Thursday, September 16, 2010

எம் பேர் மாச்சாப்பு

துப்பட்டாவைக் கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, வேகவேகமாய் நடந்தவளை ,"ஹலோ! அண்டி! நல்லாயிருக்கீங்களா ?"என்று பின்னாலிருந்து வந்த குரல் தடுத்து நிறுத்தியது. நீலக்கலர் டீ ஷர்ட்டும், முக்கால் பெமுடாவுமாய், கையில் கோக்,முகமெல்லாம் புன்னகையாய், ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.மிஞ்சி மிஞ்சிப்போனால் 23 அல்லது 25 வயதிருக்கலாம்.திகைத்துப்போய் நிற்க, "வாங்க அண்டி, இப்படி உட்கார்ந்து பேசலாம் "என்று எதிரே நின்ற இளைஞன் அழைத்தான்.,

"நான் பெண்கள் வார்டுக்குப் போயிட்டிருக்கேன்.ஏற்கனவே நேரமாயிடிச்சு, சீக்கிரம் போயிட்டு வந்திடறேன், பிறகு உட்கார்ந்து பேசலாம் தம்பி "அட, பொம்பளையாளு வார்டுக்குப் போறீங்களா? சரி, போயிட்டு வாங்க! நான் உங்களுக்காக, இங்கேயே 'துங்கு' பண்றேன்" என்று உடனே அருகிலிருந்த மேஜையோடிணைந்த கல்நாற்காலியில் டக்கென்று உட்கார்ந்து கொண்டான்.விடுவிடுவென்று நடந்தபோது, மீண்டும் அதே குரல் இடை மறித்தது."அண்டி, பொம்பளையாளு வார்டிலே யாரு தங்கியிருக்கா? உங்க சொந்தக்காரவுங்களா?" துணுக்குற்று, ஒருகணம் ஸ்தம்பித்துப்போய் நின்றேன். சொந்தமா? தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்த, கையிலிருந்த உணவுப்பொட்டலங்கள், பழ, பிஸ்கட், முறுக்குப்பொட்டலங்களைப் பார்த்தபோது, ஏனோ சிரிப்பு வந்தது."எனக்கு எல்லோருமே சொந்தம் தான், ஏன் நீ கூட எனக்கு சொந்தம் தான் தம்பி, "என்று சொல்லிக்கொண்டே மேலே நடந்தேன்.


ஹ்ம்ம், ? மனநல மருத்துவமனைக்கு வந்தால், இப்படியெல்லாம் கேள்விகள் வருவது சகஜம்தானே? கடந்த சில வருடங்களாக எத்தனை ,எத்தனை அனுபவக்கீறல்கள்? அகவலிகள்,.? எதை எழுத? எதைவிட?

முதன்முதலாக பார்க்க வரும்போது கணவர் உடன் வந்திருந்தார். ஆனால் மருத்துவமனைக்குள் நுழைய , அனுமதி வாங்க பட்டபாடு.குறும்படம் ஒன்றுக்கான கதைவடிவத்துக்கு, என்னை நன்கறிந்த தயாரிப்புக்குழு ஒன்று,தேடி வந்தபோது, மனதில் உதித்த கதை ,மனம் பிறழிய பெண்ணின் கட்டுடைப்பு பற்றிய ஆய்வே. ஆனால் இத்தகு கதை மாந்தர்களை வெறுமே கற்பனையில் வடித்திடல் என்பது என்ன அவ்வளவு சுலபமா? தயாரிப்பாளர் குழுவே பகீரதப்பிரயத்தனம் செய்து,எப்படியோ அனுமதி வாங்கிவிட்டாலும், உடனே போய் விட மனசு ஒப்பவில்லை. .ஆனால் நேரில் போய்ப்பார்த்து, உள்வாங்காமல்,எப்படித் தான் எழுதுவது?கணவருடன் சென்ற முதல்நாளைய அனுபவம்-----

பிருஷ்டத்தைச் சொறிந்து கொண்டும், குறுகுறுவென்று இவளையே பார்த்துக்கொண்டும்,, திடீரென்று எதிரில் வந்து நின்றுகொண்டு,"யாரைப்பார்க்க வந்தே?" ,என்று முறைத்துக்கொண்டும்,--முதன்முதலாய் இவர்களைச் சந்திக்க வந்தபோது வெலவெலத்துப்போய் நின்றதுதான் உண்மை. ஆனால் விடாத சந்திப்பால் தாதிகளும், பணியாளர்களும், "ஹலோ பெனுலிஸ்" என்று ஸ்நேகபாவத்தோடு,நட்பாகிப் போனபின்னர்,பயம் போய்விட்டது.இப்போதெல்லாம் தனியாகவே சிங்கப்பூரிலிருந்து வந்து இவர்களைச் சந்திக்கும் துணிச்சல் வந்துவிட்டது.மற்றவர்களுக்குத்தான் இவர்கள் பேஷண்டுகள், ஆனால் எனக்கு மட்டும் இவர்கள் லக்‌ஷ்மிகள்தான். சீன லக்‌ஷ்மிக்கு இறைச்சி வைத்த "பவ்" மிகவும் பிடிக்கும்.மலாய் லக்‌ஷ்மிகளுக்கு "நாசி லெமாக்" போதும்.இந்திய லக்‌ஷ்மிகளுக்கு, "ரொட்டிசனாயை[பரோட்டா ரொட்டியை]விட வேறென்னக்கா வேண்டும்?" என்று பேதையாய்க் கேட்கும்போது, நெஞ்சை அள்ளிப்பிடுங்கும்!வாழ்வாதாரம் என்பதே இனி அவர்களுக்கு இனி வாய்க்கு ருசியாய், ஏதாவது கிட்டினால், போதாதா? என்பதாகத்தானிருக்கிறது, ஆனால் இவர்களின் முறையீடோ,---?

"இத்தனைக்கும் இங்கே ஒரு கொறையுமில்லக்கா! தினமும் கோழியும், மீனும், சைவருமாய்[காய்கறிகள்], எங்களை நல்லாதான் கவனிச்சுக்கறாங்க, ஆனால் இது போதுமாக்கா? எங்க வீட்டுலேருந்து ஒரு நாய் கூட எட்டிப் பார்க்கறதில்லே?"

" என் புருஷன் என்கண்ணு முன்னாலேயே பக்கத்துவீட்டு வேலு அண்ணன் பொண்டாட்டியோடு -----அக்கா, அக்கா, அதைக் கேட்டதுக்காக அடிச்சு அடிச்சே , என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிட்டாங்கா?"

'‘எல்.சி.இ.படிச்சுக்கிட்டடிருக்கும்போது,எங்க சித்தப்பாதாங்கா, சத்தியமா, எங்க சொந்த சித்தப்பாதாங்கா, என்னை நாசம் பண்ணினான்.ஆனா, நான் கர்ப்பமாயிட்டேன்னு தெரிஞ்சதும் , ஸ்கூல்லதான் எவன்கிட்டயோ கெட்டுப்போயிட்டேன்னு, எங்கம்மாகிட்டேசொல்லி, அப்படி அடி வாங்கி வச்சாங்கா! பூச்சி மருந்தைக் குடிக்க வைச்சு, வலியால் துடிச்சு துடிச்சு , ஆஸ்பத்திரியில செத்துப்பொளச்சேங்கா! கர்ப்பம் கலைஞ்சு போச்சு, ஆனா, நான் எப்படி இங்கே வந்தேன்னுதான் தெரியலை?"

" I am not interested in sharing my stories to anybody'! என்று முகத்திலடித்தாற்போல் , பேசிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ளும் லக்‌ஷ்மி மெத்தப்படித்தவள். ஆங்கிலம் அப்படிப் பிளந்து கட்டுபவள்.ஆனால் டிஸ்கோ செயினைக் கழுத்தில் போட்டுவிட்டு, முறுக்கு பேக்கட்டைப் கையில் கொடுத்தபோது,நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் மெலிதாக தயக்கம்.முகத்தில் அரிசிக்கீற்றாய்ப் புன்னகை.அப்படியே தோளில் கையிட்டு அணைத்துக்கொண்டபோது, ஏனோ அந்த லக்‌ஷ்மி விம்மினாள். "மேலே படிக்கலாமே அம்மா. அல்லது ஏதாவது வேலைக்காவது போகலாமே? ''என்று பரிவோடு கேட்டபோது,படித்த லக்‌ஷ்மி விரக்தியாகச் சொன்ன பதில். "வேலக்குப்போனாலும், எங்க முகத்தில் ஒட்டியிருக்கற முத்திரையை, முதுகுக்குப் பின்னாலே சொல்லி சிரிக்கறவங்க தானே அங்கேயும் இருக்கறாங்க? எவ்வளவு திறமையா பாடுபட்டு வேலை செஞ்சாலும் , ‘டியா கீலாலா'! ங்கற கேலியும் நையாண்டியிலிருந்தும் தப்ப முடியுதா? அப்படியாவது அவமானப்பட்டு,வெளியில புழுவா வாழறதைவிட, இங்கேயே கெளரவமா இருந்திட்டுப்போகலாம்னு தோணிடிச்சி, நானே வந்திட்டேன்." இந்த லக்‌ஷ்மிக்கும் சொந்த பந்தங்கள் உண்டு.ஆனால் அம்மா மட்டுமே மாதமொருமுறை வந்து பார்த்து விட்டுப் போகிறார். ஒரே ஒருமுறை அண்ணன்காரன்,"வேணும்னா இடையிலே, ஒரு ரெண்டுநாள் நீ வீட்டுக்கு வந்திட்டுப்போகலாம்!"என்று வேண்டா வெறுப்பாக அழைக்க, "பரவாயில்லே, இங்கேயே இருந்துக்கறேன்" என்று சொன்னபிறகு அந்த அண்ணனை இந்த லக்‌ஷ்மி பார்க்கவேயில்லை.

இப்படி எத்தனை எத்தனை கதைகள்.ஒவ்வொரு லக்‌ஷ்மிக்கும் ஒவ்வொரு துயர இழை சரித்திரம் உண்டு.ஆரம்பத்தில் கொஞ்சம் பிறழினாற்போல் இருக்கும்போதே கொண்டு விட்டுவிட்டு, ஆறுமாதம் அல்லது ஒருவருட சிகிச்சைக்குப்பிறகு, நலமாகிப்போகும் பெண்களுமுண்டு.ஆனா "போன மச்சான் திரும்பிவந்தான் பூ மணத்தோடே", என்ற வக்கணையில் திரும்பி வருபவர்களுத்தான் ஆறாத்துயரம். சொல்லும்போதே அழுகிறார்கள்.

எதைச்செய்தாலும் எதைச்சொன்னாலும், "என்ன கீலா ஆஸ்பத்திரின்னு நினைச்சுக்கிட்டியா? "ன்னு எள்ளல், வீட்டில் ஒரு விசேஷம் என்றால், "இவர்களை எங்கே கொண்டு ஒளித்து வைப்பது" அல்லது வந்தவர்கள் திரும்பிப்போகும் வரையாவது,உன் திருவாயை மூடிக்கிட்டு பேசாம இருப்பியா? " ன்னு, எரிச்சலான கட்டளை.

"இவ இங்கே இருக்கறவரை, நான் உங்கூட படுத்துக்கவே மாட்டேன், ராத்திரியெல்லாம் தூங்கவே மாட்டேங்கறா! விடிய விடிய அப்படி நடக்கறா? எப்ப இந்த சனியனைக் கொண்டுபோயி கீலா ஆஸ்பத்திரியில விடுறியோ, அன்னைக்குத்தான் நான் திரும்பிவருவேன்"னு கோவிச்சுட்டுப்போன அண்ணி; "அக்கா, எங்களுக்கு இப்பவும் ஆசைதான்கா, ஒரு பத்துநாளாவது வீட்டோடு போயி சந்தோஷமா இருந்துட்டு வர மாட்டோமான்னுதான் இருக்குது. ஆனா எங்களத்தான் யாருக்குமே வேண்டாமே?

"எல்லாம் சரி, இன்னைக்கு எங்களுக்கு என்னக்கா கொண்டுவந்தே?'"கொண்டுபோன உணவுப்பொருட்கள், பழங்கள், பிஸ்கட், பொட்டலங்கள், என , லக்‌ஷ்மிகளுக்கு விநியோகித்துக் கொண்டிருக்கும்போது,தான் திடீரென்று வழியில் கண்ட இளைஞனின் ஞாபகம் வந்தது. "அடடா! எப்படி மறந்துபோனோம்? மிக்ஸர் பொட்டலமும்,பழங்களுமாக அவசர அவசரமாக நடைவழிக்கு வந்தபோது அந்த இளஞனைக் காணவில்லை.ஒருவேளை வார்டுக்கே திரும்பிப் போய்விட்டானோ? ஆண்கள் வார்டுக்குப்போக அனுமதியில்லையே? கவலையோடே செக்யூரிட்டியிடம் கையொப்பமிட்டு, வீடுதிரும்பும் வழியில் நடந்தபோது, கேண்டீன் முன்னால் உள்ள நீளபெஞ்சில், படுத்துக் கொண்டிருந்த ஒரு உருவம் பாடிக்கொண்டிருந்தது. "ஒரு பொய்யாவது சொல் கண்ணே! உன் காதலன் நாந்தானென்று, அந்தப்பொய்யில் உயிர் வாழ்வேன்!-- உடனே அடுத்தபாடல், "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ? அன்பே என் அன்பே?!"

"அட, நம்ம அண்டி?!எவ்வளவு நேரமா நான் காத்திருந்தேன் தெரியுமா? ஸ்டாஃப் நர்ஸ் வந்து திட்டினப்புறம்தான் இங்கே வந்து படுத்துக் கிடக்கறேன்,
என்ன நல்லா காத்து வீசுது பாத்தீங்களா? வாங்க அண்டி, இங்கே வந்து உட்காருங்களேன்? "அதே இளைஞன் தான்.

"இந்தா தம்பி, சாப்பிடு,"என்று மிக்ஸர் பொட்டலமும்,பழங்களும் கொடுத்தபோது, "இருக்கட்டும், எங்கே போயிடப்போறேன். மெதுவா சாப்பிட்டுக்கலாம்'" என்றவாறே நிமிர்ந்தபோது குழந்தை போலிருந்தான்..

முகமெல்லாம் அப்படி ஒரு மலர்ச்சி, சிரிப்பு, வெட்கம்.ஆனால் ஆனால், கண்கள் மட்டும் நிலைகுலைந்து எங்கோ பார்த்தபடி அலைபாய்ந்து கொண்டிருந்தது. ரொம்ப நல்லாப்பாடறே தம்பி, " என்று பாராட்டியபோது பளிச்சென்று ,உற்சாகமானான்.

"பூ, இது என்ன பாட்டு, இன்னும் கூட நல்லா பாடுவேன், ஆனால் என் செல்விக்கு என்னைப் பிடிக்கலையே?நீங்களே சொல்லுங்க நியாயத்தை அண்டி, " என்று அவன் தொடரும்போது ஆண் தாதி வந்து அழைத்தார்.

"வெயிட், ஷீ இஸ் மை அண்டி"என்று அவன் பெருமைப்பட, அப்பொழுதுதான் அவன் பெயரைக் கேட்கத் தோன்றியது.
எம் பேரா? அட, இங்கே வந்த பிறகு,எம்பேரைக் கேட்ட மொத ஆளு நீங்க தான்,? எம்பேர் மாச்சாப்பு அண்டி? என்று வெகுளியாய் அவன் சிரித்தபோது,, அதற்குமேலும் கட்டுப்படுத்தமுடியாமல் கண்கள் நிரம்பி விட்டது. முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் ,என எங்கு சேவை செய்யவும் , உதவவும் ,நிரம்ப பேர் உண்டு. ஆனால் மனநல மருத்துவமனை என்றால் மட்டும் , முகதாட்சண்யத்துக்குக் கூட , நானும் வருகிறேனே, என்று சொல்லக்கூட தயங்குகிறார்கள்.

" அப்பா, எங்களுக்கு பைத்தியங்கள் என்றாலே பயம் கமலா"என்றிடும் தோழிகளைத்தான் பார்க்கமுடிகிறது.சல்லிக்காசு பெறாத நிகழ்ச்சிகளுக்கெல்லாம் விழா எடுத்தல், உப்புப் பெறாத சுய அட்சதைக்கெல்லாம் பணத்தை அள்ளிக்கொடுக்கும் விளம்பரதாரர்களுக்கு யாரேனும், இவர்களைப்பற்றி சொல்வார்களா?

இந்தத் தங்கமகன் மாச்சாப்பு, இவன்போன்று இங்குள்ள அத்தனை லக்‌ஷ்மிகளும் , ஆண்பேதைகளும் விரைவில் நலம் பெறவேண்டுமே, என்றல்லால் இறைவனிடம் நான் வேறென்ன கேட்க?http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3039

http://www.vallamai.com/?p=547

5 comments:

 1. அன்புள்ள சகோதரிக்கு

  நமஸ்தே

  மனம் பின்னோக்கி அசை போட்டது. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் சென்னையில் முதியோர் இல்லம் தொடங்கப்பட்டபோது ஞாயிறு காலை தவறாது அவர்களை சென்று பார்ப்பது எனது வழக்கம்

  சொந்த பந்தங்களை விட என்னை எதிர் பார்த்த அவர்கள் உள்ளக்குமுறல்களை பகிர்ந்து கொள்வேன்

  எனக்கு படிப்பு செலவிற்காக வரும் பணத்தில் இருந்து உங்களைபோல தின் பண்டங்களை அள்ளி செல்வேன் அதை அவர்கள் ஏற்றுகொள்ளும் பங்கும் அவர்களின் ஏக்கத்திற்கு வடிகாலாக நான் அங்கு சென்று வந்ததும் நினைவில் வந்தன

  இறைவன் தங்களுக்கு நல்ல மனதை கொடுத்தமைக்காக நான் அவனுக்கு நந்தி சொல்கின்றேன்

  ர ராதாகிருஷ்ணன்

  ReplyDelete
 2. அப்பா, எங்களுக்கு பைத்தியங்கள் என்றாலே பயம் கமலா"என்றிடும் தோழிகளைத்தான் பார்க்கமுடிகிறது.சல்லிக்காசு பெறாத நிகழ்ச்சிகளுக்கெல்லாம் விழா எடுத்தல், உப்புப் பெறாத சுய அட்சதைக்கெல்லாம் பணத்தை அள்ளிக்கொடுக்கும் விளம்பரதாரர்களுக்கு யாரேனும், இவர்களைப்பற்றி சொல்வார்களா?

  //////

  mmmm

  ReplyDelete
 3. அன்பின் ரா.கி. சார்,
  மனம் நிறைந்த நன்றி.இன்றைய என் டெ பதிவைப்படியுங்கள்,
  நுகத்தடி, இக்கதை படித்த ஒரு தொண்டூழிய நிறுவனம் ,அந்த பெண்களுக்கு
  உதவ முன்வந்துள்ளார்கள்,
  எல்லாம் நிங்ஙளைப்போன்றோரின் வாழ்த்தே,
  அன்பு கமலம்

  ReplyDelete
 4. அன்புள்ள சகோதரிக்கு

  நமஸ்தே

  மனம் பின்னோக்கி அசை போட்டது. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் சென்னையில் முதியோர் இல்லம் தொடங்கப்பட்டபோது ஞாயிறு காலை தவறாது அவர்களை சென்று பார்ப்பது எனது வழக்கம்

  சொந்த பந்தங்களை விட என்னை எதிர் பார்த்த அவர்கள் உள்ளக்குமுறல்களை பகிர்ந்து கொள்வேன்

  எனக்கு படிப்பு செலவிற்காக வரும் பணத்தில் இருந்து உங்களைபோல தின் பண்டங்களை அள்ளி செல்வேன் அதை அவர்கள் ஏற்றுகொள்ளும் பங்கும் அவர்களின் ஏக்கத்திற்கு வடிகாலாக நான் அங்கு சென்று வந்ததும் நினைவில் வந்தன

  இறைவன் தங்களுக்கு நல்ல மனதை கொடுத்தமைக்காக நான் அவனுக்கு நந்தி சொல்கின்றேன்

  ர ராதாகிருஷ்ணன்

  ReplyDelete
 5. Dear Sister,

  your blog with the story of " machappu"

  really interesting . " i dont know whether you wrote with imagination or personal vist "

  Whatever may be, after reading this blog , really eyes are rolling with tears.

  As you mentioned. for orphanage, or oldage, more people to donate, ( all people are sharing their ill gotten money to donation to Get 80 G excemption...

  my sincere thanks to your efforts.

  vazhga Valamudan.

  Ravichandran

  Saudi Arabia

  ReplyDelete