Saturday, December 8, 2012

தமிழிலக்கியத்தில் ஜே.எம்.சாலி




வாழ்க்கையிலிருந்து மட்டுமே இலக்கியம் பிறக்கிறது, என தீவிரமாக நம்பிய காலகட்டத்தில் எனக்கு அறிமுகமானவர் திரு.ஜே.எம்.சாலி அவர்கள். இவரைப்பற்றி ஒரு கட்டுரை வேண்டுமென்று தம்பி இலியாஸ் அழைத்துக்கேட்டபோது, நேரமில்லாத நெருக்கடியில், திணறத்திணற நான் ஒரு மலையாள ஆய்வுக்கட்டுரையில் மூழ்கியிருந்த நேரம்,என்பதை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அதைவிட குடும்ப சகிதம் இன்னும் ஒருவாரத்தில் லண்டனுக்குப் போகும் பயண அவசரம் வேறு.

முடியாது என்றே சொல்லிவிடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் யோசித்துப்பார்த்தபோது, பொறி தட்டிய ஒரு வசனம்----.
சாலி சாரைப்பற்றி எழுதாமல் வேறு யாரைப்பற்றி தான் எழுதுவது? ?
அவ்வளவுதான், அனைத்து வேலைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, கணிணிக்கு முன்னால் அமர்ந்தபோது , சாலி அண்ணன் அவர்களின் எழுத்துப்படிவங்கள் தான் கண்முன்னே விரிந்து நின்றது.

இவரது எழுத்துக்கள் சாலி அவர்கள் ஆனந்தவிகடனில் ஆசிரியராகப்பணி புரிந்த காலத்திலேயே எனக்கு அறிமுகம் உண்டு. சென்னையில் பின் நவீனத்துவ
நாடகப்பயிற்சிக்குச் சென்றபோது நான் கலந்துகொண்ட முக்கியமான நிகழ்வுகளில் சிலர் அக்கறையோடு தேடிவந்து ”ஜே.எம் .சாலியைத்தெரியுமா?” என்று விசாரித்தார்கள்.,
“அவரது எழுத்து தெரியும்.ஆனால் நேரில் சந்தித்து அளவளாவியது இல்லை, ”என்று மட்டுமே கூற முடிந்தது.

அடுத்த கட்டமாக சா.கந்தசாமி சிங்கை வந்தபோது, எப்படியோ ஒரு இலக்கிய நிகழ்வில் சந்தித்துவிட்டோம்.தொலைபேசியில் மட்டுமே உரையாடியுள்ள நாங்கள் நேரில்
சந்தித்தபோது ,இலக்கியம் மட்டுமே எங்கள் உரையாடலில் உச்சமாக இருந்தது.இப்படித்தான் ஜே.எம்.சாலி எனக்கு இலக்கியசகோதரனாக அறிமுகமானார்.
சிறுகதைக்கும் நாவலுக்கும் இடைப்பட்ட குறுநாவலில் நான் மனம் பறிகொடுத்து எழுதிக்கொண்டிருந்த கால கட்டத்திலும் சரி, மேடைநாடகம் எழுத்து, இயக்கம் ,
என நான் படிமங்களில் முன்னோக்கிப்போகும்போதும் சரி.
திரு.சாலி அவர்கள் என்னுடைய அனைத்து இலக்கியப்பயணங்களிலும் சக பயணியாக , என்னுடைய இல்க்கிய ஆக்கங்களை கவனித்தே வந்திருக்கிறார்,. என்னுடைய கதையோட்டம் பற்றியும், கதையின் உருவகவடிவம் பற்றியும் மிகவிரிவாக நிகழ்தளத்தில் என்னோடு பேசியுள்ளார்.

வானொலியில் சிறப்பு நாடகங்கள் எழுதும்போதும் நாங்கள் ஒரே தளத்தில் பல கருத்துக்களை விவாதித்திருக்கிறோம்.
சிறுகதைகள், நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள், இஸ்லாமியக்கட்டுரைகள், எனப்பல தளங்களில் இவரது படைப்பிலக்கியங்கள் படிக்கும்போது, இவரது பக்குவம், முதிர்ச்சி
என நிகழ்தளத்தில் உணரமுடியும்.
கதைகளுக்குள் கதையைத்தேடுவது, கதைக்குள் ரஹஸ்ய விகசிப்பு , எனும் பின்நவீனத்துவ சாயலை மறந்தும் கூட இவர் பின்பற்றுவதில்லை.முழுக்க முழுக்க யாரையுமே நோகடிக்காத, உறுத்தல் இல்லாத, பாசாங்கற்ற பாணியே இவரது கதை இலக்கியம்.புனைவிலக்கியத்தில், மொழிக்கட்டுமானம், சொற்சிக்கனம், தன்னளவில் நேர்த்தியாகச் சொல்லத்தெரிந்தவர்.
யதார்த்த இலக்கியத்தில் இவருக்கென்று தனிநடையில் எழுதுவதிலிருந்து இவர் முன்னோக்கியதில்லை.அதை பிழை என்று சொல்லமுடியாது.
செகாவ், மாப்பாசான் , போன்ற மாபெரும் இலக்கியவாதிகளின் நடைக்கும், பூக்கோ, நீட்சே, ஹெலென் சீச்சு, தெலியூஸ் கத்தாரி போன்றோரின் மொழிநடக்கும், உள்ள வேறுபாடுதான் ஜே.எம்.சாலிக்கும்,இன்றைய பின்நவீனத்துவ படைப்பளிகட்கும் உள்ள வேறுபாடு ‘ என்று துணிந்து கூறலாம்.

இனி இவரது நாவலைப்பற்றி --இவரது நாவல்களிலேயே மிகவும் பேசப்பட்ட நாவலான ” கனாக்கண்டேஎன் தோழி”யை அவ்வளவு எளிதில் வாசகர்கள் மறந்திருக்கமுடியாது.தமிழக அரசு பரிசு பெற்ற நாவல் அது. யதார்த்தப்பிரக்ஞையில் மட்டுமே இந்நாவலை வாசிப்பவர்கள் மெய்ம்மறந்து வாசிக்கும் பல அழகியல் கோட்பாடுகளும், செவ்வியல் மரபுகளும் நாவல் நெடுக சொல்லப்பட்டு வருவதை இலக்கியம் சார்ந்த எவருமே மறுக்கமுடியாது.நாவல் தளத்தில் உரையாடும்போது, கற்பனாவாதமும், பொதுமைசார்ந்த மரபும் சற்றே விலகியிருந்தாலும் , இருத்தலியல் கோட்பாட்டில் கைகோர்த்து நிற்பதாலேயே , வாசகனுக்கு கதையோடு நெருக்கம் தரும் விதத்தில்,இவர் வெற்றி பெற்றுள்ளார்
என்பது மற்றுமோர் உண்மை. சில இடங்களில் மனிதம் சார்ந்த அனைத்துமே புனைவுதானோ என நம்மை சிந்திக்கவும் வைக்கிறார்.

கதையாடலில் இவரது சொல்லாட்சியும் கூட பூடகத்தன்மை அறியாத ஸ்படிக வார்ப்பே.
இவரது திறனாய்வுக்கட்டுரையில், சிறப்பு என்னவென்றால், மடித்துப்போட்டு எழுதும் படிமங்களை அறவே தூர்த்தெறிந்துவிட்டு , மேன்மையான இலக்கிய நடையில்
மட்டுமே எழுதி வாசகர்களை கவர்கிறார். பழுத்த ஆன்மீகவாதியான இவரும் அதைவிட கடுத்த இறைவழிபாட்டில் மெய்ம்மறந்து வாழும் ஞானும் ஒருபோதும் வேற்றுமை அறிந்ததில்லை. இவரது தமிழ் முதுநிலைப்பட்டதாரியினது தமிழ் .அந்த அருமையை மிக கவனமாக தன்னுடைய இலக்கியக்கட்டுரைகளில் பதிவுசெய்கிறார்.
இவரது எழுத்தை மலையாளத்தில் , தருக்கபூர்வமான நிலையில் நான் அறிமுகப்படுத்தியுள்ளேன். தமிழ் இலக்கியம் தந்த அருமையான என் அண்ணன் ஜே.எம்.சாலி .

அண்மையில் இவருக்கு இலக்கியத்தில் உயரிய பரிசான கலாச்சார விருது கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் வாழ்ந்துவரும் இவருக்கு இந்த சிறப்பு கிட்டியதில் அகம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.எளிய வேண்டுகோள் ஒன்றுண்டு. இனிவரும் காலத்தில் இளையர்களுக்கு தமிழில் என்ன பங்குண்டு, என்பதை உணர்த்த இவர் பல நூல்கள் எழுதி , அதை பதிவு செய்யவேண்டும்.
குறிப்பிட்ட விருதுகளுக்குப் பிறகு இனி ஏன் எழுதவேண்டும் எனும் யாருடைய கோட்பாட்டையும் பின்பற்றாது, இவர் தொடர்ந்து எழுத்தில் இருக்கவேண்டும்.
இன்று மதியம் 3 மணிக்கு தேசிய நூலகத்தில் இந்த மூத்த எழுத்தாளரின் உரை, திரு.அருண் மகிழ்நன் தலைமையில் நிகழவுள்ளது. அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்கலாம். இன்னும் என்ன சொல்ல? மனைவி, மகனோடு இவர் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

[ஜே.எம்.சாலி.சிறப்பிதழுக்காக எழுதிய கட்டுரை]

No comments:

Post a Comment