று அப்படி வீச, பயத்தில் அழுகை வந்தது. கண்களில் மதகு பொத்துக்கொண்டு வழிய, காயத்ரி ஜெபித்தாள். மழை வலுத்தது.கைப்பையில் அவள் ஒரு குடை கூட கொண்டு வரவில்லை. மெல்லிய புடவையில், அந்த பெரும் மழையில் , குளிரக்குளிர,சத்யமாயிட்டும் அவள் கணவரை நினைத்து அழுதாள்.
ஒரு போன் செய்தாவது கணவரை அழைக்க்லாமென்றால் அங்கு எங்குமே, ஒரு தொலைபேசிக்கூண்டு கூடக் காணவில்லை. அந்தப்பிரதேசத்திலேயே, யாரையுமே காணோமே, என்று இவள் கொட்டும் மழையில் அழுதுகொண்டு நிற்க, ??????? ,

[தொடரும்]

பி.கு--சாஹித்ய கமலம் மலையாளத்தொடருக்காக]


No comments:

Post a Comment