Thursday, May 26, 2011

'நுவல்' நூல் அறிமுக நிகழ்வு!



பிரபல சிங்கப்பூர் எழுத்தாளர் திருமதி.கமலாதேவி அரவிந்தனின் 'நுவல்' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலின் அறிமுகம் 27 மார்ச் 2011, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30க்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

நூலாசிரியர் கமலாதேவியின் மகள் விரிவுரையாளர் அனிதாதேவி, வரவேற்புரையாற்றினார். தனது அன்னையைப் பற்றிய பாசம் நிறைந்து வழிந்த உணர்ச்சிமிகு பேச்சாக அது அமைந்தது. பலமுறை முயற்சித்தும், கமலாதேவியின் சிறுகதைகளை நூலாக்க முடியாத நிலை பற்றிக் குறிப்பிட்டார். வீடெங்கும் நிறைந்து வழிந்த புத்தகங்களும், அதனுள் புதைந்து கிடந்த கமலாதேவியும் அந்தப் பேச்சினிடையே காணக் கிடைத்தார்கள்.

திரு.அருண் மகிழ்நன் தமது நூல் நிகழ்வு அறிமுகவுரையில், திருமதி. கமலாதேவியின் எழுத்துக்கு வாசகனாக இருந்து, ரசிகனாக மாறியதாகச் சொல்லிப் பேச்சைத் துவங்கினார். 'பெண் எழுத்தாளர் என்ற அடைமொழி 21-ம் நூற்றாண்டிலும் தேவையா' என்ற கேள்வியை எழுப்பினார். மலையாளப் பெண் எழுத்தாளர் என்ற அடையாளம் கமலாதேவிக்கு ஏற்படுத்தி உள்ள தமிழ் அடையாளச் சிக்கல்கள் பற்றியும் குறிப்பிட்டார். '1. பெண் எழுத்தாளர் 2.பெண்ணிய எழுத்தாளர் 3.மலையாள, தமிழ் எழுத்தாளர் என்ற மூன்று அடையாளங்கள் கமலாதேவிக்கு இருந்தாலும், அதற்கும் அப்பால் அவர் ஒரு 'கதை சொல்லி' என்ற அடையாளமே எனக்குப் பிடிக்கிறது. மலையாளம்-தமிழ் இரண்டுக்கும் ஒரு பாலமாக இருப்பவர் கமலாதேவி' என்ற அவரது விமர்சனம் கமலாதேவி என்ற படைப்பாளியை முழுமையாகப் படம் பிடித்துக் காட்டியது.

தனது தமிழாசிரியரின் நினைவாக, அவரது மகனும், மூத்த தமிழாசிரியருமாகிய திரு.மு.தங்கராசனிடம் முதல் நூலை வழங்கி, ஆசி பெற்றார் கமலாதேவி. 'அருண் ஏட்டன்' என்று அன்பாக அழைத்து திரு.அருண் மகிழ்நனிடம் அடுத்த நூலை வழங்கினார்.

புதிய முகம் திரு.சேதுராஜனின் நூலாய்வு நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தது.

'4 வருடங்களாகக் கமலாதேவியின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும், கடந்த 1 வருடமாகத்தான் அவரை நான் அறிவேன். இதுதான் நகர வாழ்க்கையின் அவலம்' என்ற துவக்கமே கவனம் ஈர்த்தது. 'சிங்கப்பூர் என்ற தீவு நகரமயமாதலின் அவலங்களை, சோகங்களை, அதன் வீச்சுகளை எடுத்து இயம்புகின்ற கமலாதேவியின் கதைகள். எல்லாக்கதைகளையும் படித்து முடித்தபிறகு எஞ்சி நிற்பது, தனிமை மட்டும்தான். 'ஏதோ ஒன்று என் வாழ்க்கையில் குறைகிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை' என்று குறிப்பிடும் இவரது கதையின் கதாபாத்திரம் போலவே நமது வாழ்க்கை இருக்கிறது. சமூகத்தின் தீட்டாகக் கருதப்படுகின்ற விளிம்புநிலை மனிதர்களைக் கமலாதேவி இலக்கியத்தின் நடு மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறார். யாரும் தொட எத்தனிக்காத கருக்களைத் தொட்டுக் கதைகளைப் படைத்து இருக்கிறார். தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் பாண்டித்தியம் இல்லாமல் அல்லாடும் வாழ்க்கைச் சூழல் சிங்கப்பூரில் இருக்கிறது. சடங்குகளின் தொகுப்பாக நம் வாழ்க்கை நகர்கிறது. அது உடைபடும்போது முடங்கிப் போகிறோம். அதைத்தான் 'நுவல்' என்ற கதையில் காட்டுகிறார் கமலாதேவி. மொழியில் நமக்குள்ள பரிட்சயம் குறைந்து கொண்டு வருகிறது. மொழி செத்துக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். மொழி செத்து விட்டாலும்கூட, மனித மனதில் உள்ள அன்பு மட்டும் குறையாது. அதுதான் கடைசியில் மனிதத்தைக் காப்பாற்றும் என்ற கருத்தை வலியுறுத்துபவைதான் கமலாதேவியின் கதைகள்' என்ற தனது நுட்பமான பார்வையை அவையில் வைத்தார் திரு.சேதுராஜன். அது கமலாதேவி அரவிந்தனின் கதைகளைப் பற்றிய விரிவான பிம்பத்தை வாசகனின் மனதில் பதிய வைப்பதற்கான கதவுகளைத் திறந்து விட்டது. முழுமையான பிம்பங்கள் முழுமையான வாசிப்பின் பின் மட்டுமே உருக்கொள்வது சாத்தியம் என்று புரிந்து கொண்டார்கள் வாசகர்கள்.

திரு வரதராஜனால் வாசிக்கப்பட்ட டாக்டர் சுப.திண்ணப்பனின் வாழ்த்துரையில் அவர், 'நுவல், உற்றுழி போன்ற பழந்தமிழ் வார்த்தைகளைக் கதைகளின் தலைப்பாக வைத்துள்ள கமலாதேவியைப் பாராட்டுகிறேன். ' என்று குறிப்பிட்டிருந்தார். 'நுவல்' என்ற சொல்லைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்கள் என்ன சொல்கின்ற என்ற விவரமும் அந்த உரையில் இருந்தது. 'நுவல்' சிறுகதைத் தொகுப்பில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான உத்திகள் பற்றியும், பன்முகத் தன்மை கொண்ட கமலாதேவி என்ற ஆளுமையைப் பற்றியும் அந்த உரையில் பாராட்டுகள் நிரம்பி வழிந்தன.

திரு. அருண் மகிழ்நனால் வாசிக்கப்பட்ட, டாக்டர் சித்ரா சங்கரனின் ஆங்கில உரையில், 'நம்மிடையே வாழ்பவர்களின் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வாழ்க்கையைச் சொல்பவை கமலாதேவி அரவிந்தனின் கதைகள். கட்டமைக்கப்பட்ட மரபுகளை உடைப்பதில் இவர் காட்டும் ஆர்வம், அழகான, செறிவான கதைகளை நமக்குத் தந்திருக்கிறது. முன்முடிவு செய்யப்பட்ட தீர்மானங்களோடு இவர் தனது கதைகளை அணுகுவதில்லை.' என்று குறுகத் தரித்த அரிய பார்வையைப் பகிர்ந்திருந்தார்.

திரு.ஆண்டியப்பன், திரு.இராம.கண்ணபிரான், டாக்டர் சபா.இராஜேந்திரன், திரு.பொன்சுந்தரராசு, திரு.வி,ஆர்.பி.மாணிக்கம் ஆகியோர் நூலைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ' பசியோடு இருக்கும் நான் உணவுக்கடைக்குச் செல்கிறேன். ஒரு கடையில் வரவேற்புக்கு இரண்டு குண்டான ஆண்கள் நிற்கிறார்கள். இன்னொரு கடையில் இரண்டு அழகான பெண்கள் நிற்கிறார்கள். நான் எந்தக் கடைக்குச் செல்வேன்?' என்ற கேள்வி எழுப்பி, உள்புக முடியாதபடி சிரமமான தலைப்புகளை வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று கேட்டு, நிகழ்ச்சிக்குச் சுவாரஸ்யம் சேர்த்தார்.

ஏற்புரையாற்றிய திருமதி.கமலாதேவி அரவிந்தன் தான் அந்தத் தலைப்புகளுக்காக ஆறு மாதங்கள் கூட அலைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். 'காதலால் தமிழ் கற்றேன். எனது தமிழ்த் தாகத்தின் வெளிப்பாடுகளே எனது கதைகள்' என்று குறிப்பிட்டதே நிகழ்ச்சியின் முத்தாய்ப்பான வரிகளென்று உணர்ந்தார்கள் வாசகர்கள். ஒரு நல்ல தமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட மகிழ்ச்சி அவர்களிடம் தென்பட்டது.

நன்றி, தங்கமீன்

கோ.புண்ணியவான் said...
வாழ்த்துகள் கமலாதேவி. நூவலைப்போல் இன்னும் 100 நூல்கள் கொண்டு வாருங்கள்.
கமலாதேவிஅரவிந்தன் said...
நன்றி புண்ணியவான் சார், அடுத்தமாதம் கோலாலம்பூரில் ஒரு முக்கிய நிகழ்வுக்கு வருகிறேன்.அங்கு நிங்ஙளை சந்திப்பேன் என்று நினைக்கிறேன்.பேசுவோம். கமலம்
க.ராஜம் ரஞ்சனி said...
வாழ்த்துகள் அம்மா.
கமலாதேவி அரவிந்தன் said...
கண்மணி ரஞ்சினி, அழைப்பனுப்ப நேரமில்லாமல் போய்விட்டது.விரைவில் எழுதுகிறேன் அம்மா
இதயா said...
வாழ்த்துக்கள் அம்மா..இன்னும் பல நூறு நூல்கள் நீங்கள் எழுத வேண்டும்!
பவள சங்கரி. said...
அன்புத் தோழி, கமலம். வாழ்த்துக்கள். நுவல் சிறுகதைத் தொகுப்பு மிக நன்றாக வந்திருப்பது மற்ற அன்பர்களின் பாராட்டுக்கள் மூலமாக அறிய முடிகிறது தோழி. படிக்க வேண்டும் என்ற ஆவலும் எழுகிறது. இங்கு கிடைக்கிறதா பார்க்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி. இன்னும் இது போன்று பல நூல்கள் வெளிவர வாழ்த்துக்கள்.நன்றி.

நன்றி, தங்கமீன்

1 comment:

  1. நான் எழுதிய நிகழ்ச்சித் தொகுப்பை இன்றுதான் மறுபடியும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதோ அடுத்த நூலும் தயாராகி விட்டது. வெற்றிபெற வாழ்த்துகள்!

    ReplyDelete