Sunday, May 17, 2009

கூத்துப்பட்டறையில் - 9

கூத்துப்பட்டறையில் 9
[உட்டாலங்கடி கிரி கிரி, அம்மா அம்மா வடகறி----???]


கவிதை சொற்களில் இல்லை.ஒலி நயத்தில் இல்லை. கருத்திலே, மடை திறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே , சுட்டிக்காட்டும் பேருண்மையிலே,பொதிந்து கிடக்கிறது” என்றார் ந.பிச்சமூர்த்தி .

ப்ராய்டிசம், மார்க்ஸிஸம், பற்றிய பிரக்ஞையோடு, தான் கவிதை படைக்க வர வேணுமென்று சொல்வது ,போல் அபத்தம் வேறில்லை என்பேன். கவிதை, கனவாய், மழைத்துளியாய், மோன கீதமாய் , மட்டுமே என்னில் முகிழ்ந்துள்ளது. கொட்டும் மழையில், சிவந்த ரோஜாவின் பட்டிதழில், கொண்டவனின் முதல் ஸ்பரிஸத்தில், கண்மணியை மணிவயிற்றில் உணர்ந்த நிமிஷம், எங்கிருந்து வந்தாய் குழந்தாய்
அதை ஞானும் அறிந்திடச்சொல் குழந்தாய், என ஸ்பஷ்டமாய் மனதால் மட்டுமே பேசினேனே, எல்லாமே கவிதைதானா>? ஊஹூம், கவிதையால் ஆட்பட்டேனே. அதுவே கவிதைதானே?

ஆனால் எப்பொழுதுமே என்னில் கிளைத்த சம்சயம், கவிதையை மூவகையாகவே பிரித்துப் பார்க்கிறேன். involuted writing, convoluted wrtiing,pattern writing, இந்த மூன்று தளங்களில் , ஞான் எங்கே நிற்கிறேன்?

[உரையாடல் தொடர்கிறது]


ஞான் ---முற்போக்குக்கவிதைகளில் பல புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருந்தாலும் ,பூரண கவித்துவமின்றியே உலா வருகின்றன. சீர், அசை, கூட சரியாக உணரப்படாமல், எதுகை, மோனையும் இல்லாமல், வெறும் மடித்துப்போட்ட வசன வரிகளாகவே
வருவதை எப்படி ஏற்பது? முக்கூடப்பள்ளு, காவடிச்சிந்து, நொண்டிநாடகங்களைக்கூட ஏற்க முடிகிறது?
ஆனால் இலக்கணம் மீறிய , மரபுகளை உடைத்து,இலக்கணத்தையே சிதைத்து, சோதனைமுயற்சிகளால் தான் இலக்கியம் புதுப்பிக்கப் படவேண்டுமா?
ஏன்? ஏன்? சார்? கனியிருக்க காய் எதற்கு? புஷ்பம் போதுமே? பாறை எதற்கு?
இந்த nonlinear எழுத்துக்கள் ஒரு சராசரி வாசகனைச் சென்றடையுமா? அல்லது புரிந்துகொள்ள முடியுமா? வாசகனை மண்டையைப்பிய்த்துக்கொள்ள வைப்பதுதானா புதுமை ,என்று விமர்சிக்கிறார்களே?

ஆசிரியர் ---என்னுடைய நாடகங்கள் புரியவில்லையென்றால் எண்டெ ஸ்க்ரிப்டை வாங்கிப்படித்துப்பாருங்கள், என்றுதான் சொல்லுவேன்;
[மேற்கூறிய இதே வரிகளைத்தான் சிங்கை வந்தபோதும் பத்திரிகை ,தொலக்காட்சிப்பேட்டியில் கூறினார் முத்துசாமி]
புதுமை இலக்கணத்தை சிதைக்கிறது என்பது வாதமே, தவிர அதுவே நிலைப்பாடு அல்ல.

ஞான் -----சார், இப்படி ஒரு கவிதை---
எல்லாம்
அடையமுடியும் தூரத்தில்
இடையில் தடையாய்
சில எச்சில் பருக்கைகள்”
வண்ணதாசனின் இக்கவிதை மிக இயல்பாக வாசிக்க முடிகிறது. ஆனால் கவிதைக்கான அலங்காரமே இல்லையே? புதிதாக ஒரு வடிவம் மனதில் எழும்போது, அந்த தரிசனத்தை, படிம அழகோடு பதிவு செய்யவேண்டாமா?

ஆசிரியர்---கவிதைக்கு அலங்காரம் எதற்கு? மரபு என்பது யாப்பு மட்டுமல்ல.தமிழின் புராதன இலக்கியத்திலேயே, யாப்புக்குக் கட்டுப்படாத சொற்சீர், அடி பற்றிப் பேசப்பட்டுள்ளது.அப்பொழுதே புதுக்கவிதைகான மூலாதாரம் வித்திடப்பட்டுவிட்டது.
ஒரு கவிஞனின் கிரியா சக்தியில் உதயமான கவிதையைப்பற்றி நிங்ஙள் அலசலாம். அந்த உரிமை உங்களுக்கிறது?

ஞான் --கவிதை என்பது, ஒருவகை கருணைப்பிரவாஹம்,உலகினைப் பரிவுடன் பார்க்கவேண்டியதுதானே கவிஞனின் இயல்பு.

ஆசிரியர்--- அது உங்கள் பாணி. அது தவறென்று சொல்லவில்லை. ஆனால் இது போதாதென்றுதான் சொல்கிறேன். உங்களால்
இதைவிட அருமைகளை சிருஷ்டிக்க முடியும் .

ஞான் ---சார், வன்முறை,கத்தி, ரத்தம்,,போன்றவைதான் புதிய சிந்தனை, என்றால் என்னால் நினைக்கவும் இயலாது.
post modernism" என்ற பெயரில் வரும் அலசல் மட்டும்தான் அறிவுஜீவித்தனமான,--எழுத்து என்கிறீர்களா?

ஆசிரியர்---பின்நவீனத்துவம் என்பது இலக்கியத்தில் மட்டுமல்ல, ஓவியத்தில், நாட்ய சாஸ்த்ரத்தில்,என எல்லா நுண்கலைகளிலும் உண்டு.
இதில் பிரச்சினை என்னவென்றால், கவிதையில் பாரதியைத்தவிர வேறு யாரையுமே,நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களே அதுதான் , தவறு..
ஆனால் தமிழில் புதுக்கவிதையில் எழுச்சியைக் கொண்டு வந்தவரே, பாரதிதானே?

ஞான் --பாரதி இமயம். பாரதி சிகரம் சார்.தமிழின் மிகப்பெரும் தவம் பாரதி. பாரதிதான் கவிதை, பாரதி மட்டுமே கவிதை.
பாரதியைப்போல் எழுதமுடியுமா?

ஆசிரியர்--- இந்த பரவசத்தோடே நீங்கள் ஏன் முயலக்கூடாது? இதுவரை நீங்கள் பெற்றுள்ள ,விருதுகளும் பரிசுகளும் -------, -----,
மட்டுமல்ல சாதனை. இன்னும் உங்களால் சாதிக்க முடியும்? உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.

[பட்டென்று கோபம் வந்துவிட்டது. தாங்கவே முடியவில்லை. 12, 13 வயதில் கவிதை எழுதத் தொடங்கியவள்தான். அதற்காக, என்டெ literary priciple , எனக்கே எனக்கான, இலக்கிய இலக்கணம் , அதை ஞான் எப்படி மீறுவேன்?]

ஆசிரியர்---கமலாதேவி, [ஆசிரியர் இப்படித்தான் இவள் முழுப்பெயரில்தான் அழைப்பார்]
உங்கள் எழுத்தில் மிக துல்லியமாக, மென் உணர்வுகளைக்கூட மிகஅழகாய் , வாசகனிடம் நேரடியாகவே கொண்டு செல்லும் ஆற்றல் இருக்கிறது.. .கதை சொல்லும் உத்தியிலும் வாசகனைக்கவரும் , நிதானமான , பண்பட்ட நடை அழகில் மிஞ்சியே நிற்கிறீர்கள் ,
ஆனால் நாடகத்துறைக்கு இது போதாது. கோடு போட்டுக்கொண்டு , இப்படித்தான் என்று நவீனப்பார்வையில் எழுதமுடியாது

ஞான் ---தக்‌ஷணமே ஒரு கவிதை மனதில் தோன்றுகிறது. சொல்லட்டுமா சார்?

ஆசிரியர்----ம்ம்ம்-- சொல்லுங்கள்,

ஞான் ---- ராஜ்யம் காணான் வந்ந பெடக்கோழி,
பூஜ்யம்-------
அட, மலையாளத்தில் அல்லவா வருகிறது,சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
sorry sir, ஞான் இதை தமிழ்படுத்த சில நிமிஷங்கள் வேண்டும்.

ஆசிரியர்--- வேண்டாம், மலையாளத்திலேயே தொடருங்கள். உடனே பிரித்துப்போடும் போது சரளம் போய்விடும்.
கவிதையும் சிதறும் .வேண்டாம், மலையாளத்திலேயே தொடருங்கள்,

ஞான் -- ஆனால் இங்கு யாருக்கும் புரியாதே?

ஆசிரியர்--தமிழும் மலையாளமும் , தாய் சேய்மொழிகள்தானே.?எப்படிப் புரியாமல் போகும்? மலையாளிப்பெண் தமிழில் கவிதை
சொல்லும்போது, தமிழர்கள் மலையாளம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

[கண்கள் நிரம்பி, பொட்டென்று பொலபொலவென்று வழிந்துவிட்டது.பரவசம் தாங்கவேயில்லை.]
எங்குமே கிட்டியிராத அருமை. தமிழிலிருந்து கடன் போன மொழிதானே மலையாளம்? முதலில் இந்த மலையாளமே வடமொழிக்கலவைதானே???-
தமிழின் பிச்சை தானே மலையாளம்? -இன்னும் இன்னும் --வேண்டாம் எழுதவே ,----------
இப்படியெல்லாம் தான் கண்டணம் கேட்டுகேட்டு மனசு புண்ணாகியிருந்தாள்,
ஆனால் முத்து சாமி சார் வாயிலிருந்து விழுந்த வரிகள்?-----அப்படியே வணங்கத் தோன்றியது}

படபடவென்று கவிதை வந்து விழுந்தது. ஆசிரியர் ரசித்துக் கேட்டார். நிறைய உபதேசித்தார். இப்படியாக புதுக்கவிதைக்கான புதுச்சாரளம் இவளுக்குத்திறந்து விடப்பட்டது.

அன்றுமாலையே பசுபதியும் , சந்திரா, கலைராணி,என, இவளுக்கு சென்னைத்தமிழைப்பற்றி விளக்கினார்கள். மறக்கவே முடியாத பலசொற்களுண்டு, ஆனால் இன்று நினைத்தாலும் சிரித்துச் சிரித்து கண்ணீர் வரும் வரிகள் ஒன்றுண்டு.
என்ன தெரியுமா? அம்மாடி, அம்மாடி, ---சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
”உட்டாலங்கடி கிரி கிரி -அம்மா அம்மா வடகறி?
என்ன புரியலையா? எனக்கும் புரியவில்லைதான். ஏன் தெரியுமா? இதற்கு அர்த்தமே இல்லையாம்?
..... [தொடரும்]

No comments:

Post a Comment