Saturday, June 4, 2011

'நுவல்' ராம.கண்ணபிரானின் நுவல் உரையிலிருந்து


கமலாதேவி அரவிந்தனின் 'நுவல்' முதலான சிறுகதைகள்.
இராம கண்ணபிரான் - உரையிலிருந்து

சிங்கப்பூரின் முன்னணிப் படைப்பாளியான திருமதி கமலாதேவி அரவிந்தன், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறுகதைகள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் என எண்ணற்ற ஆக்கங்களை, வானொலி, தொலைக்காட்சி, மேடையரங்கு வழியாகவும், அச்சு, இணைய ஏடுகள் வாயிலாகவும் நமக்கு இலக்கியமாகத் தந்துகொண்டிருக்கிறார். அவர் தாம் எழுதிய நூற்றுமுப்பது சிறுகதைகளுள் பதின்மூன்று கதைகளைத் தேர்வுசெய்து, அவற்றை 'நுவல்' என்னும் பெயரில் ஒரு தொகுப்பு நூலாகவும் நமக்கு அளித்திருக்கிறார்.

'நுவல்' நூலின் சில சிறுகதைகளை, 'அனுபவங்களே கதைகளாக', 'யதார்த்தக்கதைகள்', 'இருவகை மனங்கள்' ஆகிய பிரிவுகளில் நாம் பார்வையிடுவோம்.

ஒரு படைப்பாளி தாம் பெற்றிருக்கும் மூன்றுவகை அனுபவங்களைத் தம்முடைய கதைப்பாத்திரங்களின் வழியாகச் சொல்லி, அவற்றைத் தம் வாசகர்களின் மனங்களில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றார். ஓர் எழுத்தாளர் தாமே நேரடியாய் அனுபவிக்கும் அனுபவம், அவருடைய தனிப்பட்ட அனுபவமாகும். கதையாக்கத்தில் இது அவருடைய அடிப்படை அனுபவமாக அமைகிறது. this is formed as his primary experience.

ஒரு கதாசிரியர் மற்றவர் தம்மிடம் சொல்கின்ற அனுபவத்தைத் தம் செவிகளில் கேட்டுணர்ந்து, அதைத் தம் கதாபாத்திரங்களின் வாயிலாக, நேயர்களுக்கஅளிப்பது இரண்டாவது வகை அனுபவமாகும். this is evolved as his secondary experience.

ஒரு கதைசொல்லி களத்தில் இறங்கித் தகவல்களையும், தரவுகளையும் சேகரித்து, அவற்றின் அடிப்படையில் கதைமாந்தர்களை உருவாக்குவது, மூன்றாவது வகை அனுபவமாகும். this is assembled as his researched experience.

'நுவல்' நூலின் ஆசிரியை கமலாதேவி அரவிந்தன், தம்மிடம் இருக்கும் இந்த மூன்றுவகை அனுபவங்களையும் பயன்படுத்தி, சிறந்த சிறுகதைகளை உருவாக்கியுள்ளார். சில உதாரணங்கள் மூலம், இவற்றை நாம் காண்போம்.

**

'நுவல்' என்ற சிறுகதையில் நமக்கு அறிமுகமாகும் ரேணு, தன் மணாளன் மாதவன் தன் வீட்டுக்குக் கொண்டுவரும் ஒரு கிளியைப் பாசத்துடன் வளர்க்கிறாள். அந்தக் கிளிக்கு இரண்டு சிட்டுக்கண்கள். வளைந்த மூக்கு. கழுத்துக்குக் கீழே குட்டிக் குட்டிக் கறுப்புப் பொட்டுக்கள்.உடம்பெல்லாம் நீல வன்ணப்புள்ளிகள்.கிளிக்கூண்டைச் சுத்தப்படுத்துவதும், அது உண்ணத் தானியங்களும், பழங்களும் வைப்பதும், அது அருந்த குப்பியில் நீரை நிரப்புவதும் என்று ரேணுக்குக் கிளிப்பராமரிப்பில் பொழுது கழிகிறது.

ஒரு சமயம், ரேணு தன் கிளியின்முன் சஹானா இராகத்தில் ஒரு புதுக்கவிதையைப் பாடுகிறாள். இன்னொரு சமயம், அவள் தன் கிளியின் முன்பாக ஒரு நடன அசைவை ஆடிக்காட்டுகிறாள்.ஒரு நாள் ரேணு தன் தோழியிடம் நேரப்படி பேசியதால், கிளி கோபத்துடன் அவள் நெஞ்சிலும், கைகளிலும் கொத்திவிடுகிறது. வலியில் அவள் கிளியைச் ''சீ கழுதை!'' என்று திட்டிவிட, அது 'விர்' என்று ஜன்னல்வழியே வெளியில் பறந்துபோகிறது. இரண்டு தினங்கள் ரேணு கிளிக்காகத் தவித்துத் தவித்து உருகுகின்றாள். மூன்றாம் நாள் இரவு, கிளி அவள் வீட்டுக்குத் திரும்பி வரவே, ரேணு அதைத் தன் கைகளில் வைத்துக்கொண்டு, ''கண்மணி!'' என்று கொஞ்சுகிறாள்.

கிளிக்கும் ரேணுவுக்கும் உள்ள நேச உணர்வை, கமலாதேவி அரவிந்தன் அனுபவபூர்வமாகத் தீட்டியிருக்கிறார்.

**

மாதவிடாய் நேரத்தில் உடல் வேதனைகளோடு, ஒரு வாய்த் தண்ணீருக்குத் தவிக்கின்ற நடுத்தர வயதுப் பெண்மணி தாரிணியைப் பற்றி, 'தாகம்' சிறுகதை நெக்குருகக் கூறுகிறது. பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் சுதாகர் ஆபீசுக்கும் சென்றிருக்கும் வேளையில், தாரிணி படும் தேக இம்சைகள் நம்மைக் கலங்கவைக்கின்றன. மார்பகங்களில் நெறிக்கட்டிக்கொண்டாற்போல் உபாதை. அடிவயிற்றில் ஆயிரம் ஊசிகள் குத்தித் துளைப்பதுபோல் வலி. இடுப்பில் இரம்பம்போட்டு அறுப்பது போல் வேதனை. தொடைகளில் கனன்று எரியும் எரிச்சல். முட்டிக்கால்களில் முணுமுணுவென்று அவஸ்தை. உதடுகள் உலர்ந்து, நா வறண்டு, தாரிணியின் தொண்டை தண்ணீருக்குத் தவிக்கும் தவிப்பு. திங்கள்தோறும் பத்து, பன்னிரண்டு நாட்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கில், அயர்ன், கல்சியம் மாத்திரைகளை விழுங்கியும், இவளைப் பீடித்திருக்கும் இரத்தசோகை, லோபிரஷர், இதய பலவீனம். அதனால் சதா மயக்கம், தலைச்சுற்றல்.

தாரிணி அனுபவிக்கும் மாதாந்திர உடல்வலிகளை, வாசக நெஞ்சங்களும் உணர்ந்து உருகும்வகையில், கதை ஆசிரியை தத்ரூபமாக எழுதியிருக்கிறார்.

**

'காக்காய்ப்பொன்' கதையிலே, சிங்கப்பூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஓர் ஆங்கில நாளேட்டில் நிருபர்களாகப் பணிபுரியும் செழியனும், ராபர்ட் சுவாவும், தமிழகத் தலைநகரான சென்னையிலிருந்து பல கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள ஒரு கானகத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்கள். அங்கே பகலிலும் இரவிலும் அவர்கள் தரிசிக்கும் காட்சி அனுபவங்களை, நூல் ஆசிரியையின் மொழிநடையிலேயே நாமும் அனுபவிப்போம்.

ஆடிப்பெருத்த மரங்கள். சிறுத்து நீண்டு வளர்ந்த மரங்கள். இலை, தழை எனக் கொப்பும், கிளையுமாய் வழிந்த மரங்கள். தாங்களே மெட்டுப்போட்டாற்போன்ற ஓர் இசைக்கு, சுழன்று சுழன்று ஆடும் காட்டுச்செடிகள். 'கிரிச்' சிட்டுச் சிறகடிக்கும் பட்சிகள். 'உர்' என்று முறைத்துப் பார்க்கும் வானரங்கள். நெருப்பாய்க் கனன்று நிற்கும் காட்டுக் கோழிகள். இது பகல் நேரத்துக் கானகக்காட்சி. பறக்கும் இரவு பூச்சிகள். ரீங்காரமிடும் சில்வண்டுகள். நகரும் அட்டைகள். ஊரும் சின்னஞ்சிறு பாம்புகள். இது யாம நேரத்து உயிரினங்களின் இயக்கம்.

'யதார்த்தக் கதைகள்' என்ற பிரிவில் கமலாதேவி அரவிந்தனின் படைப்புகளை நாம் கண்ணோட்டம் இடும்போது, அவருடைய பெரும்பாலான கதைகளில் காரண காரியங்களை உள்ளடக்கிய ஓர் இயல்புதன்மை நிலவுவதைக் காணமுடிகிறது. சான்றுக்கு, 'விரல்' என்னும் சிறுகதையைப் பார்ப்போம்.

**

வேலை அனுமதிச்சீட்டில் கடுமானத்தொழில் புரிய, தமிழகக் கிராமத்திலிருந்து பாவாடை சிங்கப்பூருக்கு வருகிறான். இவனுடைய தற்காலிகத் தங்கல் வாழ்க்கை, உண்மை விவரங்களுடன் யதார்த்தமாகக் கதையில் சித்தரிக்கப்படுகிறது.

தமிழ் மாநிலத்தில் தன் மனைவி பொன்னுத்தாயின் தாலிக்கொடியைத் தவிர, அவளுடைய மற்ற நகைகளை எல்லாம் விற்றும், வயிற்றுக்குச் சாப்பாடு போடும் விவசாயநிலத்தை ஒத்திக்கு வைத்தும், பயண ஏஜண்டுக்குப் பணம் கொடுத்து விட்டு, இங்கு கட்டுமான தொடர்பான ஒரு வெல்டிங் மிஷின் வேலையில் சொற்ப சம்பளத்துக்கு உழைக்கிறான் பாவாடை.

தன் சக தொழிலாளிகளோடு, ஒரு கன்டெய்னர் குடியிருப்புக் கொட்டகையில் தங்கிக்கொண்டு, சொந்தமாகவே சமைத்து, துணிகளைத் துவைத்து ர•பியா கயிற்றில் காயவைத்து, சிக்கனமாய் இருந்து, ஒரு வருடத்தில் ஏஜண்டுக்காக வாங்கப்பட்ட ஊர்க்கடன் காசை அடைத்துவிட்டு, ஒத்திக்கு வைத்திருந்த சாப்பாட்டு நிலத்தை மீட்பதற்கு, இங்கே அவ்வப்போது கிடைக்கும் ஓவர்டைம் வேலையையும் செய்கிறான் பாவாடை.

ஞாயிற்றுக்கிழமைகளில் தேக்கா திடலுக்குச் சென்று, அங்கே குழுமியிருக்கும் தன் ஊர்க்கார நண்பர்களைச் சந்தித்துப் பேசியும், ராத்திரி ஒன்பதரை மணிக்குப் பொதுவிலே வைக்கப்பட்டுள்ள சன் டி.வி.யில் ஊர்ச் செய்திகளை செவிமடுத்தும், கையில் காசு இருந்தால், கைத்தொலைபேசியில் மனைவி பொன்னுத்தாயிடமும் மகன் வீரமுத்துவிடமும் பேசிக் காலத்தை நகர்த்துகிறான் பாவாடை.

ஓர் அடித்தள இந்தியத் தமிழ்த் தொழிலாளியின் ஒற்றை வாழ்க்கையை, பாவாடை மூலம் மிகவும் இயல்பாக, அளவான விவரண நுணுக்கங்களுடன் செதுக்கியுள்ளார் கமலாதேவி அரவிந்தன்.


'இருவகை மனங்கள்' என்ற பிரிவில், கதை ஆசிரியையின் கதாப்பாத்திரங்களை அணுகுவோம். இவர் தம் கதைமாந்தர்களை இருவகை மனங்கள் கொண்டவர்களாகச் சிருஷ்டித்து, நேர் நேர் குணங்களை உடைய அவர்களுக்கு இடையே, முரண் போக்கை வளர்த்து, கதைப்பின்னலை முடைகிறார். இதற்கு 'நயம்பட உரை' என்ற கதையை, ஓர் எடுத்துக்காட்டாகப் பகரலாம்.

**

சிங்கப்பூரில் நடைபெறும் ஒரு மலையாள எழுத்தாளர் மாநாட்டில், எழுத்துலகில் இருவேறு போக்குகளைக் கையாளும் இரண்டு இலக்கிய ஆளுமைகள் சந்தித்து உரையாடி, ஒருவருக்கு ஒருவர் தத்தம் மனங்களில் கருத்துப் பிம்பங்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.

உள்ளூர் எழுத்தாளர் கிருஷ்ணன் குட்டி, தம் ஜீவியத்துக்கு ஓர் உத்தியோகத்தைப் பார்த்துக்கொண்டு, தம் ஆத்ம தாகத்திற்காகச் சமூகக் கதைகள், நாடகங்கள் முதலியவற்றைக் கனிந்து குழைந்த மனத்துடன், யதார்த்தப் பொறுப்புடன் எழுதிக்கொண்டு, அதை ஒரு வேள்வியாக நடத்திவருகின்றார்.

ஜெயதேவ் கேரள மாநிலத்தில் ஒரு முழுநேரச்சினிமாக் கதாசிரியர், இயக்குனர். நாடகத் துறையிலிருந்து சினிமா உலகிற்கு வந்தவர்.அவருடைய அண்மைப்படமான 'சினிமா ஸ்பெஷல்', அறிவு ஜீவிகளுக்காக எடுக்கப்பட்டு, சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறது. ஜெயதேவும் ஏற்பாட்டுக் குழுவினரால் அழைக்கப்பட்டு, சிங்கப்பூர் மாநாட்டுக்கு வந்திருக்கிறார்.அவர் தம் கட்டுரையை விஷயபூர்வமாகப் படிக்கிறார்;தம் பட்டறையைச் செவ்வனே நடத்துகிறார். ஆனால், 'நான்,நான்' என்ற அவருடைய மமதைத்தனம் பலரை வருத்தமடையச் செய்கிறது.

மாநாட்டில் இடையிடையே கிடைக்கும், ஓய்வு நேரங்களில், கிருஷ்ணன்குட்டியும், ஜெயதேவும் சிங்கப்பூரின் நான்குமொழி இலக்கியம், பின்நவீனத்துவ இலக்கியம் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். மாநாட்டின் இறுதி நாளன்று, '' இந்தியாவுக்கு வந்தால், நீங்கள் அவசியம் என் இல்லம் வரவேண்டும்'', என்று ஜெயதேவ் அழைப்பு விடுக்கும்போது, திமிரும் அகந்தையும் வடிந்து, சக படைப்பாளிகளிடம் நயம்பட பேசி, அடக்கத்தையும் ஒரு சமூக ஆபரணமாய் அணிந்து கொண்டாரேயானால், ஜெயதேவ் தம் இலக்கிய அறிவோடு, எவ்வளவு உயர்ந்த மனிதராய் விளங்கமுடியும் என்று தம் மனத்துக்குள் ஆதங்கமாக எண்ணிப்பார்க்கிறார் கிருஷ்ணன்குட்டி.


'அனுபவங்களே கதைகளாக', 'யதார்த்தக் கதைகள்', 'இருவகைமனங்கள்', என்னும் அங்கங்களில் கமலாதேவி அரவிந்தனின் சிறுகதைகளை நாம் பார்வையிடுகையில், அவர் தம் சொந்த அனுபவம், கேள்விஞான அனுபவம், கள ஆய்வு அனுபவம் மூலம் கதைகளைப் படைக்கக்கூடியவர் என்பதும், காரண காரியத் தொடர்ச்சியில் யதார்த்தச் சமூகக் கதைகளை வடிக்கக்கூடியவர் என்பதும், படைப்பின் முரண் அணிக்காக இருவகை மனங்களை உடைய பாத்திரங்களை உருவாக்கக்கூடியவர் என்பதும் நமக்குப் புலனாகின்றன.


நன்றி
http://thangameen.com

No comments:

Post a Comment