Monday, September 14, 2009

பாப்பாத்தி ஐ லவ் யூ

பாப்பாத்தி ஐ லவ் யூ



அப்பொழுது 13 அல்லது 14வயதிருக்கலாம்.அச்சாவுக்குத் தெரியாமல் ஒளிந்து, ஒளிந்து ,பல பெயர்களில் சிறுவர் அரங்கில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்த காலம்.அந்த மகத்தான பணிக்கு இவளுக்கு உதவியவர்,இவளது அருமை தமிழாசிரியர் .ஆங்கிலப்பள்ளியில் girl guide வகுப்புக்கு சனிக்கிழமை போனால், அந்த வகுப்பு முடிந்ததும், வீட்டுக்கு தெரியாமல் , தமிழ் சாரின் வகுப்பில் இவளே ஆசையோடு கலந்துகொண்டு ,[தமிழ்பயின்ற கதையும், பின்னர் பிடிபட்டபோது, வீட்டில் நடந்த கதை எல்லாம் இப்பொழுது வேண்டாம்] .இவள் எழுதும் கட்டுரைகளை வயதான அந்த ஆசிரியர், திருமிகுமுத்துவீராச்சாமி,
அவர்கள் தமிழ் நேசன் சிறுவர் அரங்கிற்கு அனுப்பி வைப்பார்.அந்த கட்டுரைகள், பேச்சுப்போட்டி, அண்டை மானிலங்களில் நட்க்கும் கட்டுரைப்போட்டிகளுக்குகட்டுரை எழுதி அனுப்புதல் என , மாகாணத்திலேயே முதல் பரிசு எனக் கட்டுரைகளுக்கு, அவள் பரிசுகள் பெற்று பள்ளிக்கு பெருமை வாங்கிகொடுத்த,கால கட்டத்தில் ஒரு நாள் , இண்டர்வெல் நேரத்தில், அவளது ஆங்கில ஆசிரியர் அழைப்பதாக, இவளது உயிர்த்தோழி tan siew kim வந்தழைக்க ஓடோடி ஆசிரியரின் அறைக்குள் சென்று நின்றாள்.
mr.vasanthan,சார் இளைஞர். அருமையாக லிடெரேச்சர் கற்பிப்பார்.
merchant of venice, romeo juliet பற்றியெல்லாம் அப்பொழுதே இவர்களின் கேள்விகட்கு அழகாக விளக்கம் சொல்வார்.


நீ தமிழில் ரொம்ப ஸ்மார்ட் என்று எல்லோரும் சொல்கிறார்கள்., எனக்கு தமிழில் ஒரு கடிதம் எழுதித்தரமுடியுமா? என்று அவர் தயக்கத்தோடு ஆங்கிலத்தில் கேட்க,இவளுக்கானால் என்னவோ மாஹாகவியே இவளுக்கு பட்டயம் கொடுத்ததுபோல் அப்படியொரு பெருமை.
வசந்த்ன் சாருக்கு இவள் தமிழில் கடிதம் எழுதிக்கொடுக்க வேண்டுமா?
மிஸ்.பாப்பத்திக்கு ஒரு லவ் லெட்டர் எழுதவேண்டும் அழகான தமிழில் , ரொம்ப அழகாக எழுதிதரவேண்டும் செய்வாயா கமலா, என்று,தயங்கித் தயங்கிக் கேட்க ,அப்படியே வெட்கமாகப் போய் விட்டது.ப்லீஸ், கமலா” என்று வசந்தன் சார் மீண்டும் கேட்க,
அதன் சீரியஸ் புரியாமல், ம்ம்.சரி சார், , நாளை எழுதிக்கொண்டு வருகிறேன் சார், என்றிட அவரது கண்களில் ஒளிர்ந்த மகிழ்வைப் பார்த்தபோதுதான் , மிஸ் பாப்பாத்தியின் மீது இவருக்கு இவ்வளவு அபிமானமா என்று ஆச்சர்யம் தோன்றியது.
மிஸ் பாப்பாத்தி கறுப்பு என்றாலும் அழகான குண்டு கன்னங்களும் வட்டக்கரிய விழிகளுமாக ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பார்கள். [அவரும் ஆங்கில ஆசிரியைதான்-- மற்ற வகுப்புகளுக்கு], ஆனால் இவளது girl guide வகுப்புக்கு மிஸ் பாப்பாத்திதான் டீச்சர்..
இவளே டீச்சருக்கு ஆசையோடு மஞ்சள் ரோஜாப்பூ கொண்டுபோய் கொடுத்திருக்கிறாள்.
அவ்வளவு அருமையாக மாணவர்களை கவர்ந்த அன்பான ஆசிரியை.
அதுசரி? தமிழில் தான் காதல் கடிதம் எழுதவேண்டும் என்று இவருக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் .வசந்தன் சாருக்குத் தான் தமிழே தெரியாதே?.ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை கூட,தமிழ் பேசத் தெரியாது. ஒருவேளை தமிழ் தெரியாத நின்னை ஞான் எதுக்கு காதலிக்கவேண்டுமென்று மிஸ் .பாப்பாத்தி கேட்டிருப்பாரோ? வசந்தன் சாரின் அச்சா தமிழர், அம்மா சைனீஸ் பெண். அப்படியென்றாலும் தினசரி ஆசிரியர் அறையில் சந்திக்கும் போது, காதலை சொல்லியிருக்கலாமே என்று இவள் ஒரு கணம் யோசித்ததுண்மை.அடடா, காதலை அப்படி மற்றவ்ர்கள் முன்னால் சொல்லமுடியாதல்லவா? உடனே அன்றிரவு எல்லோரும் தூங்கிய பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு கடிதம் எழுதினாள்.மறுநாள் வசந்தன் சாரிடம் கொடுத்துவிட்டாள். 2 நாட்களுக்குப்பிறகு, H.M, இவளை அழைப்பதாக அழைப்பு வர , H.M.அறைக்குள் நுழைந்தால் மிஸ்.பாப்பாத்தி ஒரு பக்கம், வசந்தன் சார் மறுபக்கம்,நின்று கொண்டிருக்க, இவளுக்கு ஒருகணம் ஒன்றுமே புரியவில்லை.
இவள் எழுதிய கடிதத்தை நீட்டி, இது நீ எழுதிய கடிதமா, என்று H.M.மிஸ்டர் லிம் கேட்க, இவளுக்கு அழுகையே வந்து விட்டது. வசந்தன் சார் மீது மன்னிக்க முடியாத கோபம் வந்தது.ஆனால் அவரோ நெருப்பு மாதிரி இவளை முறைத்துக்கொண்டு நின்றார்.
இவள் அழுதாள். தேம்பித்தேம்பி அழுதாள்..மிஸ் பாப்பாத்தி அருகே வந்து இவளை அணைத்துக்கொண்டார்.இவள் கண்ணீரைத் துடைத்து விட்டார்.

இனி யார் கேட்டாலும் இப்படி எழுதாதே, என்று வார்னிங்கோடு தலைமை ஆசிரியர் அனுப்பி வைக்க, அழுது கொண்டே வகுப்புக்கு வந்து விட்டாள். என்ன தான் நடந்ததாம்? இவளது கடிதத்தை வசந்தன் சார் பாப்பாத்தி டீச்சரின் கையில் கொடுத்த பிறகு , ஆசிரியர் அறையில் கூட இவர் முகத்தை ஏறிட்டு நோக்க டீச்சர் மறுத்துவிட்டாராம், இவர் வித்துப்போடிருக்கிறார்.
மறுநாள் காலையிலேயே டீச்சரின் முன்னால் போய் நின்றிருக்கிறார்.டீச்சர் கேட்டாராம்,
யார் இந்த கடிதத்தை எழுதித்தந்தார்கள் என்று சொல்லுங்கள், பிறகு எண்டெ பதிலை சொல்லுகிறேன் என்றாராம். வண்டு தானாக வலையில் விழுந்து விட்டது. விளைவு? டீச்சர் ஒரு வார்த்தை சொன்னாராம், “காதல் கடிதம் எழுதக்கூட ஒரு மாணவியின்உதவி தேடும் நிங்ஙளை ஞான் காதலிப்பேன் என்று எப்படி நினைத்தீர்கள்?

முதலில் அந்த கடிதத்தை ஒரு முறை யாராவது தமிழ் தெரிந்தவர்களிடம் காட்டிவிட்டு என்னிடம் கொடுத்திருக்கலாம். இந்த மலையாள காதல் கடிதம் படித்துவிட்டு ஞான் காதலிக்கணும் என்றால் , வாழ்க்கையில் எனக்கு காதலே வேண்டாம்”
ஆனால் வசந்தன் சாருக்கு டீச்சர்மீது கோபமில்லை. இவள்மீது தான் கண்மண் தெரியாத கோபமாம். தமிழ் தெரியாதென்றால் தெரியாது என்று சொல்வது தானே? ஏன் இப்படி என்னை அவமானத்துக்குள்ளாக்கனும், என்று கோபமோ கோபம் இவள் மீது. இவளைக்கண்டாலே, முகத்தைத் திருப்பிக்கொண்டு, வேகம் வேகமாக போய் விடுவார். வசந்தன் சார் அந்த ஆண்டு முடியும் வரை பிறகு வகுப்பில் இவளிடம் பேசுவதே இல்லை. இவள் நினைத்து நினைத்து அழுதாள், ஒருநாள்,தமிழ் ஆசிரியரிடம் ஒருமுறை சொல்லி அழுதபோது,
அவர் கேட்டார்.அப்படி நீ என்னதான் எழுதினே? இவள் சொல்லச் சொல்ல ,கேட்டுவிட்டு, தாங்கமாட்டாது அவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். ஏன் சார் சிரிக்கிறீர்கள்.? என்று கேட்க தைர்யம் இல்லை, ”குழந்தைகளிடம் போய் காதல்கடிதம் எழுதக்கேட்டால் இப்படித்தான்,அவனுக்கு வேணும். பாப்பாத்தி கொடுத்த தண்டனை சரியானதுதான்,என்று சொல்லி மேலும் சிரித்தார். இவளுக்கு மிகவும் வருத்தம்.பள்ளியிலேயே வசந்தன் சாரின் பிரிய மாணவியாயிருந்த , இவள் கேவலம் ஒரு கடிதத்தால் அவருக்கு ஆகாதவளாயிட்டாளே? இன்றும் அந்தக்கடிதத்தை நினைத்தால் அவளுக்கொன்றும் சிரிப்பு வருவதில்லை. ஆனால் இவ்வார சாஹித்ய கமலம் தொடருக்கு இவள் எழுதப்போக,எடிட்டரே ஒரு நிமிஷம் சிரித்துவிட்டு, கமலம்.நீ தான் சாஹித்ய கமலம், அடுத்த வாரமும் இப்படி ஏதாவது இண்டெரெஸ்டிங்காக எழுதேன் என்றாரே, ! அது கூடப் பரவாயில்லை.கணவர் இந்த கடித வரிகள் கேட்டு, ப்லீஸ், ஞான் கோபமாயிருக்கும் போது மட்டும் இந்த கடிதத்தை எனக்குப் படித்துக்காட்டென் , இந்த வாரம் முழுவதும் எனக்கு கோபமே வராது என்று சொல்லி, சொல்லி, ------அவரும் சிரிக்கிறார். 13 வயதில் ஒரு மாணவி, அதுவும் பேச்சுத்தமிழே தத்திமுத்தி பேசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ,எழுதியது என்பதை யாருமே உணரவில்லை.

அது தான் கொஞ்சம் வருத்தமாகப்போய் விட்டது. நிங்ஙள் சிரிக்க மாட்டீர்கள் என்றால்,
இதோ, இதுதான் அந்தக் கடிதம். படித்துவிட்டு நிங்ஙளே தீர்ப்பு சொல்லுங்கள் எண்டெ ஹிருதயமே! பாப்பாத்தி, ஞான் நின்னை நேசிக்கிறேன். நீயே என்டெ ஜீவன்,
நீயே என்டெ ஸ்வாசம், நீயல்லால் எனக்கு வாழ்க்கையே இல்லை. பாப்பாத்தி, ஒவ்வொரு நாளும் ரோஜாப்பூவைப் பார்க்கும்போதும் நிண்டெ முகம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.
நாமிருவரும் பள்ளிக்கு பின்னாலுள்ள பார்க்கில் ஒரு நாளாவது அமர்ந்து நிம்மதியாக பேச வேண்டும்.
ப்ரேமம் என்றால் என்ன? எனக்கு சரியாகப் புரியவில்லை.நீ எனக்கு கற்றுக் கொடுப்பாயா?
பாப்பாத்தி,என்டெ பொன்னே, என்டெ முத்தே, நீ ஒரு நிலா. நீ ஒரு வீணை.
நீயே எனக்கு பூரண சந்திரன். பாப்பாத்தி ஐ லவ் யூ, நம்முடைய விவாஹத்துக்கு நினக்கு என்ன வேணும்/ பச்சைக்கல் மாலையா? பவழமல்லி நெக்லஸா? பீதாம்பர கல்சரமா?வர்ணாம்ஸ்ர பதக்கமா? என்ன வேண்டும் சொல் கண்ணே? என்டெ பெண்ணே? ஞான் வாங்கித்தருகிறேன். நிண்டெ சம்மதம் தெரிந்த பிறகு இன்னும் எழுதுகிறேன்.உடனே பதிலை எதிர்பார்க்கிறேன். பாப்பாத்தி, சதா நிண்டெ நினைவால் உருகி வாழும்,
நிண்டெ ஸ்வாமி திருவாளர் வசந்தன் அவர்கள்.

[காதலரை, என்னவென்று அழைப்பதென்று தெரியாததால் , ஸ்வாமி என்று இடவேண்டியிருந்தது.]



Email:- saahithyam@yahoo.com.sg

No comments:

Post a Comment