Thursday, July 28, 2011
நுவல்
நுவல் .
தமிழ்முரசின் முதன்மை துணை ஆசிரியர்,
அண். சிவ. குணாளனின் , உரையிலிருந்து
இளம் வயதிலிருந்து தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் எழுதி வரும் திருமதி கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்இலக்கியத்தில் முத்திரை பதித்த, சிங்கையின் முன்னணி எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், நாடகங்கள்,ஆய்வுக்கட்டுரைகள் என, அனைத்துத் தளங்களிலும் எழுதிவருகிறார். பள்ளியில் குழந்தை, தமிழ் கற்பதால் பயன் என்ன என்று சிந்திக்கும் இக்காலத் தமிழரிடையே, மலையாளிப்பெண்ணான இவர் தமிழ்
படித்து தமிழிலக்கியம் படைக்க வந்தது தமிழுக்குக் கிட்டிய பெருமை.
”தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி ”என, பள்ளிமாணவியாக இவர் கவிதையில் பரிசு பெற்றகாலத்திலேயே,தமிழ்முரசை நிறுவிய, ஆசிரிய முன்னோடி, தமிழவேள் கோ.சாரங்கபாணியால் பாராட்டுப்பெற்ற எழுத்தாளர் விறுவிறுப்பான எழுத்துநடையால் ,அங்கதச்சுவையோடு, இவருக்கே உரிய அழகுதமிழால் ,இவர் எழுதும் கதைகள் தமிழ் முரசில் பிரசுரம் காணும்போது , இவர் கதைகளை வாசிக்க இவருக்கென பெரிய வாசகர் வட்டமே சிங்கையில் உண்டு.
கதை மாந்தர்களின் மனங்களில் ஊடுருவிச் சென்று அவர்களை அச்சு பிசகாமல் அப்படியே விளக்கும் திறன் பெற்றவர் கமலாதேவி. இவரது கதையைக் கையில் எடுப்பவர்கள், லேசாக ஒரு புரட்டுப் புரட்டுவோம் என்று எண்ணினால் நிச்சயம் தோற்றுப்போவார்கள்.
ஏனெனில் இவரது கதைகளின் தொடக்கமே நம்மை முடிவுவரை இழுத்துக்கொண்டு சென்றுவிடும். அதைவிட அழகு அவரது கதைகளின் முடிவு நம்மை மெய்சிலிர்க்கச் செய்வதுதான். அந்த முடிவு சில சமயம் நமது வாழ்க்கையில் ஏற்படப்போகும் புதிய
தொடக்கமாகக்கூட இருக்கலாம். நாசிலெமாக், விரல்,முகடுகள், சிங்கப்பூர் வாழ்வியலை அப்படியே படம் பிடித்துக்காட்டுபவை,மின்மினி--சிங்கப்பூரில் இதுவரை யாருமே சொல்லியிராத magical realism கதை. ”காக்காய்பொன்” வனத்தைப்பற்றிய ஒரு பெண்ணின் பார்வையில் மிகுந்த ஆளுமையோடு எழுதப்பட்ட நடை.
நுவல்---புனைவிலக்கியத்தில் ஒரு கிளியைக்கொண்டு எழுதப்பட்ட இக்கதை மகத்தான மானுட நிதர்சனத்தின் தரிசனம்.சோறு, நண்டு,உற்றுழி, மிதவை, ,ஞயம் பட உரை, என ஒவ்வொரு கதையும் நம்மை சிந்திக்கவே வைக்கிறது. நுகத்தடி, கதையில் மாதந்தோறும் , மனநல மருத்துவமனைக்குச்சென்றுதவும் ஒரு எழுத்தாளப்பெண்மணியின் அனுபவம் பேசுகிறது. படித்து முடித்த நம் கண்களும் கலங்குகிறது.தாகம் ஒரு பெண்ணால் மட்டுமே இந்த அநுபவத்தை எழுதமுடியும் என அழகாக உணர்த்துகிறார்.
ஒரு கதைசொல்லியாக ,எழுத்தாளருக்கேயுள்ள குமுகாய அக்கறை, மொழி மீதான இவரதுபற்று இவரது கதைத் தலைப்புக்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்
கட்டுப்பாடு ஏதுமின்றி கட்டவிழ்ந்து திரிவதுபோல் உடையணியா வார்த்தைகளை உலவவிடுவதுதான் தீவிர எழுத்தாளும்போக்கு என்பதைவிட, குமுகாய அக்கறையை முன்னிறுத்தியும் மொழியைச் சீர்தூக்கியும் சிந்தனையால் செதுக்கியும்,படைக்கும் இவரது எழுத்தாளும் உத்தி உயர்ந்தது. கட்டுப்பாடுடன் செய்யும் வேலைகளுக்கு கவனமும் உழைப்பும் அறிவாற்றலும் சிந்தனையும் தேவை. அவற்றை இவரது படைப்புகளில் காணமுடியும்.
நல்ல தமிழில் எழுதும்போது படைப்புகளின் பாத்திரங்களைச் சித்திரித்தல் கடினம் ,என்ற குறைகூறல்களுக்கிடையே கமலாதேவி அரவிந்தன் போன்ற எழுத்தாளர்கள் தோன்றியிருப்பது துருவ நட்சத்திரத்தைப் போன்றதாகும். கதைகளின் வாயிலாக இவர், நம்மால் மறக்கப்பட்ட வளமான தமிழ்ச் சொற்களை, அழகான மரபுச்சொற்களை வாசிக்கத்தருவது இன்னொரு சுகமான அனுபவம்.காக்காய்பொன், நுகத்தடி, நுவல்---, என்றல்ல, எப்பொழுது இவரது கதைகள் பிரசுரத்துக்கு வரும்போதும் எனக்கு ஏற்படும் பிரமிப்பே,இவரது தலைப்புக்கள் தான். எங்கிருந்து தேடித்துருவி இப்படித் தலைப்புக்கள் தருகிறார் என்பதுதான்.தாம் படைக்கும் தமிழ் படைப்புகளில் நல்லதமிழ் கையாளப்பட வேண்டும் என தவமிருப்போர் இன்னமும் இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன். .சிங்கப்பூர் வாழ்க்கைச் சித்திரத்தை இவ்வளவு அழகாய் , தமிழில் எழுதிவரும் , இவரது தமிழ்ப்பற்றுக்கு முன்னே
இவரை மலையாளிகள் மட்டுமல்ல, தமிழர்களுமே கூட பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
தொடர்ந்து யுகமாயினி சித்தன் மூலம் இன்னும் இவரது நூல்கள் வெளிவரவேண்டும்.
எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனின் தமிழ்ப் பணி தொடர பெருமையோடு வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
அண் சிவ குணாளன்
தலைமைத் துணை ஆசிரியர்,
தமிழ் முரசு, சிங்கப்பூர்
Subscribe to:
Post Comments (Atom)
சிங்கப்பூர் வாழ்க்கைச் சித்திரத்தை இவ்வளவு அழகாய் , தமிழில் எழுதிவரும் , இவரது தமிழ்ப்பற்றுக்கு முன்னே
ReplyDeleteஇவரை மலையாளிகள் மட்டுமல்ல, தமிழர்களுமே கூட பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
வாழ்த்துகள்